Published : 04 Nov 2020 06:55 PM
Last Updated : 04 Nov 2020 06:55 PM

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை மேற்கோள் காட்டினார்கள்: சரத்குமாரருக்கு சோனு சூட் பதில்

தனது முதல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்காக 'கேப்டன் பிரபகாரன்' திரைப்படத்தைப் போட்டுக் காட்டினார்கள் என நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். சமீபத்தில் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

மேலும், சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட்டின் நல உதவிகளைப் பாராட்டி சக நட்சத்திரங்கள் பலர் அவரைப் பாராட்டி வருகின்றனர். அப்படி நடிகர் சரத்குமார் சமீபத்தில், "காலையில் 5.30 மணிக்கு ஜிம்முக்குச் செல்வதற்கு எதுவும் ஈடாகாது. நீண்ட நாட்களுக்குப் பின் என் அருமை நண்பரைச் சந்தித்தேன். கோவிட் நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் செய்த உதவிகளையும், அவரது முயற்சிகளையும் பாராட்டினேன். வாழ்த்துகள் நண்பரே" என்று சோனு சூட்டைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பாராட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் சோனு சூட், "தமிழ் சினிமாவில் என் நண்பர் விஜயகாந்துடன் நடிகனாக நான் ஆரம்பித்த பயணம் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அவரும் நீங்களும் நடித்திருந்த 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை எனக்குப் போட்டுக் காட்டி வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜயகாந்த் மேற்கோள் காட்டினார். என்றும் இறைவனின் ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும். காலை 5.30க்கு உங்களை ஜிம்மில் சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'கள்ளழகர்' திரைப்படத்தில் சோனு சூட் வில்லனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x