Published : 29 Oct 2020 06:15 PM
Last Updated : 29 Oct 2020 06:15 PM
திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஜி.கே.சினிமாஸ் ரூபன் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியபோது பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியதிலிருந்து மத்திய அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதில் திரையரங்குகளை 50% பார்வையாளர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் செயல்படத் தொடங்கின. ஆனால், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க இன்னும் தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு திரையரங்க உரிமையாளர்கள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, திரையரங்குகள் திறப்பு தொடர்பாக வலியுறுத்தினார்கள். ஆனால், இப்போது வரை தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.
150 நாட்களைக் கடந்தும், திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பது தொடர்பாக சென்னையில் உள்ள ஜி.கே. சினிமாஸை நடத்தி வரும் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதம் பின்வருமாறு:
"அன்பார்ந்த திரையரங்குக்கு, எனக்கு 4 வயதாக இருந்த போதுதான் எனது முதல் திரையரங்க அனுபவம். இருண்ட அறை, பெரிய திரை, அறை முழுவதும் அந்நியர்கள், முதலில் பயமாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்தவுடன் அங்கு பொங்கிய உற்சாகம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்றுவரை அது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
மீண்டும் மீண்டும் உன்னிடம் வரவழைக்கும் நேர்மறை சக்தி இன்னும் இருக்கிறது. நீ காட்டிய வாழ்க்கையை விடப் பெரிதான பிம்பம், என்றுமே பெரிதாகக் கனவு காண வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லித் தந்தது. இருட்டில் நீ காட்டிய வண்ணங்கள் எங்களில் பலருக்குள் இருக்கும் சமூக உணர்வைத் தூண்டிவிட்டது.
மக்களிடம் நீ உருவாக்கிய பிணைப்பும் எவ்வளவு வலிமையானது என்றால், திரையில் மக்களுக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்தால், நிஜத்தில் லட்சோபலட்சம் மக்கள் கண்ணீர் சிந்தினார்கள்.
நிஜ வாழ்க்கையில் சிறக்க ஒவ்வொரு தலைமுறைக்கும் நீ ஊக்கம் தருகிறாய். எங்களில் பலருக்குக் கவலையை மறக்க நீ ஒரு சிகிச்சை. நீ பல நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தாய். ஆனால், இப்போது எந்த நட்சத்திரமும் அவர்களின் வெளிச்சத்தை உன் மீது விழவைக்க விரும்பவில்லை என்பது வருத்தமே.
உண்மைக்கும், கற்பனைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய கோடு நீ. இப்போது அந்தக் கோடு மறைவதைப் போலத் தெரிகிறது. ஆனால் என்ன நடந்தாலும் நாங்கள் உன்னை விட மாட்டோம். நாங்கள் ஒரு சிறிய கூட்டம் தான். ஆனால், தாகம் இருக்கும் கூட்டம்.
திரையரங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என அரசாங்கத்தை வேண்டுகிறேன். எங்களில் பலருக்கு இது மட்டுமே ஒரே வாழ்வாதாரம்.
அன்புடன்
ஒரு திரையரங்க உரிமையாளர்
திரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்’’.
இவ்வாறு ரூபன் தெரிவித்துள்ளார்.
#SaveTheatres pic.twitter.com/XyqKhFTgpK
— Ruban Mathivanan (@GKcinemas) October 29, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT