Published : 19 Oct 2020 07:09 PM
Last Updated : 19 Oct 2020 07:09 PM

முதலில் வீரப்பன்; அடுத்தது பிரபாகரன்: இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ் திட்டம்

'வனயுத்தம்' படத்துக்குப் பிறகு மீண்டும் வீரப்பனின் கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ்.

'குப்பி', 'காதலர் குடியிருப்பு' ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஏஎம்ஆர் ரமேஷ் தற்போது 'வீரப்பன் ஹங்கர் ஃபார் கில்லிங்' என்ற படைப்பைப் படமாக்கி வருகிறார். இது 4 பாகங்களாக ஒரு திரைப்படமாகவோ அல்லது வெப் சீரிஸாகவோ வெளியாகும் என்று கூறியுள்ள ஏஎம்ஆர் ரமேஷ், மீண்டும் வீரப்பனின் கதையைப் படமாக்குவது குறித்துப் பேசியுள்ளார்.

" 'வனயுத்தம்' படத்தில் சொல்ல முடியாததை இதில் சொல்லியிருக்கிறேன். அது 2 மணி நேரப் படம். இது 12 மணி நேரப் படைப்பு. கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. வீரப்பனைப் பிடிக்க காவல்துறையினர் எப்படிக் கஷ்டப்பட்டனர், அவர்களின் தியாகம், போராட்டங்கள், நம்பிக்கை ஆகியவற்றை இந்தக் கதை சொல்லும்.

இது முழுக்க முழுக்க நிஜக் கதாபாத்திரங்களின், தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை. 15 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இதை எழுதினேன். என் திரைக்கதைகள் எப்போதுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டு வருபவை. இப்போதைக்கு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடர்த்தியான காடுகளில் குறைந்தபட்ச குழுவினரோடு படப்பிடிப்பு முடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

'வனயுத்தம்' படத்தில் வீரப்பனாக நடித்த கிஷோர்தான் இதிலும் வீரப்பனாக நடிக்கிறார். ஷங்கர் பிதாரி என்கிற காவல்துறை அதிகாரியாக சுனில் ஷெட்டி நடித்துள்ளார். 1993 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டுவரை, 180 பேர் இருந்த வீரப்பனின் கும்பலை வெறும் 8 பேர் என்ற எண்ணிக்கைக்குக் குறைத்தவர் இந்த ஷங்கர். விவேக் ஓபராயை நடிக்க வைக்க முயன்று வருகிறோம்" என்கிறார் ரமேஷ்.

மீண்டும் மீண்டும் வீரப்பன் கதையைச் சொல்வது, உண்மையைச் சொல்வதில் இருக்கும் ஆர்வம்தான் என்று கூறும் ரமேஷ், கன்னட நடிகர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நாகப்பா என்பவரின் நெருங்கிய நண்பர். அடுத்ததாக விடுதலைப் புலிகள் பிரபாகரனைப் பற்றிய கதையை வெப் சீரிஸாக எடுக்க ரமேஷ் திட்டமிட்டுள்ளார்.

"பிரபாகரன் பற்றிய திரைக்கதை எழுத 25 வருடங்கள் ஆனது. இப்போதைக்கு நிறுத்தி வைத்திருக்கிறேன். இது 100 மணி நேரத் திரைப்படமாக இருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை பற்றியும் இதில் இருக்கும்" என்கிறார் ரமேஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x