Published : 18 Oct 2020 05:06 PM
Last Updated : 18 Oct 2020 05:06 PM
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான. நாயகி நடிகையரில் ஒருவரும் பல ஆண்டுகளாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும் அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகா இன்று (அக்டோபர் 18) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கவனிக்கவைத்த தமிழ் அறிமுகம்
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நக்மாவின் தங்கை ஜோதிகா. பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ல் வெளியான 'டோலி சஜா கே ரக்னா' என்னும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக 1999-ல் அஜித்-சிம்ரன் நடிப்பில் வெளியான 'வாலி' படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் கதையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்திருந்தது. அதே ஆண்டு வசந்த் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்த 'பூவெல்லாம் கேட்டுப்பார்' அதே ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் துருதுருப்பான தோற்றமும் நடிப்பும் கவனம் ஈர்த்தன. குறிப்பாக பாடல்களில் அவருடைய அழகான பாவங்கள், வட்ட முகம். க்யூட்டான நடனம் என தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அவரைப் பிடித்துப்போவதற்கான அம்சங்கள் அவரிடம் வெளிப்பட்டன.
நாயகனுக்கு இணையான நாயகி
2000-ம் ஆண்டில் விஜய்யுடன் 'குஷி' படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அதில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு அமைந்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உள்வாங்கி அவரும் சிறப்பாக நடித்திருந்தார். எனவே இந்தப் படம் ஜோதிகாவை ஒரு நாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத் திறமை மிக்கவராகவும் அடையாளப்படுத்தியது. 'குஷி' படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் ஜோதிகா. அதே ஆண்டில் அஜித்துடன் 'முகவரி', கமல் ஹாசனுடன் 'தெனாலி' ஆகிய படங்களும் மிகப் பெரிய வெற்றிபெற்றன. இதே ஆண்டில் ஜோதிகாவை நடிகையாக அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இயக்கத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த 'சிநேகிதியே' என்னும் திரைப்படத்தில் முதன்மைக் கதாநாயகியரில் ஒருவரான ஜோதிகா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
2001-ல் மணி ரத்னம் தயாரிப்பில் அழகம் பெருமாள் இயக்கிய 'டும் டும் டும்' படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. அதில் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். படமும் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது. எழில் இயக்கத்தில் அஜித்துடன் அவர் நடித்த 'பூவெல்லாம் உன்வாசம்' படமும் வெற்றிபெற்றது. இந்தப் படத்திலும் வலுவான கதாநாயகி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஜோதிகா. ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்குநராக அறிமுகமான '12பி' படத்தில் ஜோதிகாவும் அவருடைய சமகாலப் போட்டியாளரான சிம்ரனும் இரண்டு நாயகியராக நடித்திருந்தனர்.
தொடர் வெற்றிகள்
2003-ல் விக்ரமுடன் 'தூள்', சூர்யாவுடன் 'காக்க காக்க', விஜய்யுடன் 'திருமலை' என ஜோதிகா நடித்த மூன்று படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக கெளதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை மாயா கதாபாத்திரம் ஜோதிகா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி கதாபாத்திரங்களில் ஒன்றானது. 'குஷி'க்குப் பிறகு பல வகைகளில் ஜோதிகாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம் 'காக்க காக்க'.
தொடர்ந்து சூர்யாவுடன் 'பேரழகன்' படத்தில் நகரத்து நவீனப் பெண்ணாகவும் பார்வையற்ற கிராமத்துப் பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் முதல்முறையாக நடித்திருந்தார் ஜோதிகா. அந்தப் படமும் வெற்றிபெற்றது. தன்னைவிட வயதில் இளையவரான சிலம்பரசனுடன் அவர் நடித்த 'மன்மதன்' படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
முழுமையான உருமாற்றம்
2005-ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'சந்திரமுகி' படத்தில் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார் ஜோதிகா. முதலில் சிம்ரனுக்குச் சென்ற இந்த வாய்ப்பு அவர் அப்போது கர்ப்பத் தரித்திருந்தார் என்பதால் விலகிக்கொள்ளவே ஜோதிகாவிடம் வந்தது. ஸ்ப்லிட் பர்சனாலிடி என்னும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாட்டியக்காரி சந்திரமுகியாக தன்னை கற்பனை செய்துகொண்டு அவராகவே வாழ்பவராகச் சிக்கலும் சவாலும் நிரம்பிய கதாபாத்திரத்தில் வெகு கச்சிதமாகப் பொருந்தினார் ஜோதிகா. 'ராரா' பாடலில் அவர் பரதம் ஆடியதும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. படத்தில் 'கங்கா சந்திரமுகியா மாறினா' என்று ஜோதிகாவின் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு வசனம் இடம்பெறும். ந்ஜத்திலும் ஜோதிகா சந்திரமுகியாகவே மாறியிருந்தார் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரமாக முழுமையாக உருமாற்றம் அடைந்தார். அந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. ஜோதிகாவுக்கும் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
தொடர்ந்து சிலம்பரசனுடன் 'சரவணன்', சூர்யாவுடன் கமல் ஹாசனுடன் 'வேட்டையாடு விளையாடு', சூர்யாவுடன் 'சில்லுன்னு ஒரு காதல்' என வெற்றிப் படங்கள் அமைந்தன. இவற்றில் 'வே.வி' படத்தில் கைக்குழந்தையுடன் கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பேசாமல் பேசிய மொழி
அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் 'மொழி' திரைப்படத்தில் பேசும் திறனற்ற பெண்ணாக அதே நேரம் அது குறித்த பரிதாபத்தை எதிர்பார்க்காத சுயசார்பும் தன்னம்பிக்கையும் மிக்க பெண்ணாக நடித்திருந்தார் ஜோதிகா. பல உள்முடிச்சுகள் கொண்ட, பார்வையாலும் முகபாவங்களாலுமே அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய சவால்மிக்க இந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்த விதத்தில் அனைவரும் கவரப்பட்டனர். ஜோதிகாவின் நடிப்புத் திறமை முழுமையாக வெளிப்பட்ட படம் என்று 'மொழி'யைச் சொல்லலாம். அந்தப் படம் அனைத்து வயதினராலும் ரசிக்கப்பட்ட தரமான வெற்றிப் படமாகவும் அமைந்தது..
எட்டு ஆண்டு இடைவெளி
அடுத்ததாக வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் திருமணமான ஆடவரைக் கவர்ந்து மோசடி செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தார் ஜோதிகா. கெளதம் மேனன் இயக்கிய இந்தப் படத்திலும் ஜோதிகாவின் நடிப்பில் முற்றிலும் வேறோரு பரிமாணம் வெளிப்பட்டது.
தன்னுடன் நான்கு படங்களில் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவைக் காதலித்த ஜோதிகா 2007-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2015-ல் வெளியான '36 வயதினிலே' திரைப்படத்தில் ஜோதிகாவின் மறுவருகை நிகழ்ந்தது. மலையாளத்தில் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தில் மஞ்சு வாரியர் ஏற்று நடித்திருந்த மையக் கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்று ஜோதிகாவின் இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு வெற்றிகரமான தொடக்காம அமைந்தது.
பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' திரைப்படத்தில் துணிச்சலும் தீரமும் மிக்க காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார். மணி ரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தியில் வித்யா பாலன் நடித்த 'துமாரி சுலு' படத்தின் தமிழ்ப் பதிப்பான 'காற்றின் மொழி' படத்தில் நடித்தார். 'ராட்சசி' படத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக முதன்மைக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த விதம் பரவலான கவனம் ஈர்த்தது. 'ஜாக்பாட்', 'தம்பி' சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படமான 'பொன்மகள் வந்தாள்:' என ஜோதிகாவின் நடிப்புப் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
எட்டும் தொலைவில் தேசிய அங்கீகாரங்கள்
தமிழில் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவமும் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படங்களும் அரிதாகிப் போயிருந்த 1990-களின் இறுதிப் பகுதியில் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார் முதல் சில படங்களிலேயே அழகு திறமை உழைப்பு ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார். க்யூட்டான பாவனைகள். துருதுருப்பான இயல்பு ஆகியவை ஜோதிகாவின் தனிச் சிறப்புகளாக அமைந்தன. அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அழுத்தமான கதாநாயகி வேடம்தான் அமைந்திருக்கிறது. பல வகையான அந்தக் கதாபாத்திரங்களில் தனது முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே திரையிலிருந்து விலகி குடும்பத்தைத் தொடங்கி இப்போது மீண்டும் நடிக்க வந்திருப்பவர் வயதுக்கேற்ற முதிர்ச்சியான கண்ணியமான கதாபாத்திரங்களில் மாறிவரும் ரசனைக்கேற்ற கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
'பேரழகன்', 'சந்திரமுகி', 'மொழி' ஆகிய படங்களில் நடித்ததற்காக மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருக்கும் ஜோதிகா தேசிய விருது உள்ளிட்ட தேசிய விருது உள்ளிட்ட தேசிய அளவிலான அங்கீகாரங்களையும் பெறுவதற்கான காலம் கனிந்திருக்கிறது என்றே சொல்லலாம். திரைவாழ்வின் இரண்டாம் அத்தியாயத்தில் தொடர்ந்து கவனிக்கத்தக்கக் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் அவர் திரைவாழ்வில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி புதிய உயரங்களை எட்ட மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT