Published : 15 Oct 2020 08:56 PM
Last Updated : 15 Oct 2020 08:56 PM
'சக்ரா' படத்துக்கும் 'இரும்புத்திரை' படத்தின் பாணியைக் கடைப்பிடிக்க விஷால் முடிவு செய்துள்ளார்.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 'சக்ரா' படத்துக்கும் தனது தயாரிப்பில் பெரும் வெற்றியடைந்த 'இரும்புத்திரை' படத்தின் பாணியையே பின்பற்ற முடிவு செய்துள்ளார் விஷால்.
'இரும்புத்திரை' படத்துக்காக பத்திரிகையாளர்களுக்கு, படத்தின் முதல் பாதியைத் திரையிட்டுக் காட்டினார். அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு முழு படத்தையும் பல்வேறு நபர்களுக்குத் திரையிட்டுக் காட்டி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தார்.
தற்போது இதே பாணியை 'சக்ரா' படத்துக்கும் பின்பற்றவுள்ளார் விஷால். பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு 'சக்ரா' படத்தைத் திரையிட்டுக் காட்டி கருத்துகள் பெற்று அதையே விளம்பரமாகப் பயன்படுத்தவுள்ளார். இந்தப் பார்வையாளர்கள் பட்டியலில் ஆட்டோக்காரர்கள் முதல் ஐடி வேலை பார்ப்பவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
'சக்ரா' படத்தைத் திரையிட்டுக் காட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக விஷால் கூறியிருப்பதாவது:
"இந்தப் புதிய முறை ஹாலிவுட்டில் பல்வேறுபட்ட மக்களின் உணர்வுகளை அறியும் வெற்றிகரமான விளம்பர உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. படம் பார்த்தவர்கள் 'இரும்புத் திரை'யை விட 'சக்ரா' நன்றாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள்".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT