Last Updated : 15 Oct, 2020 06:27 PM

1  

Published : 15 Oct 2020 06:27 PM
Last Updated : 15 Oct 2020 06:27 PM

சிவாஜியின் செல்லமான  ‘பீம்பாய்’... ‘குடும்பக்கதை’களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; - சிவாஜியின் இயக்குநர் ஏ.பீம்சிங் 96வது பிறந்தநாள் ஸ்பெஷல்

’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை’ என்று விளம்பரங்களில் அடிக்கோடிட்ட அந்த வாசகத்தைப் போலவே, திரைப்படமும் நம்முள் சேர்ந்துகொண்டது. அது... ‘பாசமலர்’.

‘பாசமலர்’ என்றதும் சிவாஜி நினைவுக்கு வருவார். சாவித்திரி நம் எதிரே நிழலாடுவார். ஜெமினி கணேசன் வருவார். மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் ஞாபகத்துக்கு வரும். ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி...’ என்றெல்லாம் எழுதிய கவியரசர் வரிகள், உயிருடன் வந்து நிற்கும். ‘பா’ எனும் வரிசைப் படங்களும் சிவாஜியும் நினைவில் வரும். முக்கியமாக, ஞாபகத்துக்கு வருபவர்... ஏ.பீம்சிங். இயக்குநர் ஏ.பீம்சிங்.

‘ஒரு சினிமா எப்படி இருக்கணும் தெரியுமா, குடும்பத்தோட எல்லாரும் வந்து பாக்கும்படி இருக்கணும்’ என்ற வார்த்தையை உருவாக்கியவர்... என்ற வார்த்தையின்படி படங்களை உருவாக்கியவர் பீம்சிங். ஒரு கதையை வெறும் கதையாகப் பார்க்காமல், அதை ரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட கதாபாத்திரங்களாக, உயிர்களாகப் பார்த்தவர்... உயிருட்டி உலவவிட்டவர் எனும் பெருமைக்குரியவர் பீம்சிங்.

ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர் பீம்சிங். அகர்சிங்கின் மகன் பீம்சிங். அம்மா ஆதியம்மாள் ஆந்திராக்காரர். மனைவி சோனாபாய், தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பம். மாமனார் ராகவாச்சாரி ஐயங்கார். அவரின் மாமியார் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மனைவி சோனாபாயின் அண்ணன் இயக்குநர். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. இவர்களில் கிருஷ்ணன், சோனாபாயின் அண்ணன்.

சினிமா மீது கொண்ட ஆசையால், கிருஷ்ணன் பஞ்சுவிடம் சேர்ந்தார் பீம்சிங். எடிட்டிங் துறையிலும் பெயர் பெற்றார். உதவி இயக்குநராகவும் பேரெடுத்தார். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. பின்னாளில், சிவாஜியை ரசித்து ரசித்து இயக்கினார் பீம்சிங் என்பது காலம் வழங்கிய கொடை.
52ம் ஆண்டு ‘பராசக்தி’ வந்தது. 54ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர். நடிக்க ‘அம்மையப்பன்’ படத்தை இயக்கினார் பீம்சிங். கலைஞர் கதை வசனம். படம் பெரிதாகப் போகவில்லை. ஆனாலும் மனம் துவளவில்லை. இந்த முறை அதே கலைஞரின் கைவண்ணத்தில், சிவாஜியுடன் ‘ராஜா ராணி’ படத்தில் கைகோர்த்தார் பீம்சிங். வெற்றி பெற்றார். 58ம் ஆண்டு ‘பதிபக்தி’யும் அப்படித்தான். 59ம் ஆண்டு ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ என்ற படத்தை இயக்கினார். அதே வருடத்தில் சிவாஜியைக் கொண்டு ‘பாகப்பிரிவினை’ படைத்தார். ‘பதிபக்தி’யை விட ‘பாகப்பிரிவினை’ பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதே வருடத்தில் சந்திரபாபுவை வைத்து ‘சகோதரி’ எடுத்தார். ’பொன்னு விளையும் பூமி’யைக் கொடுத்தார்.

60ம் ஆண்டு சிவாஜியை வைத்து ‘படிக்காத மேதை’யை உருவாக்கினார். ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தப்படம்.

அதே 60ம் வருடத்தில், ஏவி.எம். தயாரித்து பிரகாஷ்ராவ் இயக்கிய படம் பாதியிலேயே நின்றது. அந்தப் படம் பீம்சிங் கைக்கு வந்தது. எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்தார். கதையை இன்னும் செம்மைப்படுத்தினார். வசனங்களில் இன்னும் கூர்மைப்படுத்தினார். ஜெமினியும் சாவித்திரியும் நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாக, அடுத்த அறுபது ஆண்டுகளுக்குமான கலைஞன் திரையுலகுக்குக் கிடைத்தார். அந்தப் படம்... ‘களத்தூர் கண்ணம்மா’. அந்த நடிகர்... கமல்ஹாசன். கமலை இயக்கிய முதல் இயக்குநர் என்ற பெயர் பீம்சிங்கிற்குக் கிடைத்தது.

அதே ஆண்டில் சிவாஜியுடன் ‘பெற்ற மனம்’ எடுத்தார். அதன் பின்னர், 61ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் இலக்கணம் வகுத்த படமாக, சகோதர பாசத்தின் இலக்கணம் சொல்லும் படமாக ‘பாசமலர்’ படைத்தார். இந்தப் படத்தின் வெற்றியும் படம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த வருடத்துடன் முடிந்துவிடவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையிலும் இன்றைக்கும் தொடர்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், எங்கோ எவரோ ‘பாசமலர்’ பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.

மாற்றுத் திறனாளியின் வேதனை, சகோதர பாசம், பெற்றவர்கள் மீதான அன்பு, மதம் கடந்த பேரன்பு, மருத்துவ மாண்பைப் போற்றும் மனிதம், பெரியப்பா மீதான பாசம், படிக்காத பாமரனின் வெள்ளந்தி அன்பு, நட்பின் ஆழத்தையும் அடர்த்தியும் காட்டுகிற பாங்கு என மனித உணர்வுகளையும் உறவின் சிக்கல்களையும் அந்த உறவுகளின் உன்னதங்களையும் ஒவ்வொரு படங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் பீம்சிங்.

கே.பி.கொட்டரக்காராவின் கதைதான் ‘பாசமலர்’. எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் கதைக்குழுவில் வைத்துக்கொண்டு, கதையின் இண்டு இடுக்கு விடாமல் அலசியெடுத்து விடுவார் பீம்சிங். சோலைமலை, பிலஹரி, இறைமுடி மணி, பிலஹரி, ராம அரங்கண்ணல் என்று கதைக்குழுவில் இருந்தவர்கள் அனைவருமே ஜாம்பவான்கள். வங்கக் கதையோ மராட்டியக் கதையோ கேரளக் கதையோ ஆந்திரத்துக் கதையோ... எதுவாக இருந்தாலும் தமிழ் வண்ணம் பூசி கதை சமைப்பதில் வல்லவர் பீம்சிங் என்பார்கள் திரை வட்டாரத்தில்.

அநேகமாக, நடிகர் திலகத்தின் முதல் சினிமாத்துறை ரசிகன் பீம்சிங்காகத்தான் இருக்கவேண்டும். சிவாஜியை ரசித்து ரசித்துப் படங்களை எடுத்தார். ‘பார்த்தால் பசி தீரும்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பாலும் பழமும்’ என்று ஒவ்வொரு விதமான கேரக்டர்கள் உருவாக்கினார்.

பீம்சிங் படத்தின் இன்னொரு ஸ்பெஷல்... மிகப்பெரிய திரைப்பட்டாளம். ஏகப்பட்ட நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெறுமனே இருக்கமாட்டார்கள். கதையைப் பலப்படுத்த பங்கெடுத்துக்கொள்வார்கள். வசனம் ஏக பலம் கொடுக்கும். ஆரூர்தாஸ் வசனங்கள் ஒருசோறுபத உதாரணம்.

சிவாஜிக்கு, பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், டி.யோகானந்த், கே.விஜயன் என்று ஏகப்பட்ட இயக்குநர்கள் கிடைத்தார்கள். இவர்களில் பீம்சிங் சிவாஜிக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்குமே கூடுதல் ஸ்பெஷல்தான். சிவாஜியை செப்படிவித்தையென ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உலவவிட்டதெல்லாம் இருக்கட்டும். ‘பாசமலர்’ படத்தில், சிவாஜியின் வீட்டில், கன்னத்தில் கைவைத்தபடி சிவாஜியின் ஓவியம் ஒன்று இருக்கும். அந்த பீம்சிங் ரசனைக்கு, தமிழ்த் திரையுலகமும் ரசிக உள்ளங்களும் காலம் முழுக்க வியந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும். ‘என்ன, பீம்பாய்... இந்த ஸீனுக்கு இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று பீம்சிங் தோளில் கைபோட்டபடி ஸ்டைலாகக் கேட்பாராம் சிவாஜி. அந்த ‘பீம்பாய்’ என்று அழைப்பதில் அந்நியோன்யமும் ஆயுள் பரியந்த பாசமும் வெளிப்படும்.

பீம்சிங்கின் இரண்டு கரங்கள்... மெல்லிசை மன்னர்களும் கவியரசரும். பெரும்பாலும் மெல்லிசை மன்னர்களின் இசைதான். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்’ பாடலும் ‘வாராயோ தோழி வாராயோ’வும் என்றும் மார்க்கண்டேயப் பாடல்கள். ‘பொன்னொன்று கண்டேன்’ என்று நீந்திக்கொண்டே பாடுகிற பாடலும் ‘அ ஆ இ ஈ’ சொல்லிக் கொடுக்கும் ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ’வும் ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா’ என்ற கேள்வி பதில் பாடலும், ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று ம்ம்... ம்ம்ம். ம்ம்ம்ம்’ என்ற பதிலைக்கொண்டும் என கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள், சிவாஜி கணேசன் முதலானோரை கூட்டாக வைத்துக்கொண்டு பீம்சிங் செய்ததெல்லாம் தமிழ் சினிமாவின் மெளன சாதனைகள். அவற்றை உரத்த சாதனைகளாக ரசித்துக்கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

பின்னர், ஜெயகாந்தனின் எழுத்துகளையும் எண்ணங்களையும் தன் படைப்பில் கொண்டு வந்தார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட பீம்சிங்கின் படங்கள், இன்றைக்கு உள்ள சினிமாக் கோட்டைக்குள் நுழைபவர்களுக்கு பாடங்கள்.

அக்டோபர் 1ம் தேதி 1928ம் ஆண்டு சிவாஜியின் பிறந்தநாள். 1924ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி இயக்குநர் ஏ.பீம்சிங்கின் பிறந்தநாள். பீம்சிங்கிற்கு இரண்டு மகன்கள். எடிட்டிங்கிலும் இயக்கத்திலும் தனித்துவம் மிக்க ஆளுமையாகத் திகழும் பி.லெனின் ஒருவர். பாரதிராஜாவின் கண்களாகவே திகழ்ந்து, சமீபத்தில் மரணித்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்னொருவர்.

பீம்சிங்கின் ஒவ்வொரு படங்களும் தலைமுறைகள் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்ந்துகொண்டே இருக்கும். பீம்சிங்கிற்கு இன்று பிறந்தநாள். 96வது பிறந்தநாள். ’பீம்பாய்’ என்று செல்லமாக சிவாஜி அழைக்கும் பீம்சிங்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்!

- இன்று பீம்சிங் 96வது பிறந்தநாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x