Published : 12 Oct 2020 07:40 PM
Last Updated : 12 Oct 2020 07:40 PM
விஜய் சேதுபதி மிகத் திறமையான ஒரு நடிகர். எனது பயோபிக்கான '800'ல் எனது பந்துவீச்சு முறையை அவர் அப்படியே சிறப்பாகச் செய்து காட்டுவார் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் '800' என்கிற திரைப்படம் உருவாகிறது. விஜய் சேதுபதி இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கி வருடக் கடைசியில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் முரளிதரன் தான். ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழில் எடுக்கப்படுகிறது. முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஒரு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கும் முரளிதரன், "திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்தமாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்" என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி பேசுகையில், "முரளிதரனின் கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரைக் களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர்தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT