Published : 12 Oct 2020 07:21 PM
Last Updated : 12 Oct 2020 07:21 PM
தமிழ் சினிமாவில் புன்னகையாலேயே ரசிகர்களைச் சொக்க வைத்து புன்னகையரசி என்று கொண்டாடப்பட்ட நடிகையர்கள் இருவர். ஒருவர் கறுப்பு-வெள்ளைக் காலத்தில் கால்பதித்த கே.ஆர்.விஜயா. இன்னொருவர் இன்று (அக்டோபர் 12) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடும் சினேகா.
மும்மொழித் தொடக்கம்
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சினேகா துபாயில் படித்து வளர்ந்தபின் அவருடைய குடும்பம் தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது. 'இங்கணே ஒரு நிலாபக்ஷி' என்னும் மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் வெளியாகத் தாமதமாகவே அப்போது 'அலைபாயுதே' படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்திருந்த மாதவனின் ஜோடியாக நடித்து 2001-ல் வெளியான 'என்னவளே' சினேகாவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய படமாக அமைந்துவிட்டது.
முதல் படத்திலேயே தன் அண்டைவீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் மட்டுமல்லாமல் முதிர்ச்சியான நடிப்பாலும் கவனிக்க வைத்தார் சினேகா. அதே ஆண்டில் இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான 'ஆனந்தம்' படத்தில் நடித்தார் சினேகா. அந்தப் படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அவருக்கான அறிமுகப் பாடல் போல் அமைந்த 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்' அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல் ஆனது. அதில் புதுப்பொலிவுடனும் பாந்தமான அழகுடனும் மின்னிய சினேகா தமிழத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இதே ஆண்டில் 'தொலி வலப்பு' என்னும் படத்தில் நாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
இரண்டாம் நாயகியும் முதன்மை நாயகியும்
தொடர்ந்து இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 100-வது படமான 'பார்த்தாலே பரவசம்', கமல் ஹாசன் நடித்த 'பம்மல் கே.சம்பந்தம்' ஆகிய படங்களில் இரண்டாம் நாயகியாக நடித்துக் கவனம் பெற்றார்.
2002-ல் நட்பின் சிறப்பைக் கொண்டாடும் படமான 'புன்னகை தேசம்' படத்திலும் விக்ரமன் இயக்கிய 'உன்னை நினைத்து' படத்திலும் இரண்டு நாயகியர் இருந்தாலும் சினேகாவுக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்தது. அவற்றில் சினேகாவின் கண்ணியமான தோற்றமும் மிகையற்ற நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தன. இரண்டு படங்களும் வெற்றிபெற்று சினேகாவுக்குப் பெரிய கதாநாயகர்களுடன் இணையும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தன. வசந்த் இயக்கிய 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' படத்தில் நகர்ப்புறப் பெண்ணாக அழகிலும் நடிப்பிலும் மட்டுமல்லாமல் மெல்லிய கவர்ச்சியிலும் ரசிக்க வைத்தார் சினேகா. அந்த ஆண்டில் ஸ்ரீகாந்துடன் 'ஏப்ரல் மாதத்தில் 'என்னும் கல்லூரி நட்பையும், காதலையும் மையமாகக் கொண்ட வெற்றிப் படத்தில் நடித்தார்.
முத்திரை பதித்த இரட்டை வேடம்
2003-ல் விஜய்யுடன் அவர் நடித்த 'வசீகரா' நகைச்சுவை நிரம்பிய காதல் கதையாக ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. அடுத்த சில மாதங்களில் வெளியான 'பார்த்திபன் கனவு' சினேகாவின் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் வெளியுலகம் அறியாத இல்லத்தரசி, நவீன சிந்தனைகள் கொண்ட இளம்பெண் என இரண்டு முற்றிலும் நேரெதிரான கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக வேறுபாடு காண்பித்து நடித்திருந்தார் சினேகா. இயக்குநர் கரு.பழனியப்பனின் அறிமுகப் படமான 'பார்த்திபன் கனவு' அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்து வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது.
அடுத்த ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான 'ஆட்டோகிராப்' படத்தில் நாயகனின் தோழியாக ஊக்கச் சக்தியாக முக்கியமான கதாபாத்திரத்தில் முதிர்ச்சியுடன் நடித்திருந்தார். அனைவராலும் உச்சி முகர்ந்து கொண்டாடப்பட்ட அந்தப் படம் சினேகாவின் திரைவாழ்வில் இன்னொரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர் பாடுவது போல் அமைந்த 'ஒவ்வொரு பூக்களுமே' மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு அவ்வாண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை வென்றது. அதே ஆண்டில் இன்னொரு வெற்றிப் படமான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.
இரண்டு குதிரைப் பயணம்
தொடர்ந்து அஜித்துடன் 'ஜனா', ஸ்ரீகாந்துடன் 'போஸ்', பிரசாந்துடன் 'ஆயுதம்', அர்ஜுனுடன் 'சின்னா', ஜீவனுடன் 'நான் அவனில்லை', ஷாமுடன் 'இன்பா', லாரன்ஸுடன் 'பாண்டி', சிலம்பரசனுடன் 'சிலம்பாட்டம்' போன்ற மாஸ் நடிகர்களின் படங்களில் படங்களில் நாயகனைக் காதலிக்கும் வேலையை மட்டும் செய்துவிட்டுப் போகும் வழக்கமான நாயகி வேடத்தில் நடித்தார். இவற்றில் சில படங்களில் பாடல்களில் கவர்ச்சியாக நடித்து ஹோம்லியான நடிகை என்ற இமேஜ் வளையத்துக்குள்ளிருந்து வெளியேறினார்.
இதே காலகட்டத்தில் சரவண சுப்பையாவின் 'ஏபிசிடி', கரு,பழனியப்பனின் 'பிரிவோம் சந்திப்போம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' போன்ற படங்களில் வலுவான நாயகி கதாபாத்திரங்களிலும் நடித்து திறமையான நடிகை என்ற நற்பெயரையும் மதிப்பையும் தக்கவைத்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்தார். அவ்வப்போது மலையாள, கன்னடப் படங்களிலும் நடித்தார்.
துணிச்சலால் கிடைத்த பாராட்டு
2006-ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'புதுப்பேட்டை' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார். கல்ட் கிளாசிக்காக அமைந்துவிட்ட அந்தப் படத்தில் சினேகாவின் நடிப்பும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. 2009-ல் வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிக்குத் தாயாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். விமர்சகர்களின் பாராட்டுகளையும் சில விருதுகளையும் பெற்ற இந்தப் படத்தில் இவருக்குக் கணவராக நடித்த பிரசன்னாவே நிஜ வாழ்க்கையிலும் கணவரானார். 2010-ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'கோவா' படத்தில் எதிர்மறைத்தன்மையும் அதிநவீனப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2011-ல் 'பவானி ஐபிஎஸ்' என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் கலைஞர் மு.கருணாநிதி கதை-வசனம் எழுதிய 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்தார்.
வலுவான துணைக் கதாபாத்திரங்கள்
திருமணம், மகப்பேறு ஆகியவை காரணமாக சினேகா நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மதிப்பு குறையாத நடிகையாகவே அவருடைய திரைப்பயணம் தொடர்கிறது. மலையாளத்தில் வெளியான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிப் படமாக பிரகாஷ் ராஜ் இயக்க அதில் நாயகியாக நடித்தார் சினேகா. 2014-ல் வெளியான அந்தப் படத்தில் 30-35 வயதில் திருமணமாகாத பெண்ணாக அவர் நடித்த விதம் அவருடைய அபாரமான நடிப்புத் திறமைக்கு மற்றொரு உதாரணம். அதேபோல் 'ஹரிதாஸ்', 'பண்ணையாரும் பத்மினியும்', 'வேலைக்காரன்' போன்ற படங்களில் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான 'பட்டாஸ்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், இன்னொரு தனுஷுக்கு தாயாகவும் அடிமுறை என்னும் தற்காப்புக் கலையை மகனுக்குப் பயிற்றுவித்து அதன் தொடர்ச்சி அறுபடாமல் பாதுகாக்கும் வீராங்கனையாகவும் நடித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார் சினேகா.
'புன்னகை தேசம்', 'பிரிவோம் சந்திப்போம்' 'விரும்புகிறேன்' ஆகிய படங்களுக்காகச் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறையும், தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது., ஆந்திர அரசின் நந்தி சிறப்பு விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார் சினேகா.
குறையாத மதிப்பு
புன்னகையாலேயே பளிச்சென்று மனதில் இடம்பிடித்துவிடும் சினேகா பாந்தமான தோற்றம். கண்ணியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பதால் தமிழ் ஆண் மனத்துக்கு மிகவும் நெருக்கமான திரைப் பெண்ணாக இருந்தார். திருமணப் பேச்சுவார்த்தைகளில் மகாலட்சுமி போல் மணப்பெண் வேண்டும் என்று கேட்பதுபோல், சினேகாவைப் போல் இருக்க வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தின் 'குடும்பப் பாங்கான' பெண் என்பதற்கான வடிவத்துக்குள் அனைத்து வகைகளிலும் பொருந்தினார் சினேகா.
அதே நேரம் அவர் அந்த இமேஜுக்குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை, எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான வேட்கையைத் தன் தேர்வுகள் மூலம் வெளிப்படுத்தினார். அதற்கான பன்முகத் தன்மையும் அவரிடம் இருந்தது. திரைவாழ்வில் தொடக்கக் காலத்திலேயே பாலியல் தொழிலாளியாக நடித்தார். கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க அவர் தயங்கியதில்லை. அதே நேரம் அந்தக் கவர்ச்சி ஆபாசம், வக்கிரம் ஆகியவற்றைத் தொட்டுவிடாமல் முகம் சுளிக்க வைக்காமல் அளவாக இருப்பதையும் உறுதி செய்தார். பல படங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியதோடு நாயகியாக இருந்துவிட்டு வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவராக மாறிய பிறகும் ஒரு நடிகையாக அவருடைய மதிப்பும் முக்கியத்துவமும் குறைந்துவிடவில்லை.
இன்றைய தலைமுறையின் ரசனை மாற்றமும் நவீன சிந்தனைகளின் பரவலும் பெண்களுக்கான வாய்ப்புகளைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. திரைத் துறையில் பெண் கலைஞர்களுக்கான எல்லைகளைப் பேரளவு விஸ்தரித்திருக்கின்றன. இதனால் சினேகா போன்ற திறமை வாய்ந்த நடிகைகள் இன்னும் நீண்ட நெடுங்காலம் தம் திரைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியும். இன்னும் பல தரமான படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து இன்னும் அழுத்தமான தடங்களைப் பதிக்க முடியும். இந்தக் கணிப்பு மெய்யாகி ஒரு நடிகையாக சினேகா இன்னும் பல உயரங்களை அடைய அவரை மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT