Published : 09 Oct 2020 02:14 PM
Last Updated : 09 Oct 2020 02:14 PM
சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
'வீரதீர சூரன்' என்ற படத்தில் நடித்தபோது சூரிக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். அந்தப் படத்துக்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியை மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தைதான் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷ்ணு விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். 'கவரிமான் பரம்பரை' என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.
உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இதுபற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்".
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT