Published : 09 Oct 2020 01:33 PM
Last Updated : 09 Oct 2020 01:33 PM
திரையுலகிலிருந்து விலகுகிறேன் என்று சனா கான் திடீரென்று அறிவித்துள்ளார்.
தமிழில் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதற்குப் பிறகு 'தம்பிக்கு எந்த ஊரு', 'பயணம்', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு மெர்வின் லூயிஸ் என்பவரைக் காதலித்து வருவதாக புகைப்படங்களுடன் அறிவித்தார். நடப்பாண்டு தொடக்கத்தில் மெர்வின் லூயிஸைப் பிரிந்துவிட்டதாக அறிவித்து, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
தற்போது, திடீரென்று திரையுலகிலிருந்து விலகுவதாக சனா கான், ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"சகோதர சகோதரிகளே, இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நான் இருக்கிறேன்.
பல வருடங்களாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். திரைத்துறையில் நான் இருந்த காலகட்டம் வரை எனக்கு நிறையப் புகழும், பெருமையும், செல்வமும் ரசிகர்களிடமிருந்து கிடைத்துள்ளன. அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஆனால், கடந்த சில நாட்களாக எனக்குள் ஏற்பட்டுள்ள ஒரு உணர்தல் என்னை ஆட்கொண்டுள்ளது. இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய உண்மையான நோக்கம் பணத்தையும், புகழையும் துரத்துவதற்குத்தானா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு, வறியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அந்த வாழ்க்கையின் கடமையில் ஒரு அங்கம் இல்லையா?
ஒரு நபர் தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட காலமாக நான் பதில் தேடி வருகிறேன். அதுவும் குறிப்பாக என் மரணத்துக்குப் பின் எனக்கு என்ன ஆகும் என்கிற கேள்விக்கு.
எனது மதத்தில் இந்த கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.
தன்னைப் படைத்தவனின் ஆணைக்கேற்ப இந்த அடிமை வாழ்வதும், பணத்தையும், புகழையும் மட்டுமே ஒரே நோக்கமாகக் கொள்ளாமல் இருப்பதுமே சிறப்பாக இருக்கும். மனிதன் பாவப்பட்ட வாழ்க்கை வாழ்வதைத் தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும், தன்னைப் படைத்தவன் காட்டும் பாதையைப் பின்பற்ற வேண்டும்.
எனவே, இன்று நான் ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். இன்றிலிருந்து எனது திரைத்துறைக்கு, அதற்கேற்ற வாழ்க்கை முறைக்கு நிரந்தரமாக விடை கொடுத்து, என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி மனித இனத்துக்குச் சேவை செய்ய முடிவெடுத்துள்ளேன்.
அனைத்துச் சகோதர சகோதரிகளும் எனக்காக அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். அவர் எனது மனந்திரும்புதலை ஏற்க வேண்டும். என்னைப் படைத்தவனின் ஆணைகளைப் பின்பற்றி வாழவும், மனித இனத்துக்குச் சேவை செய்யவும் நான் எடுத்திருக்கும் முடிவின் படி இணக்கத்துடன் வாழ எனக்குத் திறனைத் தந்து அதில் உறுதியுடன் இருக்கும் மன வலிமையைத் தர வேண்டும்.
எனவே, இனி எந்தவிதமான பொழுதுபோக்குத் துறை தொடர்பான எந்த விதமான வேலைகளுக்கும் என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம் என அனைத்துச் சகோதர சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு சனா கான் தெரிவித்துள்ளார்.
My happiest moment
May Allah help me n guide me in this journey.
Aap sab mujhe dua Mai Shamil rakhe#sanakhan #2020 #8thoct #thursday pic.twitter.com/8DIJJ2lCSC— Sana Khaan (@sanaak21) October 8, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT