Published : 02 Oct 2020 07:43 PM
Last Updated : 02 Oct 2020 07:43 PM
ஒரு கொலையை யார் செய்தார்கள், எதற்காக, அதன் பின்னணி என்ன என்பதைச் சொல்லும் படமே 'சைலன்ஸ்'
'சைலன்ஸ்' படத்தின் தொடக்கத்தில் ஒரு வீட்டில் இரண்டு மர்மமான கொலைகள் நடக்கிறது. உடனே, அது பேய்வீடு என்று யாருமே போக மறுக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து அந்த வீட்டை வாடகைக்கு விடுகிறார்கள். அந்த வீட்டின் கீழ்பகுதியில் ஒரு ஓவியம் இருப்பதை எடுக்க மாதவன் - அனுஷ்கா வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
அனுஷ்காவுக்கு தேவையான அந்த ஓவியத்தை எடுக்க வந்த இடத்தில் மாதவன் கொல்லப்படுகிறார். அனுஷ்கா தப்பித்துவிடுகிறார். உண்மையில், அந்த வீட்டில் மர்மமான கொலைகளுக்கு யார் காரணம், மாதவன் ஏன் சாகடிக்கப்படுகிறார் என்பது தான் திரைக்கதை.
காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் அனுஷ்கா சுமாராகவே நடித்துள்ளார். படம் முழுக்க பாதி தூக்கத்திலிருந்து எழுந்து வந்த மாதிரியே தான் இருக்கிறார். படத்தில் இவருடைய நடிப்புத் தான் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு மற்றவர்களின் நடிப்பு இருந்தது. இந்தக் கதையில் மாதவன் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அஞ்சலி மற்றும் மைக்கேல் மாட்ஸன் இருவரின் நடிப்பு ரொம்ப செயற்கையாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஷானியல் டியோ, இசையமைப்பாளர் கிரிஷ் இருவருடைய பணிகள் கதைக்குப் பொருத்தமாக உள்ளது.
ஒரு ஹாரர் படமாக தொடங்கி, உளவியல் த்ரில்லரா என்று யோசித்து வைத்து 2 மணி நேரம் படம் பார்த்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்துகிறது. பல ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் எடுக்கப்பட்டுள்ள முதல் காட்சி மாதிரியே இன்னும் பல காட்சிகளை எடுத்திருந்தால் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான ஒரு படத்தை பார்த்த திருப்தியாவது கிடைத்திருக்கும். ஆனால் முதல் காட்சியைத் தாண்டி வேற எதுவுமே இயக்குநர் ஹேமந்த் மதுகரால் பார்வையாளர்களை ஈர்க்க செய்யவில்லை எனத் தோன்றுகிறது. படத்தில் பல கதாபாத்திரங்கள் பார்வையாளர்களுக்குச் சந்தேகம் வரவைக்கத் திணித்துள்ளார். ஆனால், படமாக அது எந்தவொரு பாதிப்பையும் உருவாக்கவில்லை என்பது தான் பிரச்சினை.
எதற்காக அமெரிக்காவில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும், அஞ்சலியின் ஆங்கிலப் பேச்சு, மைக்கேல் மாட்ஸன் நடிப்பு என சில விஷயங்கள் புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என இயக்குநருக்கு தெரிந்துள்ளது. ஆனால், இவ்வளோ போலித்தனமாக நிற்பது, நடப்பது, பேசுவது, நடிப்பது உள்ளிட்டவற்றை அவர் கவனிக்கவில்லை. படத்தின் கதையோட்டத்தில் நிறைய லாஜிக் குறைகள் வேறு உள்ளது.
அனைத்தையும் தாண்டி க்ளைமாக்ஸ் காட்சி சரிசெய்யும் என்று பார்த்தால், அதுவும் புரியாத புதிராகவே உள்ளது. மொத்தத்தில் இந்த சைலன்ஸ் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இன்னொரு அபத்தமான படம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT