Published : 02 Oct 2020 04:19 PM
Last Updated : 02 Oct 2020 04:19 PM

இயக்குநர் - நடிகர் பாண்டியராஜன் பிறந்தநாள் ஸ்பெஷல்: இயக்கத்திலும் நடிப்பிலும் பல உயரங்களைத் தொட்டவர் 

சென்னை

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றிபெற்ற பலர் இருக்கிறார்கள். ஆனால் இயக்குநராகவும் நாயக நடிகராகவும் வெற்றிபெற்றவர்கள் சிலர்தான். அந்த வெகு சிலரில் ஒருவரான ஆர்.பாண்டியராஜன் இன்று (அக்டோபர் 2) தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சென்னை சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவரான பாண்டியராஜன் அரசுப் பள்ளி மாணவர். தமிழிசைக் கல்லூரியில் வயலின் இசையில் 'இசைச் செல்வம்' பட்டம் பெற்றார். பிற்காலத்தில் தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றார்.

நடிகராக விரும்பிய இயக்குநர்

இளைஞராக இருந்தபோது சினிமா நடிகராக விரும்பினார். ஆனால் பலர் அவருடைய தோற்றத்தைக் குறை சொல்லி வாய்ப்பு வழங்கத் தயங்கினர். எனவே இயக்குநராக முடிவுசெய்தார். திரை எழுத்தாளர் தூயவனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். ரஜினிகாந்த்-லட்சுமி நடிப்பில் உருவான 'பொல்லாதவன்' திரைப்படத்தில் உதவி எழுத்தாளராகப் பணியாற்றினார். தூயவன் அலுவலகத்தில்தான் அப்போது நடிகராகவும் இயக்குநராகவும் திரையுலகை ஆண்டுகொண்டிருந்த நட்சத்திரங்களில் ஒருவரான கே.பாக்யராஜின் அறிமுகம் பாண்டியராஜனுக்குக் கிடைத்தது. பாக்யராஜின் உதவி இயக்குநரானார். 'மெளன கீதங்கள்', 'அந்த ஏழு நாட்கள்', 'தூறல் நின்னு போச்சு', 'விடியும் வரை காத்திரு', 'இன்று போய் நாளை வா' ஆகிய படங்களில் பாக்யராஜின் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு 'டார்லிங் டார்லிங்' படத்தில் இணை இயக்குநராக உயர்ந்தார். இவற்றில் சில படங்களில் ஒரிரு காட்சிகளில் தலைகாட்டினார். 'முந்தானை முடிச்சு' கதை-திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றி முடித்தபிறகு பாண்டியராஜனுக்கு இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்கத்தால் நிறைவேறிய விருப்பம்

பிரபு-ரேவதியை வைத்து 'கன்னிராசி' என்னும் திரைப்படத்தை இயக்கினார். 1985-ல் வெளியான அந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது. அடுத்தாக அவர் இயக்கிய 'ஆண்பாவம்' அதே ஆண்டு இறுதியில் வெளியானது அதில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிகராகவும் அறிமுகமானார் பாண்டியராஜன். அந்தப் படம் 225 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு பாண்டியராஜன் என்ற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வரும் படமாகத் திகழ்கிறது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களாலும் விரும்பிப் பார்க்கப்படும் கலகலப்பு மிக்க கிராமப் படமாக விளங்குகிறது. இந்தப் படத்தில் நகைச்சுவை மிளிரும் நாயக வேடத்தில் பாண்டியராஜன் நடித்திருந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விளைவாக நடிகராக வேண்டும் என்ற பாண்டியராஜனின் ஆசையை ரசிகர்களின் வரவேற்பின் மூலம் நிஜமானது.

35 ஆண்டுகளாக பாண்டியராஜனின் நடிப்புப் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது. சில தயாரிப்பாளர்களால் குறைகளாகப் பார்க்கப்பட்ட அவரது உயரமும் உருண்டை கண்களும் நடிகராக அவருடைய தனித்தன்மைகள் ஆகின. குறிப்பாகப் பல படங்களில் ரகசியமாக ஏதாவது தவறு செய்துவிட்டு அவர் அந்த பெரிய கண்களை வைத்துக்கொண்டு 'திருட்டு முழி' முழிக்கும் விதம் 'பாண்டியராஜன் முழி' என்று பிரபலமானது.

தேடிவந்த நடிப்பு வாய்ப்புகள்

'தாய்க்கு ஒரு தாலாட்டு' படத்தில் சிவாஜி கணேசன் – பத்மினி ஜோடியின் மகனாக நடித்தார் இதுவே பாண்டியராஜன் வேறொரு இயக்குநர் படத்தில் நடித்த முதல் படம். அடுத்து 'முத்துக்கள் மூன்று' என்னும் படத்திலும் சிவாஜி, சத்யராஜுடன் நடித்தார். சில ஆண்டு இடைவேளைக்குப் பிறகு 'மனைவி ரெடி' என்னும் படத்தை எழுதி இயக்கினார். அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். நடித்து எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்தார். 1987-ல் வெளியான இந்தப் படத்தில் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது சூழ்நிலை நிர்பந்தத்தால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்பவராக அதனால் கண்டிப்பு மிக்க தந்தையின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இளைஞனின் கதையை நகைச்சுவைப் பாணியில் கையாண்டு வெற்றிபெற்றார்.

அடுத்த ஆண்டில் 'நெத்தியடி' என்னும் திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்திருந்ததோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இந்தப் படமும் வசூல் ரீதியில் வெற்றிபெற்றதோடு பாண்டியராஜனின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 8 மற்ற இயக்குநர்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார். 'ஊரத் தெரிஞ்சுகிட்டேன்' படத்தில் பாசமிகு அண்ணனாகவும் திருடனாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் அண்ணன் –தங்கை சென்டிமெண்ட்டால் ரசிகர்களைக் கவர்ந்தது. மனோரமா பாட்டியாகவும் பாண்டியராஜன் பேரனாகவும் நடித்த 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படம் குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தது. எஸ்.வி.சேகருடன் நடித்த 'கதாநாயகன்', ஜனகராஜுடன் நடித்த 'வாய்க்கொழுப்பு' உள்ளிட்ட நகைச்சுவையை மையப்படுத்திய ஜனரஞ்சகப் படங்களும் ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படும் படங்களாக உள்ளன.

90களின் வெற்றிகரமான நாயகன்

1990-களில் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்தார் பாண்டியராஜன். இவற்றில் பெரும்பாலான படங்களில் அவர்தான் கதாநாயகன், அவற்றில் வி.சேகர் இயக்கிய 'காலம் மாறிப் போச்சு' பெண்களின் சொத்துரிமையை வலியுறுத்திய படமாகும். இந்தப் படம் 225 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெற்றிபெற்றது. பாக்யராஜ் கதை எழுதி என்.முருகேஷ் இயக்கிய 'தாய்க்குலமே தாய்க்குலமே' படமும் தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கேயார் இயக்கிய 'கும்பகோணம் கோபாலு' படமும் கவனம் ஈர்த்தது. இவற்றின் மூலம் 1990களின் வெற்றிகரமான நாயக நடிகர்களில் ஒருவராக பாண்டியராஜன் இருந்தார் என்பதை அறியலாம்.

1990களில் பாண்டியராஜன் இரண்டு படங்களை மட்டுமே இயக்கினார். 'மடிவல் கொடி' என்னும் மலையாளப் படத்தின் மறு ஆக்கமான 'சுப்பிரமணியசாமி' 1994-ல் வெளியானது. 'கோபாலா கோபாலா' என்னும் கலகலப்பான நகைச்சுவைப் படம் 1996-ல் வெளியானது.

மீண்டும் இயக்குநர்

புத்தாயிரத்தில் பிரபுதேவா-மீனா-சங்கீதா நடிப்பில் 'டபுள்ஸ்' என்னும் படத்தை இயக்கினார் பாண்டியராஜன். 'கன்னிராசி'க்குப் பிறகு பாண்டியராஜன் இயக்கிய படங்களில் அவர் நடிக்காத ஒரே படம் இதுதான். அடுத்ததாக மீண்டும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜ் எழுதிய கதையை வைத்து 'கபடி கபடி' என்னும் படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தார் பாண்டியராஜன். அதற்குப் பிறகு 2006-ல் தன் மகன் பிருத்விராஜை நாயகனாக அறிமுகப்படுத்தி 'கைவந்த கலை' என்னும் படத்தை இயக்கினார் பாண்டியராஜன். இதற்குப் பிறகு அவர் எந்தத் திரைப்படத்தையும் இயக்கவில்லை..

நகைச்சுவையை அள்ளித் தந்த துணை நடிகர்

2000-த்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து துணை நடிகராக பெரும்பாலும் நகைச்சுவைப் பங்களிப்புக்கான வேடங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போதுவரை வெற்றிகரமான துணை நடிகராக இயங்கிவருகிறார். சுந்தர்.சி இயக்கிய 'அழகான நாட்கள்', 'கிரி', 'லண்டன்' ஆகிய படங்களிலும் சித்திக் இயக்கிய 'எங்கள் அண்ணா' படத்திலும் பாண்டியராஜனின் நகைச்சுவை நடிப்புத் திறமை சிறப்பாக வெளிப்பட்டது.

எதிர்மறை வேடத்திலும் அசத்தியவர்

மிஷ்கின் இயக்கத்தில் 2008இல் வெளியான 'அஞ்சாதே' திரைப்படத்தில் ஒரு நடிகராக பாண்டியராஜனிடமிருந்து அதுவரை வெளிப்பட்டிராத பரிமாணம் வெளிப்பட்டது. விமர்சகர்களால் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட அந்தப் படத்தில் பெண்களைக் கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாகிப் பெற்றவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கொடூரர்களின் கூட்டத்தில் முக்கியஸ்தராக முற்றிலும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். பாண்டியராஜனின் நெடிய நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்தது.

2010-ல் தொடங்கி கடந்த பத்தாண்டுகளிலும் தொடர்ந்து பல படங்களில் கவனம் ஈர்த்தார். 'வாயை மூடிப் பேசவும்' படத்தில் அரசியல்வாதியாகவும் கே.வி.ஆனந்தின் 'கவண்' படத்தில் மூத்த பத்திரிகையாளராகவும் நடித்தது அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தியவர்

ஒரு இயக்குநராக பல வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தியவர் பாண்டியராஜன். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள். 1980-களில் முன்னணி நட்சத்திர நடிகையான சீதா ('ஆண்பாவம்'), மூத்த நடிகை கொல்லங்குடி கறுப்பாயி ('ஆண்பாவம்'), தற்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் மயில்சாமி ('கன்னிராசி'), நாயகியாக அறிமுகமாகி பின்பு குறிப்பிடத்தக்க துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள சங்கீதா ('டபுள்ஸ்'), ஒளிப்பதிவாளர் நித்யா ('சுப்பிரமணியசாமி'), இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ('டபுள்ஸ்'). ஆகியோர் ஆவர்.

திரைவிழாக்களுக்குச் சென்ற குறும்படங்கள்

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் குறும்படங்களிலும் தன் வல்லமையை நிரூபித்திருக்கிறார் பாண்டியராஜன். அவர் இயக்கிய 'மகன்' குறும்படம் (2002) ஃபிலிம் டிவிஷன ஆஃப் இந்தியாவால் வாங்கப்பட்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 'இரு துளிகள்' (2007) என்னும் குறும்படம் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய ஆங்கிலக் குறும்படம் 'ஹெல்ப்' (2011) பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவருகிறார். நகைச்சுவைத்திறன் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டிருக்கிறார்.

நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றிபெற்று தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவரும் பாண்டியராஜன் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் தரமான திரைப்படங்களையும் குறும்படங்களையும் இயக்க வேண்டும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x