Published : 27 Sep 2020 04:55 PM
Last Updated : 27 Sep 2020 04:55 PM
ஜூன் மாதமே தனக்காக சிலை ஒன்றை வடிவமைக்குமாறு ஆர்டர் கொடுத்துள்ளார் எஸ்பிபி. இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
எஸ்பிபி மறைவுக்குப் பிறகு அவர் குறித்து பல்வேறு செய்திகள், பேட்டிகள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதில் இன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள செய்தி என்னவென்றால், ஜூன் மாதமே எஸ்பிபி தனக்காக சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்ததுதான்.
ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கொத்தப்பேட்டையைச் சேர்ந்தவர் சிற்பி உடையார் ராஜ்குமார். இவரிடம் தனது பெற்றோர் சாமமூர்த்தி - சகுந்தலா மறைவுக்குப் பிறகு அவர்களுக்கான சிலைகளைச் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார் எஸ்பிபி.
பின்பு, கடந்த ஜூன் மாதம் உடையாரிடம் தனது சிலை ஒன்றையும் செய்து கொடுக்கும்படியும் கேட்டுள்ளார் எஸ்பிபி. அவரிடம் இது கரோனா ஊரடங்கு சமயம் என்பதால், தன்னால் நேரில் எல்லாம் வரமுடியாது எனத் தெரிவித்து இ-மெயில் வழியே புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்.
எஸ்பிபி சிலைப் பணிகளை முடித்து, தயாராக வைத்துள்ளார் ராஜ்குமார். எஸ்பிபி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் சிலையை அவருக்குக் காட்ட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரோ உடல்நிலை மோசமடைந்து காலமாகிவிட்டார்.
இந்தச் செய்தியை வைத்து அனைவரும், தனது மரணத்தை முன்பே கணித்துவிட்டாரா எஸ்பிபி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT