Published : 27 Sep 2020 02:09 PM
Last Updated : 27 Sep 2020 02:09 PM
’’மைக் முன்னே நின்று வாயசைத்தேன்; ஒளிந்து நின்று எனக்காக எஸ்.பி.பி. சார் பேசினார்’’ என்று எஸ்.பி.பி. குறித்து கே.பாக்யராஜ் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25 சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
செப்டம்பர் 26ம் தேதி எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், எஸ்.பி.பி. குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாக்யராஜ் தெரிவித்திருப்பதாவது:
’’மனிதனாகப் பிறந்தால், எல்லோரும் ஒருநாள் போய்த்தான் ஆகவேண்டும். இது யாருமே தவிர்க்கமுடியாத சமாச்சாரம். ஆனால், நிறையபேர் அவர்கள் உயிர் போய்விட்டது என்று நினைக்கலாம். சிலபேர் மட்டும்தான், ‘போய்விட்டார்’ என்று மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால் இந்த உலகம் இருக்கிற வரைக்கும், எல்லோர் மனதில் இருக்கிற வரைக்கும் அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்தான், நம் எல்லார் மனதிலும் இருக்கிற, மரியாதைக்குரிய எஸ்.பி.பி. அவர்கள்.
எஸ்.பி.பி.யின் மரணச் செய்தி கேட்டதில் இருந்து, அவரைப் பற்றி ஒவ்வொருவரும் டிவியில் சொன்னபோது, அதையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் பற்றிய எத்தனையெத்தனை விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் கேட்டு ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.
எஸ்.பி.பி.யைப் பற்றி எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. பெரிய வேதனையாக இருந்தது. இருந்தாலும் அவருடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
சினிமாவில், முதன்முதலாக என் கதை ஒரு கம்பெனியில் ஓகே ஆனது. சம்மதித்ததும் அந்தக் கம்பெனியில், முதன்முதலாக பாட்டு ரிக்கார்டிங் பண்ணினார்கள். ’நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்பதுதான் படம். கதை. புலவர் புலமைப்பித்தன் பாட்டு எழுதினார். தேவதாஸ் என்றொரு இசையமைப்பாளர். மெஜஸ்டிக் ஸ்டூடியோ என்பதாகத்தான் ஞாபகம். அங்கேதான் பாட்டு ரிக்கார்டிங் பண்ணினார்கள். பாலு சார்தான் வந்து பாடினார். ‘நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்கிற டைட்டில் பாடலைப் பாடினார்.
ஆனால், எல்லோருக்கும் நடப்பது போலவே, பாட்டு ரிக்கார்டிங் நடந்தாலும் படம் வெளியே வரவில்லை. இது நிறையபேருக்கு நடக்கிற சமாச்சாரம். அதற்குப் பிறகு பல போராட்டங்கள். அதன் பின்னர்தான் முன்னுக்கு வந்தேன். என்னுடைய படங்களில், எஸ்.பி.பி. நிறைய பாடல்களைப் பாடினார்.
இதில் என்னடா இது என்று நானே பார்த்து, ஆச்சரியப்பட்டுப் போனது என்னவென்றால்... என்னிடம், ‘ராஜன் நீ தெலுங்குப் படத்தில் நடி நடி’ என்று பிரவீணா சொல்லிக்கொண்டே இருப்பார். தமிழிலேயே பிஸியாக இருந்ததால், நடிக்க முடியவில்லை. தவிர, தமிழில் செய்த படத்தையே தெலுங்கில் ரீமேக் செய்ய விருப்பமில்லை.
அதனால், தெலுங்கில் படம் பண்ணாமல், ரைட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, தமிழில் மட்டுமே படங்கள் பண்ணிக்கொண்டிருந்தேன். ’இவ்வளவு சொல்கிறேன். நீ தெலுங்கில் பண்ணவே மாட்டேங்கிறியே’ என்று சொல்லிக்கொண்டிருந்தவர், ஒருநாள் என்னை வெளியே போகலாம் என்று அழைத்துச் சென்றார். ’எங்கே?’ என்று கேட்டேன். ‘நீ நடித்த தெலுங்குப் படம் காட்டுகிறேன்’ என்று சொன்னார். ’நான் நடிக்கவே இல்லியே... அப்புறம் எப்படி நான் நடிச்ச தெலுங்குப் படத்தை நீ காட்டப் போறே?’ என்று சொன்னேன். சரியென்று போய் ப்ரிவியூ பார்த்தோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ தெலுங்கில் வந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். இதில் என்ன சந்தோஷமென்றால்... எஸ்.பி.பி. சார் எனக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருந்தார். எனக்கு அவர் டப்பிங் பேச, அந்தக் குரலுடன் என்னைப் பார்த்ததும் எனக்குப் பேச்சே வரவில்லை. பிரவீணா, தன்னுடைய ஆத்ம திருப்திக்காக இப்படி டப் பண்ணியிருந்தார். பாலு சாருக்கும் இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்ததால், அவர் டப்பிங் பேசியிருந்தார்.
இன்னொரு சம்பவம்...
ஒரு விழா. பழைய நடிகர், நடிகைகள் எல்லோரையும் அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களெல்லாம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்களாக இருப்பார்கள். அவர்களையெல்லாம் அழைத்து கெளரவப்படுத்த வேண்டும் என்று டி.ஆர்.ராமச்சந்திரன் மாதிரியானவர்களையெல்லாம் அழைத்து, ஒரு விழா எடுத்தேன். அந்த விழாவிற்கு பாலு சாரும் வந்திருந்தார்.
அங்கே தெலுங்கு பேசும் நடிகர் நடிகைகள் பலர் இருந்தார்கள். அப்போது, நான் பேசும்போது, பேச்சைத் தொடங்கும் போது, தெலுங்கில் பேசினேன். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்... நான் எப்படி தெலுங்கில் பேசுகிறேன், அதுவும் இவ்வளவு ஸ்ருதி சுத்தமாகப் பேசுகிறேன் என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அப்போது, பேசிக்கொண்டிருக்கும் என் உதட்டசைவு ஒருமாதிரியாகவும் வருகிற குரல் தனியாகவும் இணையாமல் இருப்பதைப் பார்த்தார்கள். எல்லோருக்கும் குழப்பம்.
அப்போது ஸ்டேஜில் இருந்து, ஸ்டேஜின் சைடிலிருந்து பாலு சார் கையில் மைக்குடன் வந்தார். அதாவது, எல்லோருக்கு முன்பாக நானே பேசுவது போல் மைக்கில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பதிலாக ஸ்டேஜ் சைடில் நின்றுகொண்டு அவர் எனக்கு வாய்ஸ் கொடுத்தார். ’ஒரு தமாஷ்க்காக இப்படிச் செய்தோம்’ என்று பாலு சார் சொல்லிவிட்டு, என்னுடைய படங்கள் பற்றியெல்லாம் சொல்லிப் பேசினார்.
இவ்வாறு எஸ்.பி.பி. குறித்த தன் நினைவுகளை கே.பாக்யராஜ் பகிர்ந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT