Published : 26 Sep 2020 08:01 PM
Last Updated : 26 Sep 2020 08:01 PM
தமிழ் சினிமாவில் சமூக அக்கறை மிக்க கதைகளை வெற்றிகரமான திரைப்படங்களாக்கியவர் திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து விஷயங்களிலும் தனது தனித்தன்மையையும் அசாத்திய திறமையையும் நிரூபித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பவர், உச்ச நட்சத்திரங்கள் நாடிச் செல்லும் திரைப் படைப்பாளி ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று (செப்டம்பர் 25) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார்.
திரை எழுத்து மீதான நாட்டம்
கள்ளக்குறிச்சியில் பிறந்தவரான முருகதாஸ் கல்லூரியில் படிக்கும்போது கதை எழுதுவதிலும் திரைப்படங்களிலும் ஆர்வம் கொண்டார். ஒரு வாரத்துக்கு ஏழு திரைப்படங்கள் பார்த்து திரைப்படக் கலையை உள்வாங்கத் தொடங்கினார். சென்னைக்கு வந்து மூத்த கதாசிரியர் கலைமணியின் உதவியாளரானார். 'மதுரை மீனாட்சி' படத்துக்கு வசனம் எழுதினார். பிரவீண் காந்தி இயக்கத்தில் 1997இல் வெளியான 'ரட்சகன்' படத்தில் உதவி இயக்குநராகவும் அதே ஆண்டில் வெளியான 'கலுசுகுந்தம் ரா' என்னும் தெலுங்குப் படத்தில் துணை எழுத்தாளராகவும் பணியாற்றினார். அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவின் 'குஷி' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவருடைய திறமையாலும் உழைப்பாலும் கவரப்பட்ட எஸ்.ஜே.சூர்யா இவரை அஜித்துக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் அஜித் நடித்த 'தீனா' படத்தை இயக்கினார் முருகதாஸ்.
அஜித்தை 'தல' ஆக்கிய இயக்குநர்
2001-ல் வெளியான 'தீனா' அஜித்தின் ஆக்ஷன் நாயகன் இமேஜுக்கு வலுவூட்டிய படங்களில் ஒன்று. பரபரப்பான ஆக்ஷன். உணர்வுபூர்வமான சென்டிமென்ட், அழகான காதல், அதிரடியான பாடல்கள் என அஜித்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது .'தீனா', இன்றுவரை அவருடைய ரசிகர்கள் அவரைக் குறிக்கப் பயன்படும் 'தல' என்னும் அன்புமிக்க அடைமொழியையும் பெற்றுத் தந்தது. அதுவரை அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் 'தல' ஆனது இந்தப் படத்தின் மூலமாகத்தான்.
ஊழல் பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன படம்
'தீனா' வெற்றிக்குப் பிறகு அன்று மாபெரும் நட்சத்திர அந்தஸ்திலிருந்த விஜயகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய 'ரமணா' அரசு அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலுக்கு எதிரான காத்திரமான வெகுஜன சினிமாவாக அமைந்தது. அதற்கு முன்பே இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோரின் படங்களில் அரசாங்க அதிகாரிகளின் ஊழல் பிரதான பேசுபொருள் ஆகியிருந்தாலும் 'ரமணா ' படத்தின் மூலம் முருகதாஸ் பேசிய ஊழல் எதிர்ப்பும் ஊழலை ஒழிக்க இளைஞர்கள் எழுச்சியை மையமாகக் கொண்டு அவர் முன்வைத்த தீர்வும் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. அதோடு ஊழல் போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பிரச்சார நெடியில்லாமல் ஜனரஞ்சகமான அம்சங்களும் புத்திசாலித்தனமான ஐடியாக்களும் சுவாரஸ்யமான காட்சிகளும் நிரம்பிய திரைக்கதைக்குள் உள்ளடக்குவதில் அசாத்திய திறமைசாலியாக வெளிப்பட்டார் முருகதாஸ்.
புதிய விஷயங்களைப் பிரபலப்படுத்தியவர்
மூன்றாவது படமாக சூர்யா, அசினை வைத்து இயக்கிய 'கஜினி' திரைப்படத்தில் நாயகனால் எதையும் 15 நிமிடங்களுக்கு மேல் நினைவில் வைத்திருக்க முடியாது (ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்) என்னும் புதுமையான மருத்துவப் பிரச்சினையை வைத்து ஒரு சுவாரஸ்யமான பழிவாங்கல் திரைக்கதையை உருவாக்கியிருந்தார். அதே நேரம் அதில் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த கருத்துகளையும் ஆழமாகப் பதிவு செய்திருந்தார். அந்தப் படத்தில் கலகலப்பும் சமூக அக்கறையும் நிறைந்த எல்லோரையும் கவரும் வகையிலான நாயகி கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார். அதில் அசின் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 'ஏழாம் அறிவு' என்னும் தமிழ்ப் படத்தை இயக்கினார் முருகதாஸ். சூர்யாவை நாயகனாகக் கொண்டிருந்த இந்தப் படம் தமிழ் இனத்தின் தொன்மையையும் பெருமிதங்களையும் குறித்து நாம் அறியாத பல தகவல்களை விரிவாகப் பதிவு செய்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போதி தர்மர் என்னும் தமிழ் மன்னர் சீனாவுக்குச் சென்று தன் ஞானத்தாலும் வீரத்தாலும் அந்த மக்களின் பாதுகாவலராக இருந்ததோடு இன்றுவரை உலகில் உள்ள சீனர்கள் அனைவராலும் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுகிறார் என்பதே பல தமிழர்களுக்கு இந்தப் படத்தின் மூலமாகத்தான் தெரியவந்தது.
மாற்றுமொழி வெற்றிகள்
தமிழிலும், தெலுங்கு மொழிமாற்றப் பதிப்பிலும் மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற 'கஜினி' இந்தியில் ஆமிர் கான் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் பாலிவுட்டிலும் இயக்குநராகக் கால்பதித்தார் முருகதாஸ். கஜினியின் இந்திப் பதிப்பும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து முருகதாஸ் இயக்கிய 'ஸ்டாலின்' திரைப்படமும் வெற்றிபெற்றது. அதற்கு முன் 'ரமணா' படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான 'தாகூர்' படத்திலும் சிரஞ்சீவி நாயகனாக நடித்தார். அந்தப் படமும் வெற்றிபெற்றிருந்தது.
விஜய்யுடன் வெற்றிக் கூட்டணி
அஜித்தை வைத்து முதல் படத்தை இயக்கிய முருகதாஸ் பத்தாண்டுப் பயணத்துக்குப் பிறகு அஜித்தின் போட்டி நடிகரான விஜய்யுடன் கைகோத்தார். அவர்களுடைய முதல் இணைவு 'துப்பாக்கி' படத்தால் சாத்தியமானது. தீவிரவாதக் கூட்டத்தின் சதியை முறியடிக்கும் ஒரு ராணுவ வீரனின் கதையான இந்தப் படத்தில் இந்தியாவை அச்சுறுத்தும் தீவிரவாத ஆபத்துகளுக்குப் பின்னால் இயங்கும் வலைப்பின்னலை அது சார்ந்த புதிய தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார் முருகதாஸ். அதே நேரம் இந்தப் படத்திலும் காதல், சென்டிமென்ட், நகைச்சுவை என ஜனரஞ்சக அம்சங்களையும் சிறப்பாக வடிவமைத்திருந்தார்.
விஜய்யை மிக அழகாக மட்டுமல்லாமல் ஸ்டைலிஷாக உருமாற்றியிருந்தார். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பொதுமைப்படுத்தியதாகச் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. அக்ஷய் குமாரை வைத்து இந்தப் படத்தின் இந்தி மறு ஆக்கத்தை 'ஹாலிடே' என்னும் திரைப்படமாக இயக்கினார் முருகதாஸ்.
மாஸ் விஜய்யும் கிளாஸ் விஜய்யும்
மீண்டும் தமிழில் விஜய்யுடன் கைகோத்து 'கத்தி' திரைப்படத்தை இயக்கினார். விவசாயிகள் தற்கொலைக்குப் பின்னால் இயங்கும் கார்ப்பரேட் சதியைப் பரபரப்புச் செய்திகளுக்கு மட்டுமே இடமளிக்கும் சில ஊடகங்களின் வணிக நோக்கையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் 'துப்பாக்கி'யைப் போலவே ஜனரஞ்சக அம்சங்களிலும் குறை வைக்கவில்லை. அதேபோல் கதிரேசன் கதாபாத்திரத்தின் மூலம் விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற வகையிலான காட்சிகளையும் ஜீவானந்தன் கதாபாத்திரத்தின் மூலம் விஜய்யிடமிருந்து மாறுபட்ட நடிப்பு வெளிப்படும் வகையிலான காட்சிகளையும் அமைத்திருந்தார். கதிரேசன் மூலம் மாஸ் விஜய்யும், ஜீவானந்தம் மூலம் கிளாஸ் விஜய்யும் வெளிப்பட்டனர். இந்தப் படம் 'துப்பாக்கி'யைவிட மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றதோடு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.
இளைஞர்களால் அரசியல் மாற்றம்
அடுத்து மகேஷ்பாபுவுடன் இணைந்து 'ஸ்பைடர்' என்னும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தையும் விஜய்யுடன் மூன்றாம் முறையாக இணைந்து 'சர்கார்' படத்தையும் இயக்கினார்.
தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வெற்றிபெற்ற 'மெளனகுரு' படத்தை நாயகனுக்குப் பதிலாக நாயகியை மையப்படுத்தி சோனாக்ஷி சின்ஹாவை வைத்து 'அகிரா' என்னும் இந்தித் திரைப்படமாக இயக்கினார். ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைவது கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'தர்பார்' மூலம் நிறைவேறியது.
இந்த மூன்று படங்களிலுமே தன் பாணியில் சமூகப் பிரச்சினைகளைக் கையாண்டதோடு ஜனரஞ்சக அம்சங்களையும் சிறப்பாகக் கொடுத்தார் முருகதாஸ். 'சர்கார்' படத்தில் தமிழகத்தில் ஒரு வாக்காளருக்கு வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப்பட்டால் அந்த வாக்காளரின் வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது என்பதை வெகுஜன மக்களுக்குக் கொண்டு சேர்த்தது. அதோடு படித்த சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மூலம் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்தார்.
தற்போது மீண்டும் விஜய்யுடன் நான்காம் முறையாக இணையப் போகிறார். இதனிடையே 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'ரங்கூன்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராகவும் நற்பெயர் பெற்றிருக்கிறார். தற்போது த்ரிஷா நாயகியாக நடிக்கும் 'ராங்கி' திரைப்படத்துக்குக் கதை எழுதித் தயாரித்து வருகிறார்.
வெற்றி ரகசியங்களான தனிச்சிறப்புகள்
சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வது, ஷார் டெர்ம் மெமரி லாஸ், போதி தர்மர் போன்ற புதிய அதிகம் பேருக்குத் தெரியாத விஷயங்களை ஆய்வு செய்து அவற்றை வைத்து திரைக்கதை அமைப்பது, காதல், நகைச்சுவை, ஆக்ஷன், பாடல்கள் உருவாக்கம், இசை என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளடக்குவது உயிரோட்டமான கதை, சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நிறைந்த திரைக்கதை அழுத்தமான அர்த்த செறிவுமிக்க வசனங்கள்.
மாஸ் நாயகர்களின் படமென்றால் கதையின் சட்டகத்துக்குள்ளாகவே அவர்களுடைய மாஸ் இமேஜுக்கு நியாயம் செய்யும் வகையிலான காட்சிகளை உருவாக்குவது, அதே நேரம் அவர்களிடம் புதுப்பாணி நடிப்பையும் பெறுவது என முருகதாஸின் வெற்றி ரகசியங்கள் நிறைய உள்ளன. 90களில் வந்து இதேபோன்ற சிறப்பம்சங்களுடன் மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்து பிரம்மாண்ட அந்தஸ்தைப் பெற்றிருந்த ஷங்கருக்கு அடுத்து அந்த வரிசையில் வைத்துப் புகழத்தக்கவர் என்ற நிலையை அடைந்தார் முருகதாஸ். அதே நேரம் தனக்கென்று தனிப் பாணியையும் அமைத்துக்கொண்டார். அதையே தொடர்ந்து பின்பற்றிவருகிறார்.
பல தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்து இன்று திரை இயக்குநர்களில் மிகவும் மதிப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் முருகதாஸ் இன்னும் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவித்து இன்னும் பெரிய சாதனைகளை நிகழ்த்த மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT