Published : 25 Sep 2020 04:39 PM
Last Updated : 25 Sep 2020 04:39 PM
மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன் எஸ்பிபி என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக்கலைஞன். மூச்சுக்காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாகப் பண்பின் சிகரமாக இறுதி உரையிலும் வெளிப்படுத்தியவன். இதுவரை மக்களுக்குப் பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான். போய் வா தம்பி"
இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT