Last Updated : 22 Sep, 2020 03:38 PM

2  

Published : 22 Sep 2020 03:38 PM
Last Updated : 22 Sep 2020 03:38 PM

அந்தக் காலத்திலேயே 11 வேடங்கள்; உளவியல் கதை; துப்பறியும் கதை!  ஹீரோவாக அசத்திய நம்பியார்; ‘திகம்பர சாமியார்’ வெளியாகி 70 ஆண்டுகள்

பிரபுதேவா இயக்கி, விஜய் நடித்த படம் ‘போக்கிரி’. இதில் பிரகாஷ்ராஜை கைது செய்வார் விஜய். அப்போது பிரகாஷ்ராஜை விடியவிடிய தூங்கவிடாமல் டார்ச்சர் பண்ணுவார். அவ்வளவுதான். ‘ஒரு மனிதனை நான்குநாட்கள் தூங்கவிடாமல் வைத்திருந்தால், ஐந்தாம்நாள் அவனுடைய மனதில் இருக்கும் ரகசியங்களையெல்லாம் அவனுடைய வாயாலேயே கேட்டு அறிந்துகொள்ளலாம்’ எனும் உளவியல் சார்ந்த விஷயத்தை வைத்துக்கொண்டு, அந்தக் காலத்திலேயே படம் பண்ணியிருக்கிறார்கள். அந்தப் படம்... ‘திகம்பர சாமியார்’. ஏதோ... இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்று நினைத்துவிடாதீர்கள். ‘திகம்பர சாமியார்’ படம் வெளியாகி 70 வருடங்களாகின்றன.

எழுபது வருடங்களுக்கு முன்பு, படமெடுத்தால் அது புராணக் கதையைக் கொண்ட படமாக இருக்கும். ராஜா ராணிக் கதைகளையே படமாக எடுத்தார்கள். சமூகப் படங்களாக எடுத்தது குறைவுதான். அப்படியே எடுத்தாலும் காதல் கதை கொண்ட படங்களாகத்தான் எடுத்தார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் வரை, தேச பக்தியை மையமாகக் கொண்ட படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் காலத்திலேயே, சமூகக் கதையாக, துப்பறியும் கதையாக, த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்டதுதான் ‘திகம்பர சாமியார்’.

நாவல்களைப் படமாக்குவது என்பதெல்லாம் இப்போது எவரும் யோசிக்கவே யோசிக்காத காரியம். ஆனால் ஐம்பதுகளில் நாவல்களைப் படமாக்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி நாவலை மிக அழகாக, படமாக்கினார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவர் எழுதிய நாவல், சினிமாவாக, தெளிவான திரைக்கதையாக மாற்றப்பட்டது. அதுதான் ‘திகம்பர சாமியார்’.

நாடகங்களில் நடித்து வந்த எம்.என்.நம்பியார், 35ம் ஆண்டு ‘பக்த ராமதாஸ்’ படத்தின் மூலமாக திரையுலகிற்குள் வந்தார். பின்னர் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றினார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு ‘திகம்பர சாமியார்’ படத்தில் நடித்தார். முன்னதாக, குணச்சித்திர ரோல், காமெடி ரோல் என்றெல்லாம் பண்ணியவர் வில்லனாகவும் நடித்தார். ‘திகம்பர சாமியார்’ படத்தில் நம்பியார்தான் ஹீரோ. எத்தனையோ படங்களில், நம்பியார் செய்யும் தவறுகளைக் கண்டுபிடிக்கும் போலீஸ். இந்தப் படத்தில், நம்பியார்த்தான் அட்டூழியங்களைக் கண்டுபிடிப்பார்.

மாடர்ன் தியேட்டர்ஸ், அந்தக்காலத்தில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று. மாடர்ன் தியேட்டர்ஸ் படமென்றாலே, அது வித்தியாசமாகத்தான் இருக்கும். குடும்பத்தார், பெண்கள் என்கிற டார்கெட்டுகளுக்குள் அடங்காமல், படமெடுக்கும் நிறுவனம். ஆச்சரியங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் த்ரில்லிங்கும் சஸ்பென்ஸும் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டைல். ‘திகம்பர சாமியார்’ படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான் தயாரித்தது.
விஞ்ஞானம், உளவியல், க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் என்று பல விஷயங்களை அப்போதெல்லாம் எடுக்கமாட்டார்கள். ஆனால் இவை அனைத்தையும் கொண்டு அந்தக் காலத்திலேயே படமாக எடுத்தார்கள். ‘திகம்பர சாமியார்’ படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க, டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். மருதகாசி, கா.மு.ஷெரீப், கே.பி.காமாட்சி, தஞ்சை ராமையா தாஸ், கண்ணதாசன் முதலானோர் பாடல்களை எழுதினார்கள். படத்தில் லலிதா, பத்மினி, ராகினி சகோதரர்கள் ஆடுகிற ஆட்டமும் பாடலும் வெகு பிரபலம்.

எம்.ஜி.சக்ரபாணி, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி முதலானோர் நடித்திருந்தார்கள். பாடல்களும் காட்சி அமைப்புகளும் பேசப்பட்டன. ஜி.ராமநாதனும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் சேர்ந்து இசையமைத்திருந்தார்கள். பாடல்கள் பலவும் இந்திப் பாடல்களின் ஸ்டைலில் மெட்டமைக்கப்பட்டன. மேலும் இந்திப் பாடல்களைப் போலவே வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

இன்றைக்கும் இந்தப் படம் பேசுபொருளாக இருப்பதற்கு, படத்தின் கதை, நுட்பமான திரைக்கதை, கதையில் இருக்கும் அறிவியல், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகள் என பலதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, முதலிடத்தில் இருப்பது... இருப்பவர்... ஹீரோ... எம்.என்.நம்பியார்.
நம்பியாரின் நடிப்பு, அசத்தல். அற்புதம். அபாரம். படத்தில், செவிட்டு மந்திரவாதி, வெற்றிலை வியாபாரி, நாகஸ்வர வித்வான், இஸ்லாமியர், போஸ்ட்மேன் முதலான 11 வேடங்களில் நடித்து, பிரமிப்பூட்டினார் நம்பியார்.

‘ஒருவர் நான்குநாட்களாக தூங்காமல் இருந்தால், ஐந்தாம்நாள் அவரிடமிருந்து ரகசியங்களை வாங்கிவிடலாம்’ என்பதை அழகாகக் காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மாடுலேஷன்கள், பாடி லாங்வேஜுகள், டயலாக் டெலிவரி என்று வெரைட்டி காட்டியிருப்பார் நம்பியார்.

1950ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியானது ‘திகம்பர சாமியார்’. படம் வெளியாகி இன்றுடன் 70 ஆண்டுகளாகின்றன.

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ‘திகம்பர சாமியார்’ படத்தையும் நம்பியாரையும் நம்பியார் குருசாமியையும் மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x