Published : 17 Sep 2020 03:48 PM
Last Updated : 17 Sep 2020 03:48 PM
பிரமிட் பிலிம்ஸ் வி.நடராஜன் தயாரிக்க, அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் முதலானோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் வெளியானது ‘ரிதம்’. தலைப்புக்கு ஏற்றது போல், படத்தை அழகிய ஸ்ருதியுடனும் லயத்துடனும் அமைத்திருந்தார். அல்லது அப்படி அமைத்த இந்தப் படத்துக்கு இப்படியொரு பெயரைச் சூட்டியிருந்தார்.
எல்லோரும் பார்க்கிற படமாக, எப்போதும் பார்க்கிற படமாக, இன்றைக்கும் மறக்க முடியாத படமாக அமைந்ததுதான் ‘ரிதம்’ படத்துக்குக் கிடைத்த வெற்றி. 2000மவாது ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியானது இந்தப் படம்.20 ஆண்டுகளாகின்றன.
‘ரிதம்’ அனுபவங்கள் குறித்து இயக்குநர் வஸந்த் எஸ்.சாயிடம் (வஸந்த்) கேட்டோம்.
’’ ‘ரிதம்’ படத்துக்கான கதை முடிவானதுமே நான் வைத்த தலைப்பு ‘ரிதம்’தான். வாழ்க்கையின் ‘ரிதம்’ என்றுதான் படத்தின் கதையையும் தலைப்பையும் ‘ரிதம்’ எனும் விஷயத்தையும் பார்த்தேன். பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனக் கொண்டதுதானே வாழ்க்கை.
‘வாழ்க்கை சந்தோஷமா இருக்கா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்றுதான் சொல்லுவோம். ’சரி... தினமும் வருத்தமாத்தான் இருக்கா?’ என்று கேட்டால், உண்மையாக பதில் சொல்வதாக இருந்தால், அதற்கும் ‘இல்லை’ என்றுதான் பதில் வரும். அப்படின்னா, வாழ்க்கை எப்படி இருக்கு? ஒருநாள் வருத்தமா இருக்கு, ஒருநாள் சந்தோஷமா இருக்கு.
வாழ்க்கையை நான் எப்படிப் பாக்கிறேன்னா... தினமும் நைட் மட்டுமா இருக்கு? பகலும்தானே இருக்கு. அதேபோல விடியாத இரவென்று ஒன்று கிடையவே கிடையாது. முடியாத துன்பம்னு ஒண்ணு கிடையவே கிடையாது.
எனக்கு இது ரொம்பப் பிடிக்கும். பின்னாடி படம் பண்ணும்போது, ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாட்டுல, நா.முத்துக்குமார்கிட்ட சொன்னேன். அவர் எழுதிக்கொடுத்தார்... ’வளைவில்லாமல் மலை கிடையாது, வலியில்லாமல் மனம் கிடையாது, வருந்தாதே வா’ன்னு அற்புதமான வரிகளை எழுதியிருந்தார். எங்கேயாவது, மலைல ஏறணும்னா... வளைஞ்சு வளைஞ்சுதான் போகணும். வாழ்க்கையோட உயரத்துக்குப் போகணும்னா, நாம வளைஞ்சு வளைஞ்சுதான் போயாகணும்.
வளையறதெல்லாம் வலின்னு நினைச்சா, வலியில்லாம மனம் கிடையாது. வருந்திக்கிட்டே இருக்கக்கூடாது. அந்த வருத்தங்களையெல்லாம் விட்டுட்டு மேலே போகணும். இதுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். அதாவது, வாழ்க்கைங்கறது தினமும் சந்தோஷமாவும் இருக்கறதில்ல; வருத்தமாவும் இருக்கறதில்ல. அது, சந்தோஷத்திலேருந்து வருத்தத்திற்கும் வருத்தத்திலேருந்து சந்தோஷத்திற்குமான ஒரு வட்டச்சுழல். ஒரு சக்கரம் மாதிரி போயிக்கிட்டே இருக்கு. ஆக, அதுல நாம போயிகிட்டே இருக்கணும். பயணம் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
வாழ்க்கைங்கறதே ரொம்ப அபூர்வமான விஷயம். அவ்வையார் சொன்னது மாதிரி ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’. நாம ஒரு கொசுவாப் பிறந்திருந்தோம்னா, ஒருநிமிஷம் ‘பேட்’ல அடிச்சுப் போட்டுருப்பாங்க. நாம எவ்வளவோ ஜென்மங்கள்ல, எவ்வளவோ புண்ணியங்கள் பண்ணி மனுஷனாப் பொறந்திருக்கோம். அதனால, மனுஷனாப் பொறந்த முக்கியத்துவத்தை உணரணும்.
ரொம்ப ஈஸியா, எல்லா விஷயத்துக்காகவும் இப்போ தற்கொலை பண்ணிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. பரிட்சைக்காக தற்கொலை பண்ணிக்கறது, காதலுக்காக தற்கொலை பண்ணிக்கறதுன்னு எதுக்காகவுமே தற்கொலை பண்ணிக்கறது தப்புன்னு நினைக்கிறேன். இதை வேற விதமா ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்துல கூட சொல்லிருப்பேன்.
இதையெல்லாம் எதுக்காகச் சொல்றேன்னா, இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘ரிதம்’ படத்தோட தீம். ஆகவே, வாழ்க்கைங்கறது வாழ்றதுக்கு. எது நடந்தாலும் வாழணும். ரொம்பப் பிடிச்சவங்க இறந்து போயிட்டாங்கன்னா, அதுக்காக நாமளும் இறந்துபோயிடமுடியாது. நாம வாழணும். அட்லீஸ்ட்... நமக்கு ரொம்பப் பிடிச்சவங்க, எதுக்காகலாம் வாழ்ந்தாங்களோ, அதுக்காகவாவது வாழணும். அதுதான் வாழ்க்கைன்னு நான் நினைக்கிறேன். அதுதான் தீம். அதுக்காகத்தான் ’ரிதம்’ங்கற படமே எடுத்தேன். வாழ்க்கையும் ரிதம் மாதிரி இருக்கணும். பர்ஃபெக்ட்டா இருக்கணும். இசையோட தளம் ஒரு ரிதத்தோட எப்படி இருக்கோ, வாழ்க்கையும் அப்படி சரியா இருக்கணும்.
அதுக்காகத்தான் ‘ரிதம்’னு டைட்டில் வைச்சேன். அதையும் தவிர, ரஹ்மானோட இசை. முதன்முதல்ல ரஹ்மானோட சேர்ந்து பண்றேன். இசை சம்பந்தமா ஒரு டைட்டில் இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதையும் தாண்டி... ‘இசைபட வாழ்தல்’தானே. அதுதான் ரிதம்’’
என்று இயக்குநர் வஸந்த் எஸ். சாய் தன் ‘ரிதம்’ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT