Published : 17 Sep 2020 12:46 PM
Last Updated : 17 Sep 2020 12:46 PM

’வேட்டைக்காரன்’ இயக்குநர் பாபு சிவன் காலமானார்

சென்னை

விஜய் நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' படத்தின் இயக்குநர் பாபு சிவன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 54.

இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் பாபு சிவன். விஜய் - தரணி இணைப்பில் உருவான 'குருவி' படத்தின் கதையை உருவாக்கியவர். அதனைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தை இயக்கினார் பாபு சிவன். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால், விஜய் நடித்த 'பைரவா' படத்தின் கதை உருவாக்கத்திலும் கலந்துகொண்டார்.

இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ராசாத்தி' சீரியலை இயக்கி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று பாபு சிவன், மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்துள்ளார். அப்போது அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றில் பிரச்சினையிருந்ததால் பாபு சிவனின் உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அவரைச் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், கண் முழிக்காமலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு (செப்டம்பர் 16) சிகிச்சை பலனளிக்காமல் பாபு சிவன் மரணமடைந்துள்ளார். இவருக்குத் திருமணமாகி 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இவருடைய மறைவு திரையுலகினரையும், விஜய் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'வேட்டைக்காரன்' படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'வேட்டைக்காரன்' இயக்குநர் பாபு சிவனின் திடீர் மரணம் பற்றிக் கேள்விப்பட்டு நான் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். அவர் மிக எளிமையான மனிதர். 'வேட்டைக்காரன்’ படத்தில் எனது சிந்தனைகள் முழுவதையும் செயல்படுத்த முழு சுதந்திரம் கொடுத்தார். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள், ஆறுதல்கள்".

இவ்வாறு விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x