Published : 16 Sep 2015 02:21 PM
Last Updated : 16 Sep 2015 02:21 PM
திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.
இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் திறன் சபையின் தலைவர் கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத் துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஓர் அங்கமாகும். இதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் 11.24 லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் இந்த சபை பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தில் பங்கேற்று இந்தியா முழுவதிலும் 5000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் திறன் சபையின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திரைத் துறையைச் சேர்ந்த 10,000 தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை ஏற்பாடு செய்யவுள்ளார். இது, பிரதமர் நரேந்திர மோடியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது.
இது பற்றி தி இந்துவுக்கு (ஆங்கிலம்) அளித்த பேட்டியில் பேசியுள்ள கமல்ஹாசன், "நீண்ட நாட்களாக தாமதிக்கப்பட்ட இந்த முயற்சியை தற்போது பல்வேறு மொழிகளைச் சார்ந்த திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் முன்னெடுத்துள்ளனர். இந்த பயிற்சி முகாம் சென்னையில், நவம்பர் மாதம் மூன்று நாட்கள் நடைபெறும். இதன் மூலம் நமது தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சர்வதேச தொழில்நுட்பங்களில், அதே தரத்தில் பயிற்சியளிப்பதே நோக்கம். இது துறையில் உள்ளவர்களாலேயே நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையச் சேர்ந்த பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும் இதற்காக பணியாற்றவுள்ளார்கள்.
தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளவே இப்படியான முகாம் நடக்கிறது என யாரும் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. இத்தகைய பயிற்சி வளர்ந்து வரும் திரைத்துறையை மேம்படுத்தி, மற்ற பெரிய துறைகளைப் போல அங்கீகாரம் பெற்றுத் தரும்.
இந்த முகாமிற்கு துறையில் உள்ள நிபுணர்கள் வரவழைக்கப்படுவார்கள். சரியான பயிற்சியில்லாமல் ஆபத்தான வேலைகளை செய்யும், ஸ்டண்ட் கலைஞர்கள், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களிடமே எங்கள் கவனம் உள்ளது. அவர்களுக்கு உரிய பயிற்சி தரப்படும்.
ஏன், நீண்ட நாள் அடிப்படையில் தொடர்ந்து பயிற்சி அளித்து ஒரு காலத்தில் 'ஆடை வடிவமைப்பில் டாக்டர்' போன்ற பட்டத்தைக் கூட நாம் தரலாம்" என்று கூறினார்.
மேலும், இந்த பயிற்சி முகாமை எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் நடத்தவில்லை என்றும், மத்திய அரசே நடத்துகிறது என்றும் கமல்ஹாசன் தெளிவுபடுத்தினார்.
தற்போது தமிழ் திரையுலகில் அடிக்கடி பணப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்களைப் பற்றியும், இதனால் பட வெளியீடு தாமதமாவதைப் பற்றியும் கேட்டபோது, "சினிமா வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் இன்னும் 10 மடங்கு கூட துறை வளரும்.
கட்டபொம்மன் வியாதியில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் அரசுக்கு வரில் செலுத்த மாட்டோம் என்பது. வெள்ளையர்கள் வெளியேறி நம்மை நாமே ஆள்கிறோம் என்ற நிலையிலும் இப்படியே பேசுகிறார்கள். துறையிலுள்ள பணம் முறைபடுத்தப்பட்டால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT