Published : 14 Sep 2020 08:53 PM
Last Updated : 14 Sep 2020 08:53 PM
'நோஞ்சான்' வார்த்தையால் உருவான சர்ச்சைக்கு பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 14) காலை சென்னையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் தலைவர் பாரதிராஜா, செயலாளர் டி.சிவா, பொருளாளர் தியாகராஜன் மற்றும் இதர நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் அலுவலகம் திறந்தவுடன் பத்திரிகையாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒப்பிடு குறித்த கேள்விக்கு "வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, 1000 பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள்" என்று பதிலளித்தார் தலைவர் பாரதிராஜா
இதில் நோஞ்சான் என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை மிகவும் கோபமடைய வைத்தது. பலரும் பாரதிராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆடியோ வெளியிட்டு வருகிறார்கள். இதனால் சர்ச்சை உண்டானது.
இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்"என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
திரைத் துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை.
இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்"
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT