Published : 10 Sep 2020 09:46 PM
Last Updated : 10 Sep 2020 09:46 PM
விவேகா இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் முன்னணிப் பாடலாசிரியர்களில் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் வேடங்குளம் கிராமத்தில் பிறந்த இவர் இன்று (செப்டம்பர் 10) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான விவேகாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் விவேகானந்த வீர வைரமுத்து. விவேகானந்தன் என்ற பெயரில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உடன்படித்த நண்பர்கள் இவரை விவேகா என்றழைக்க அதுவே இவருடைய அடையாளமாகிப்போனது.
விவேகாவின் தந்தை தெருக்கூத்து வாத்தியார். தெருக்கூத்து கலைஞர்களுக்குப் பாட்டு, வசனம் கற்றுக்கொடுத்தார். தந்தை ஒத்திகை செய்த தெருக்கூத்துகளுக்கு விவேகாவும் பாடல்களை எழுதிக்கொடுத்தார். தெருக்கூத்துக்குத் தேவைப்படும் வகையில் பழைய பாடல்களுக்கு புதிய வரிகளை நிரப்பி பாடல்களை எழுதியதன் மூலம் மெட்டுக்குப் பாட்டெழுதும் கலை அவருக்கு கைவரப்பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வந்தவர்களில் சினிமாவில் சாதித்த முதல் கலைஞர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. ராஜகுமாரன் இயக்கத்தில் 1999-ல் வெளியான 'நீ வருவாய் என' படத்தில் நாயகி பாடுவதுபோல் அமைந்த 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா' என்கிற பாடலை எழுதினார். இதுவே தமிழ் சினிமாவில் விவேகாவின் முதல் தடம். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அமைந்த இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்ததாக விக்ரமன் இயக்கத்தில் 'வானத்தைப் போல' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மைனாவே மைனாவே' பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விவேகாவை மேலும் பிரபலமடைய வைத்தது. இயக்குநர் லிங்குசாமியின் அறிமுகப் படமான 'ஆனந்தம்' படத்தில் இவர் எழுதிய 'என்ன இதுவோ என்னைச் சுற்றியே' பாடலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. லிங்குசாமி அடுத்ததாக இயக்கிய 'ரன்' படத்தில் வித்யாசாகர் இசையில் 'மின்சாரம் என் மீது பாய்கின்றதே' பாடல் நகர்ப்புற உயர்தட்டு இளைஞர்களிடையேயும் இவரைக் கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் விவேகா. கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார். அஜித், விஜய் இருவருக்கும் பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் ஒரே நாளில் வெளியான 'வீரம்', 'ஜில்லா' இரண்டு படங்களுக்கும் தீம் பாடலை எழுதியவர் விவேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது. 'வீரம்' படத்துக்கு இவர் எழுதிய 'ரஜ கஜ துரக பதாதிகள்' என்கிற பாடலைக் கேட்டு அஜித் இவரைப் பாராட்டியிருக்கிறார்.
விஜய்க்கு இவர் எழுதிய பாடல்களில் 'நண்பன்' படத்தில் 'என் ஃப்ரெண்டப்போல யாரு மச்சான்', 'வேட்டைக்காரன்' படத்தில் 'ஒரு சின்னத் தாமரை', 'வேலாயுதம்' படத்தில் 'மொளச்சு மூணு எலையே விடல' உள்ளிட்ட பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. அஜித்துக்கு 'வீரம்' படத்தின் அனைத்துப் பாடல்களும் 'விஸ்வாசம்' படத்தில் 'வானே வானே' பாடலும் மிகவும் புகழடைந்தவை. விக்ரம் நடித்த 'கந்தசாமி', சூர்யா நடித்த 'சிங்கம் 2' உள்ளிட்ட சில படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் விவேகா. சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' படத்தில் இவர் எழுதிய 'கருத்தவன்லாம் கலீஜாம்' என்னும் பாடல் எளிய மக்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிரான போர்க்குரலாக ஒலித்தது.
கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' படத்தில் 'ஒய்ய ஒய்ய', 'உத்தம வில்லன்' படத்தில் 'சிங்கிள் கிஸ்கே லவ்வா' பாடலை எழுதினார். தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் 'அண்ணாத்த' படத்துக்கும் பாடல் எழுதியுள்ளார் விவேகா. இப்படியாக இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட விவேகா தன் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்கிறார்.
மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் பெரும் வல்லமை பெற்றவர் விவேகா. மிக வேகமாகப் பாடல்களை எழுதக் கூடியவர். 'கந்தசாமி' படத்தில் இடம்பெற்ற 'என் பேரு மீனாகுமாரி' என்னும் வெற்றிப் பாடலை 15 நிமிடங்களில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்துகொண்டு ரசிக்கக்கூடிய வகையில் பாடல்களை எழுதுபவர் என்று பலரால் பாராட்டப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் பிரபஞ்சனிடமிருந்து 'மக்கள் மொழிக் கவிஞர்' என்ற விருதைப் பெற்றிருக்கிறார். வாலி போன்ற மூத்த கவி ஆளுமைகளும் இவரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
திரைப் பாடல்களைத் தாண்டி இவர் எழுதிய பல நூறு கவிதைகள் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன. 'உயரங்களின் வேர்' என்னும் கவிதைத் தொகுப்பு 2004-ல் வெளியிடப்பட்டது.
பலவகையான கதைகளுக்கும் சூழல்களுக்கும் பொருத்தமான பாடல்களை எழுதி மக்கள் மனதுக்கு நெருக்கமான திரைத் துறையினருக்குப் பிடித்தமான பாடலாசிரியராக நிலைபெற்றிருக்கிறார். அவர் இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதி சாதனைகளை நிகழ்த்த வேண்டும். விருதுகளும் புகழ்மாலைகளும் அவரைத் தேடி வர வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT