Published : 10 Sep 2020 06:22 PM
Last Updated : 10 Sep 2020 06:22 PM

சின்மயி பிறந்த நாள் ஸ்பெஷல்: பன்மொழிகளில் சாதித்த பன்முகக் கலைஞர் 

சென்னை

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரும் சிறந்த குரல் கலைஞரும் பன்மொழிப் புலமை பெற்றவருமான சின்மயி இன்று (செப்.10) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

சிறு வயது சாதனைகள்

சிறு வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் தொடங்கிய சின்மயி கர்நாடக சங்கீதம் இந்துஸ்தானி திரை இசை ஆகியவற்றுக்கான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக இசையில் இளம் திறமையாளர்களுக்கான இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற்றவர். அனைத்திந்திய வானொலியால் நடத்தப்பட்ட கஸல் போட்டியில் தங்கப்பதக்கமும் இந்துஸ்தானி இசைப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர். பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய 'ஸப்தஸ்வரங்கள்' பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். அவருக்குத் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்க இது முக்கியப் பங்காற்றியது.

அனைவரையும் ஈர்த்த முதல் பாடல்

மணிரத்னம் தயாரித்து இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்னும் மிகக் கடினமான இசையமைப்பையும் உணர்வு வெளிப்பாடுகளையும் கொண்டிருந்த சவாலான பாடல் சின்மயி பாடிய முதல் திரைப்படப் பாடலாக அமைந்தது. இந்தப் பாடலின் தெலுங்குப் பதிப்பான 'ஈ தேவி வரமு நீவோ' என்ற பாடலையும் சின்மயி பாடினார். இந்தப் பாடலின் ஆண் வடிவத்தை தமிழில் மூத்த பாடகர் ஜெயச்சந்திரனும் தெலுங்கில் இன்னொரு மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. முதல் பாடலிலேயே தமிழ். தெலுங்கு திரை இசை ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சின்மயி. கடினமான உள்முடிச்சுகள் கொண்ட அந்தப் பாடலை மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் உயிரோட்டத்துடனும் பாடி அனைவரையும் அசத்தினார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் தொடர்ந்து பாடிவந்தார்.

பன்மொழி வெற்றிகள்

தமிழில் தேவா, வித்யாசாகர், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் எனப் பல முன்னணி இசையமைப்பாளர்கள் சின்மயியைப் பாடவைத்தனர். மெலடி, சோகப் பாடல், ஜாலியான வேகமான பாடல்கள் என அனைத்து வகையான பாடல்களுக்கும் தன் குரலைப் பொருத்தமானதாகவும் தனித்துவம் மிக்கதாகவும் ஒலிக்க வைத்தார் சின்மயி. இதனால் அவருக்குப் பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன. இசைப்புயலால் அறிமுகப்படுத்தப்பட்டவர் 'விஸ்வ துளசி' படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் முதல் முறையாகப் பாடினார்.

தேடிவந்த தேசியப் புகழ்

2008-ல் வெளியான 'மங்கள் பாண்டே:தி ரைசிங்' படத்தில் ரஹ்மான் இசையில் 'ஹோலி ரே' பாடலைப் பாடியதன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார். மணிரத்னத்தின் 'குரு' படத்தில் இடம்பெற்ற 'தேரே பீனா', 'மையா மையா' பாடல்கள் சின்மயியை தேசிய அளவில் புகழடைய வைத்தன. இவற்றின் தமிழ், தெலுங்கு வடிவங்களையும் சின்மயி பாடினார். அவையும் வெற்றிபெற்றன.

தொடர்ந்து தென்னிந்தியத் திரைப்படங்களில் வெற்றிகரமாக இயங்கிவருகிறார். 18 ஆண்டுகளில் ஆயிரம் பாடல்களைக் கடந்துவிட்டார். இந்திப் படங்களிலும் அவ்வப்போது பாடுகிறார். முன்னணி இசையமைப்பாளர்களாலும் புதிய இசையமைப்பாளர்களாலும் நாடப்படும் பாடகராகத் திகழ்கிறார். ரசிகர்கள் பலரின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கிறார்.

காவியத்துக்கு உயிரூட்டிய குரல்

2018-ல் வெளியான காதல் காவியமான '96' ஒரு பாடகராக சின்மயியின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சின்மயி பாடினார். பாடல்களின் வெற்றியே அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியது. படத்தோடு பார்க்கும்போது இசை மட்டுமல்லாமல் சின்மயியின் குரலும் பிரிந்த காதலர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் மென்சோகத்தை இழையோட விட்டிருந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற 'காதலே காதலே தனிப்பெரும் சுவையே' பாடல் அனைத்து வயதுக் காதலர்களின் தேசிய கீதமானது.

தன்னிகரற்ற குரல் கலைஞர்

பாடகராக இருந்துகொண்டே தென்னிந்திய, இந்தி சினிமாவின் முக்கியமான பின்னணிக் குரல் கலைஞராகவும் வெற்றிகரமாக இயங்கிவருபவர் சின்மயி. தமிழ், தெலுங்கு,மலையாளம். இந்தி, வங்கம், ஆங்கிலம், ஜெர்மன் எனப் பல மொழிகளை அறிந்தவர் சின்மயி, இந்தப் பன்மொழிப் புலமை அவரை வெற்றிகரமான பின்னணிக் குரல் கலைஞராக ஆக்கியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'விண்ணைத்தாண்டி வருவாயா', அதன் தெலுங்குப் பதிப்பான 'யே மாயா செஸாவே', இந்திப் பதிப்பான 'ஏக் தீவானா தா' என மூன்று மொழிகளிலும் நாயகியரான த்ரிஷா. சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோருக்கு பின்னணிக் குரல் கொடுத்து அரிய சாதனை நிகழ்த்தினார் சின்மயி. அதேபோல் நயன்தாரா, சமந்தா, தமன்னா, சமீரா ரெட்டி என பல நட்சத்திர நடிகைகளுக்கு தமிழ், அல்லது தெலுங்கில் குறிப்பிடத்தக்கப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் சின்மயி.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கமல்ஹாசனின் தெலுங்குக் குரலாக அறியப்படுவதுபோல் சமந்தாவின் தெலுங்குக் குரலாக அறியப்படுபவர் சின்மயி. '96' படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடியதோடு அதில் நாயகியாக நடித்த த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் சின்மயி. இரண்டாம் பாதியில் ராம்-ஜானு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்தான் மிகப் பெரிய பங்கு வகித்தது எனும்போது அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு பின்னணிக் குரல் கலைஞராகவும் சின்மயியின் தவிர்க்க முடியாத பங்களிப்பை உணர முடியும்.

வியத்தகு விருதுகள்

சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறையும் ஆந்திர அரசின் நந்தி விருதை நான்கு முறையும் தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை ஐந்து முறையும் வென்றார். மராத்திய மொழியில் 'சாய்ரத்' படத்துக்கு இவர் பாடிய பாடலுக்காக மராத்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார். 'யே மாயே செஸாவே' படத்தில் சமந்தாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததற்காகச் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தேசிய விருதை வென்றார். இன்னும் பல விருதுகளை வென்றிருக்கிறார்.

பிற திறமைகள்

பாடகர், பின்னணிக் குரல் கலைஞர் ஆகியவற்றைத் தாண்டி தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல், பாடல்கள் வெளியீடு, விருது விழா உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குதல் ஆகியவற்றிலும் சின்மயி தன்னுடைய தனி முத்திரையைப் பதித்திருக்கிறார். இது தவிர தன்னுடைய பன்மொழி அறிவைப் பயன்படுத்தி ப்ளூ எலிஃபண்ட் எனும் மொழிபெயர்ப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

மீடூ-இயக்கத்தின் தமிழ் முகம்

2018-ல் சர்வதேச அளவில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் மீடூ (Me Too) இயக்கம் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது முதல் முறையாக மீடூ குற்றச்சாட்டை துணிச்சலாக முன்வைத்து தமிழகத்திலும் மீடூ இயக்கத்தை தொடங்கி வைத்தவர் சின்மயி. தான் பாதிக்கப்பட்ட கதையை மட்டுமல்லாமல் தன்னைப் போல் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகி அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் மற்ற பெண்களின் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து அவற்றில் தொடர்புடைய ஆண்களை அம்பலப்படுத்தினார். இதனால் ட்விட்டர் உட்பட பல பொதுத் தளங்களில் அவமானங்களுக்கும் ஆபாசத் தாக்குதல்களுக்கும் ஆளானார். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து குரலெழுப்பிவருகிறார். அந்தக் குற்றங்களைச் செய்தவர், ஆதரிப்பவர் யாராக இருந்தாலும் அவரைத் துணிச்சலாகக் கண்டிக்கிறார். பெண்கள் உரிமைகளுக்கான முக்கியமான குரலாகவும் இயங்கிவருகிறார் சின்மயி.

ஒரு பாடகராக, பின்னணிக் குரல் கலைஞராக, பன்மொழித் திறமையாளராக, நிறுவன அதிபராக, பெண்களுக்காகக் குரல் கொடுப்பவராக பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் சின்மயி, இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி நீங்காப் புகழடைய மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x