Published : 26 Aug 2020 08:34 PM
Last Updated : 26 Aug 2020 08:34 PM
அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்தை எப்படி உருவாக்கினேன் என்று ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
'துப்பாக்கி', 'கத்தி', 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது விஜய்க்கு நெருக்கமானவராக ஏ.ஆர்.முருகதாஸ் மாறினாலும், அவர் இயக்குநராக அறிமுகமானது அஜித் நடித்த 'தீனா' படத்தில்தான்.
அஜித், சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 'தீனா' படத்தில்தான் அஜித்துக்கு 'தல' என்ற பெயர் வைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 'தல' என்றுதான் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அந்தப் படத்துக்குப் பிறகு பலமுறை அஜித் படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று செய்திகள் வெளியானாலும், அது நடைபெறவே இல்லை.
இந்தக் கரோனா ஊரடங்கில் டோக்கியோ தமிழ்ச் சங்கத்துக்கு இணையம் வழியே பேட்டியளித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் உதவி இயக்குநராக கஷ்டப்பட்டது, அஜித்துடனான நட்பு, விஜய்யுடனான நட்பு, பாலிவுட் என பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் 'தீனா' படம் உருவான விதம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசியிருப்பதாவது:
"நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தியிடம் நான் ஒரு கதை சொன்னேன். 'அமர்க்களம்' வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்னால் நான் அவரிடம் கதை சொன்னேன். அவர் 'அமர்க்களம்' பார்த்திருந்தார். நான் சொன்ன கதையைக் கேட்டு கதை மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால், இப்போதுதான் 'அமர்க்களம்' என்ற அடிதடி, ரவுடி கதாபாத்திரம் முடித்திருக்கிறார். மீண்டும் அதே போல வேண்டாம். உங்களுக்கு நல்ல திரைக்கதை அறிவு இருக்கிறது. எனவே வேறு கதையை எடுத்து வாருங்கள் என்றார். சரி என்று நானும் வந்துவிட்டேன்.
'அமர்க்களம்' வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. பின் சக்கரவர்த்தி மீண்டும் என்னை அழைத்தார். அந்தக் கதையை இன்னொரு முறை சொல்லுங்கள் என்றார். நான் மீண்டும் சொன்னேன். இதில் இரண்டு மூன்று விஷயங்களில் எனக்குத் திருப்தியில்லை, நீங்கள் தயார் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு 'சிட்டிசன்' படம் ஆரம்பித்தார். நான் எனது கதைக்கான டிஸ்கஷனில் இருந்தேன்.
'ரெட்டை ஜடை வயசு' தயாரிப்பாளருக்கு அஜித் இன்னொரு படம் செய்து தருவதாகக் கூறியிருந்தார். அவர் பெயர் கார்த்திக். அஜித்தின் நண்பர். அவர்கள் ஒரு படம் ஆரம்பித்திருந்தனர். ஆனால், அந்த இயக்குநரின் நடவடிக்கை சரியில்லாததால் வேறொரு இயக்குநரைத் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது சக்கரவர்த்தி எனது பெயரையும், நான் சொன்ன கதை பற்றியும் சொல்லியிருக்கிறார். அவர்கள் மீண்டும் என்னை அழைத்தார்கள். சென்றேன். கதை சொன்னேன்.
வழக்கமாக சினிமாத் துறையில் ஆடி மாதத்தில் புதிதாக எதுவும் தொடங்க மாட்டார்கள். நான் கதை சொன்னபோது ஆடி மாதத்துக்கு ஒரு வாரம்தான் இருந்தது. எனவே, ஆடி பிறப்பதற்கு முன்னால் தயாரிப்பாளர் எனக்கு முன் தொகையாக 1001 ரூபாய் கொடுத்தார். ஒரு நாயகன் கிடைத்து படம் ஆரம்பிக்க நாட்களாகும் என்று நினைத்திருந்ததால் நான் அப்போது வரை என் கதையை எழுதவில்லை. பல முறை பல பேரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், காகிதத்தில் இல்லை.
ஒரு வாரத்துக்குள் படப்பிடிப்புத் தொடங்க வேண்டும் என்று சொன்னதும் இரவு பகலாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். குறைந்த நேரம் இருந்ததால் முதல் நாள் படப்பிடிப்பில் எந்த நடிகருமே இல்லை. வாசன் ஹவுஸில், ஆடி மாதத்துக்கு ஒரு நாள் முன்னால், படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அஜித் மட்டுமே இருந்தார். இப்படி நாயகனை மட்டுமே வைத்து யாருமே முதல் நாள் படப்பிடிப்பு செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
அந்தப் படம் மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் அவ்வளவு வேகமாக முடிந்தது. கண்ணதாசன், 'முதலில் ஒப்புக் கொள், பின் கற்றுக் கொள்' என்று சொன்ன வரிகள்தான் எனக்கு உத்வேகமாக இருந்தது. அதனால்தான் முதலில் என்னால் முடியும் என்று சொல்லிவிட்டு 7 நாட்களில் வேக வேகமாக எழுதி முடித்தேன். படப்பிடிப்பு ஆரம்பித்ததும் கூட, வேலை முடிந்து இரவில் வந்து எழுதுவேன். அப்படி அயராது உழைத்துதான் 'தீனா' வெளியானது.
ஆடியில் ஆரம்பித்த படம் பொங்கலுக்கு வெளியானது. அப்போது ஒரு பண்டிகை நாளில் 7-8 நாயகர்களின் படம் வெளியாகும். படம் வெளியான அன்று நான் பழனியில் இருந்தேன். தனியாகத் தான் சென்றேன். தரிசனம் முடித்து விட்டு அங்கிருக்கும் ஒரு அரங்கில் 'தீனா' சென்று 12 மணிக் காட்சி பார்த்தேன்.
அதுதான் அஜித் படங்களுக்கு மிகப்பெரிய ஆரம்ப வசூல் இருக்கும் என்கிற வழக்கம் உருவான காலகட்டம். எனவே படத்துக்கு மிகப்பெரிய தொடக்கம் இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் படம் பார்த்துவிட்டு சென்னையிலிருக்கும் நண்பர்களிடம் தொலைபேசியில் பேசினேன்.
படம் வெளியான முதல் வாரத்தில் முதலீடு செய்த பணம் வந்துவிட்டது. அதற்குப் பின் வந்ததெல்லாம் லாபம்தான். மறு வெளியீட்டிலும் நன்றாக ஓடியது. பின் தொலைக்காட்சியில் வரும்போதும் அதற்குப் பல ரசிகர்கள் உருவாகினர். நாள் ஆக ஆக அதன் வீச்சு அதிகமாகிவிட்டது. 'ரமணா' கிடைக்க 'தீனா' பெரும் உதவியாக இருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் 'தீனா' ''.
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT