Last Updated : 26 Aug, 2020 07:40 PM

 

Published : 26 Aug 2020 07:40 PM
Last Updated : 26 Aug 2020 07:40 PM

 ‘இசைகேட்டால் புவி அசைந்தாடும்’ பாட்டுக்கு போட்ட மெட்டு; ‘தான்சேன்’ முகம் மாதிரியே ‘சிவாஜி சார்’ முகம்! ‘’48 ஆண்டுகளாகியும் இது புரியாத புதிர்தான்!’’ 

முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவானது ‘தவப்புதல்வன்’. சிவாஜி, கே.ஆர்.விஜயா, பண்டரிபாய், சி.ஐ.டி.சகுந்தலா முதலானோர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தில், சிவாஜி மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்திருந்தார். மாலை 6 மணிக்கு மேல், பார்வை தெரியாத கேரக்டர், தமிழ் சினிமாவுக்கு புதுசு.

இந்தப் படம் குறித்து, இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தெரிவித்ததாவது:

‘தவப்புதல்வன்’ என்று டைட்டில் வைத்ததற்கு சுவாரஸ்யமான காரணம் உண்டு. படத்தில், பல கோயில்களுக்குச் சென்று, விரதங்கள் இருந்து பெற்ற மகன் என்று சிவாஜி கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.

அப்பா முக்தா சீனிவாசன், பெரியப்பா முக்தா ராமசாமி, சோ சார், மனோரமா, அம்மா, பெரியம்மா எல்லாரும் ஸ்ரீலங்காவுக்குப் போனாங்க. ‘பொம்மலாட்டம்’ படம் அங்கே அதிக நாட்கள் ஓடியதால், அங்கே ஒரு விழா எடுக்கப்பட்டது. ’முள்ளும் மலரும்’ படம் எடுத்த ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார், எங்களின் ‘வித்யா மூவீஸ்’ கம்பெனியின் பார்டனராக இருந்தார். அவரும் உடன் சென்றார். விமானநிலையத்தில், வேணு செட்டியாரின் அம்மா, சோவிடம் சென்று, ‘எம்புள்ள தவதாயப்புள்ள (தவம் செஞ்சு கிடைத்த மகன்). அதனால அவரைப் பாத்து அழைச்சிக்கிட்டுப் போயிட்டு கூட்டிக்கிட்டு வாங்க’ என்று சொன்னார்.

சும்மாவே நக்கலும் கேலியுமா இருக்கற சோ சாருக்கு, இது அல்வா கிடைச்ச மாதிரி. ஃபிளைட்ல ஏறினதிலேருந்து திரும்பி வர்ற வரைக்கும், வேணு செட்டியாரை ‘தவதாயப் புள்ள’ ‘தவதாயப் புள்ள’ என்று கிண்டலடித்துக் கொண்டே வந்தார் சோ சார். ‘முதல்ல தவதாயப்புள்ளைக்கு டிபனை வைங்கப்பா’ என்று கேலி பண்ணினார்.
இதையெல்லாம் பார்த்துக்கிட்டே இருந்த அப்பா, பின்னால சிவாஜியை வைச்சு படம் பண்ணும் போது, ‘தவப்புதல்வன்’ன்னு டைட்டில் வைச்சார். படத்தோட டைட்டிலுக்கு ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் ஒரு வகைல காரணம்னா, மாலைக்கண் நோய் கேரக்டர் இன்ஸ்பிரேஷனுக்கு அப்பாவோட நண்பர், கண்ணாடி சீத்தாராமன் காரணம். அதேசமயம், கதைப்படியும், இந்தத் தலைப்பு ரொம்பப் பொருத்தமாவே அமைஞ்சிச்சு’’ என்கிறார் முக்தா ரவி.

அவரே தொடர்ந்தார்...

‘’ ‘உலகின் முதலிசை’ என்றொரு பாடல். ‘கிண்கிணி கிண்கிணி’ என்றொரு பாடல். ‘லவ் இஸ் ஃபைன் டார்லிங்’ என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் என எல்லாப் பாடல்களுமே ஹிட்டான பாடல்களாக அமைந்தன. என்றாலும் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
வழக்கமாக எம்.எஸ்.வி. சார் மெட்டுப் போடுவார். அதற்கு பாட்டெழுதுவார் கவியரசர். ஆனால் இந்தப் பாட்டை முதலில் கவியரசர், காட்சிக்கு ஏற்ப எழுதிவிட்டார். பிறகுதான் மெட்டு போடப்பட்டது.

அந்தப் பாடல் காட்சியில், தான்சேன் இசைக்கலைஞர் போல் வேடமிட்டு நடித்தார் சிவாஜி சார். அப்போது அப்பா (முக்தா சீனிவாசன்), சிவாஜி சாரிடம், ‘தான் சேன் கேரக்டரில் அவர் ( ஒரு நடிகர்) நடித்திருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு நடித்தால், ஒரு ரெஃபரன்ஸ் கிடைக்கும் உங்களுக்கு’ என்று சொன்னார். உடனே சிவாஜி சார், ‘அந்த நடிகரோட தான் சேன் வேற. சிவாஜியோட தான் சேன் வேற. யாரையும் பாத்து நடிக்கமாட்டேன்’ என்று சொன்னார்.

சிவாஜி சார் எப்போதுமே இப்படித்தான். எவர் சாயலுமில்லாமல் நடிப்பதைத்தான் விரும்புவார்.அப்படித்தான் இந்தப் பாடலிலும் நடித்தார். இதிலொரு வியப்பும் ஆச்சரியமும் என்ன தெரியுமா? டெல்லியில் தான்சேன் ஓவியம் இருக்கிறது. அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து போனோம். தான்சேன் ஓவியத்துக்கும் சிவாஜி சார் முகத்துக்கும் அச்சு அசல் பொருந்தியிருந்தது. உண்மையிலேயே எங்களுக்கு அது புரியாத புதிர்தான். அதுதான் சிவாஜி சார்’’ என்று வியப்பு மாறாமல் பிரமிப்புடன் தெரிவித்தார் முக்தா ரவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x