Published : 26 Aug 2020 12:19 PM
Last Updated : 26 Aug 2020 12:19 PM
இன்றைய தலைமுறையினரையும் ஈர்த்த படங்களில் ‘புதிய பறவை’ படத்துக்கு தனியிடம் உண்டு. சிவாஜிதான் செளகார் ஜானகியைக் கொலை செய்திருக்கிறார் என்று தெரியும். ஆனால் சாட்சி இல்லை. எனவே, சிங்கப்பூர் காவல்துறை ஒரு நாடகம் போடும். அதற்கு தமிழக காவல்துறையும் ஒத்துழைப்பு கொடுக்கும். சிவாஜியின் நண்பராகவும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மிடுக்கு குறையாமல் நடித்த அந்த நடிகரை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிடவோ மறந்துவிடவோ முடியாது. அவர்... ஓ.ஏ.கே.தேவர்.
கருப்பு வெள்ளைக் கால சினிமாவில், தன் கண்களாலும் விறைப்பான உடல்மொழியாலும் கடுகடுப்பு கொண்ட முகத்தாலும் முக்கியமாக சன்னமான, அதேசமயம் கொஞ்சம் கடுகடுத்தனமுமான குரலாலும் அசத்தியவர் ஓ.ஏ.கே. தேவர்.
‘பாக்கறதுக்கே மிலிட்டிரில வேலை பாக்கறவர் மாதிரி இருக்கார்’ என்று வாட்டசாட்டமானவர்களைப் பார்த்துச் சொல்லுவோம். பள்ளிப்படிப்பு முடிந்த கையுடன், ஓ.ஏ.கே.தேவரின் அப்பா, அவரை ராணுவத்தில் சேரச் சொன்னார். ஆனால் அவரின் மனசெல்லாம் நடிப்பில்தான் இருந்தது. அப்பாவுக்குக் கட்டுப்பட்டு, ராணுவத்தில் சேர்ந்தார். நான்குவருட ராணுவப்பணி. தந்தை இறந்த சேதி கேட்டு, ஊருக்கு வந்தவர், திரும்பவும் ராணுவப்பணிக்குச் செல்லவில்லை. நடிக்கப் புறப்பட்டார்.
சிவாஜி, நம்பியார் முதலானோரை வளர்த்து, வார்த்தெடுத்த ‘சக்தி நாடக சபா’வில் இணைந்தார். அங்கே சிவாஜி பழக்கமானார். எஸ்.வி.சுப்பையா பழக்கமானார். அங்கேதான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பழக்கமானார். பட்டுகோட்டையாரும் இவரும் உற்ற நண்பர்களானார்கள்.
திரையில், சிவாஜிக்கு வாய்ப்பு கிடைத்தது. சுப்பையாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நம்பியார் முன்னதாகவே நடிக்க வந்துவிட்டார். தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். சக்தி நாடக சபாவில் இருந்து விலகினார். சென்னைக்குப் புறப்பட்டார்.
கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார். ஏறுமுகமாக ஒரு இடம் கூட அமையவில்லை. அப்போதுதான் கலைவாணரை சந்தித்தார். ஓ.ஏ.கே.தேவரின் கம்பீரமான, உயரமான உடல்வாகு கலைவாணரை ஈர்த்தது. அவரின் குரலும் தமிழ் உச்சரிப்பும் இன்னும் கவர்ந்தன.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவில் கலைவாணர் சிபாரிசு செய்ய ஓ.ஏ.கே. தேவர் பணியில் சேர்ந்தார். அப்போதெல்லாம் நடிகர்கள் உட்பட பலருக்கும் மாதச்சம்பளம்தான். ஓ.ஏ.கே.தேவருக்கும் மாதச்சம்பளம்தான். மாதம் பத்து ரூபாய்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை திரையுலகில் தேவருக்கான கதவு திறக்கும் கதாபாத்திரங்களாக அமையவில்லை. ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று முக்கியத்துவமில்லாத கதாபாத்திரமாகவே கொடுக்கப்பட்டது.
‘இது சரிப்படாது’ என்று அங்கிருந்து மீண்டும் சென்னைக்கே வந்து வாய்ப்பு தேடினார். இப்படி பல வருடங்களையும் பல வருட வாழ்க்கையையும் இழந்தாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை. கலைவாணரிடம் விஷயத்தைச் சொன்னார். பிறகு இரண்டு படக்கம்பெனியில் ஓ.ஏ.கே.தேவருக்கு வாய்ப்பு கேட்டார். இரண்டு படங்கள் கிடைத்தன. ‘மாமன் மகள்’ படத்தில் அடியாள் கேரக்டர். மிரட்டியெடுத்தார். பின்னர், எம்ஜிஆருடன் ‘மதுரைவீரன்’. திருமலை நாயக்கர் மன்னன் வேடத்தில் மிடுக்கும் கம்பீரமுமாக வலம் வந்து அசத்தினார். இதில், ‘மதுரை வீரன்’ திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது.
இதைத் தொடர்ந்து ஓ.ஏ.கே.தேவருக்கு ஏறுமுகம்தான். வித்தியாசமான படங்களாகவே அமைந்தன. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சிவாஜிக்கும் ஜெமினிக்கும் ஜாவர் சீதாராமனுக்கு மட்டுமின்றி இவருக்கும் புகழைத் தேடித்தந்தது.
சிவாஜி நடத்திய சிவாஜி மன்றத்தில் சேர்ந்து, அவருடன் பல நாடகங்களில் நடித்து வந்தார். பிறகு அங்கிருந்தும் விலகினார். ‘புதிய பறவை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் தனித்துவமான நடிப்பை வழங்கினார். கே.பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’ படத்தில், சின்ன கேரக்டர்தான். ஆனால் அற்புதமாக காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜெய்சங்கருடன் ‘யார் நீ’ படத்தில் நடித்தார். இவர் வரும் காட்சிகளெல்லாம் பீதியைக் கிளப்பின. எம்ஜிஆருடன் ‘ராஜா தேசிங்கு’, ராமன் தேடிய சீதை’, சிவாஜியுடன் ‘அன்புக்கரங்கள்’, ‘உத்தமபுத்திரன்’, ‘குறவஞ்சி’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘தங்கச்சுரங்கம்’, ‘திருவிளையாடல்’, ‘அன்னை இல்லம்’, ‘கல்யாணியின் கணவன்’ முதலான ஏராளமான படங்களில் நடித்தார்.
பின்னர், தாமே ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். அப்போதெல்லாம் ‘ஓ.ஏ.கே. தேவர் நாடகம் போடுகிறாராம்பா’ என்று மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி என்றெல்லாம் ஊர்களில் கூட்டம் அலைமோதியது. அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு, நாடகம் பார்த்தார்கள்.
ஒருபக்கம் சினிமா, இன்னொரு பக்கம் நாடகம். நடுவே கலைஞருடன் நெருக்கம் என்று தொடர்ந்து சுறுசுறுப்புடன் பணியாற்றி வந்தார். ‘அண்ணே, இந்தப் பசங்க நல்லா இசையமைக்கிறாங்க. திருச்சில போடுற நம்ம டிராமாவுக்கு இவங்களை மியூஸிக் பண்ணப் போடுங்கண்ணே’ என்று ஓ.ஏ.கே. தேவரிடம் சொல்லப்பட்டது. அவரும் திருச்சியில் அரங்கேறும் நாடகத்தில் இசையமைக்கச் சேர்த்துக்கொண்டார். அதுவரை நாடகம் நடிப்புக்காக, வசனங்களுக்காக, கதைக்காக கைதட்டல்களையும் பாராட்டுகளையும் வாங்கியிருந்தாலும் அன்று நடந்த நாடகத்தில் இசைக்காகவும் பாடல்களுக்காகவும் கரவொலி கிடைத்தன. ‘இந்தப் பசங்க பின்னாடி பெரியாளா வருவாங்கப்பு’ என்று ஓ.ஏ.கே.தேவர் சொல்லி மகிழ்ந்தார். அன்றைக்கு இவரிடம் சிபாரிசு செய்தவர் சங்கிலி முருகன். இசையமைத்த இளம் வயதுக்காரர்கள்... இளையராஜா அண்ட் சகோதரர்கள்.
வில்லத்தனமாகவோ குணச்சித்திரமாகவோ எப்படி நடித்தாலும் எவரையும் இமிடேட் செய்யமாட்டார் ஓ.ஏ.கே.தேவர். மதுரை உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான ஒத்தப்பட்டிதான் சொந்த ஊர். ஒத்தப்பட்டி ஐயத்தேவர் மகன் கருப்பத்தேவர் என்பதுதான் ஓ.ஏ.கே. தேவர்.
ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி, 1973ம் ஆண்டு காலமானார் ஓ.ஏ.கே. தேவர். மறைந்து 47 வருடங்களாகிவிட்டாலும் இன்னும் ரசிகர்களால் மறக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் ஓ.ஏ.கே. தேவர். ஆனாலும்... இன்னும் இன்னுமாக இந்த அற்புதக் கலைஞனை திரையுலகம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
- ஓ.ஏ.கே.தேவர் நினைவுதினம் இன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT