Published : 25 Aug 2020 06:07 PM
Last Updated : 25 Aug 2020 06:07 PM
90ஸ் கிட்ஸ் எனப்படும் 1980-களின் பிற்பகுதியில் பிறந்து 1990-களில் வளர்ந்தவர்களும் அவர்களைவிட இளையவர்களான 2K கிட்ஸுக்கும் விஜயகாந்தின் உண்மையான உயரம் தெரிந்திருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வந்த காலகட்டம் 80-களும் 90-களும் தாம். அந்தக் காலகட்டத்தில் இவர்கள் பிறந்து சிறுவர்களாக இருந்திருப்பார்கள். திரைப்படம் தொடர்பான கருத்து இவர்களுக்கு உருவாகியிருக்காது. விஜயகாந்தின் படங்களைக் குறைவாகவே பார்த்திருப்பார்கள். அவருடைய படங்களின் சாதனைகளையும் குறைவாகவே அறிந்திருப்பார்கள். ஒரு திரை ஆளுமையாகவும் தனிநபராகவும் அவருடைய அருமை பெருமைகளையும் அவர்களிடம் சொல்வதற்கு ஆட்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
துணிச்சல் கொடுத்த நாயகன்
நானும் இவர்களில் ஒருவன்தான். எனக்கு 1990களின் தொடக்கத்தில் விவரம் தெரியத் தொடங்கியபோது விஜயகாந்தின் 'சின்ன கவுண்டர்' திரைப்படம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது நினைவில் இருக்கிறது. என் நினைவு தெரிந்து அவர் நடிப்பில் நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் 1994இல் வெளியான 'சேதுபதி ஐபிஎஸ்', அந்தப் படத்தில் வீரமும் துணிவும் மிக்க காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜயகாந்த். இயல்பில் பயந்த சுபாவம் கொண்டிருந்தவனான எனக்கு அந்தப் படம் மிகப் பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. இனிமேல் இந்த 'சேதுபதி ஐபிஎஸ்' போல் தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
என் அண்ணன்கள் சிலர் 'சத்ரியன்', 'கேப்டன் பிரபாகரன்' உள்ளிட்ட படங்களைப் பார்த்து போலீஸ் கதாபாத்திரங்களில் விஜயகாந்த் நடித்த விதம் காரணமாக அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர். அப்போதும் எனக்கு அவர் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. இதற்குப் பின் 2000 ஆம் ஆண்டில் வெளியான 'வல்லரசு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. என் வீட்டிலிருந்தவர்கள் அந்தப் படம் பற்றியும் பரபரப்பாகப் பேசினார்கள். அதற்கு முன்பு 'வானத்தைப் போல' படத்தை நான் திரையரங்கில் பார்த்திருந்தேன். அந்தப் படம் பிடித்திருந்தது என்றாலும் அதில் நடித்திருந்த விஜயகாந்த் பற்றி பெரிய அபிப்ராயம் உருவாகியிருக்கவில்லை.
புரட்டிப் போடப்பட்ட கேலிப் பார்வை
பள்ளி மேல்நிலை வகுப்புகளில் சினிமா பற்றி விவாதிக்கத் தொடங்கியிருந்த காலத்தில் நண்பர்கள் இடையே ரஜினி எதிர் கமல் விஜய் எதிர் அஜித் என்றுதான் விவாதம் நடக்கும். விஜயகாந்த் பற்றி யாருமே பேசியதில்லை. ஓரிருவர் பேச முயன்றாலும் அவர் குரல் அடக்கப்பட்டுவிடும். ஏனென்றால் அப்போது வெளியாகியிருந்த 'நரசிம்மா', வாஞ்சிநாதன்', ;ராஜ்ஜியம்' போன்ற படங்களால் விஜயகாந்த் என்றாலே நம்பவே முடியாத சண்டைக் காட்சிகளில் நடிப்பவர், நிறைய க்ளோஸப் காட்சிகளில் கேமராவை முறைத்தபடி பல்லைக் கடித்துக்கொண்டு வசனம் பேசுபவர் என்பது போன்ற கேலி உணர்வுதான் எங்களில் பல பேருக்கு இருந்தது. அப்போதைய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற ”விஜயகாந்த் மாதிரி சுவத்துல கால வெச்சி சுழட்டி சுழட்டி அடிப்பேன்” என்பது போன்ற 'நகைச்சுவை' விஜயகாந்த் மீதான எங்களுடைய கேலி உணர்வுக்கு வலு சேர்த்தன.
இந்தச் சூழலில் 2002-ல் வெளியான 'ரமணா' விஜயகாந்த் குறித்த எங்களுடைய பார்வையைப் புரட்டிப் போட்டது. அன்றைய இளம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்தப் படத்தில் நிதானமும் முதிர்ச்சியும் கொண்ட கல்லூரிப் பேராசிரியராகவும் திரை மறைவில் இயங்கும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை தாங்குபவராகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்த விஜயகாந்த் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாருக்கான ஃபார்முலா படங்களிலும் கமல்ஹாசன் வித்தியாசமான முயற்சிகளைச் செய்பவர் என்னும் அவருடைய இமேஜுக்கு பொருந்தும் படங்களிலும் மட்டுமே நடித்துவந்த நிலையில், அவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த விஜயகாந்த் இப்படி ஒரு வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரத்தில் நடித்தது எங்களை அசரடித்தது.
அப்போது நாங்கள் இப்படி எல்லாம் ஒப்பிட்டு யோசிக்கவில்லை என்பது வேறு விஷயம். 'ரமணா'வுக்குப் பிறகு 'சொக்கத்தங்கம்' என்ற குடும்ப உறவுகளுக்கிடையிலான சென்டிமென்ட் நிறைந்த படத்திலும் 'எங்கள் அண்ணா' என்கிற நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்த படத்திலும் நடித்திருந்தார் விஜயகாந்த். அவை பரவலான கவனத்தையும் ஈர்த்தன. இவற்றுக்குப் பிறகு 2006-ல் வெளியான 'பேரரசு' படத்தைத் தவிர விஜயகாந்துக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை.. அந்தக் காலகட்டத்தில் அரசியலில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் என்பதும் ஒரு காரணம். .
பெருமைகளை உணர்ந்த தருணங்கள்
நான் திரைப்படங்கள் சார்ந்து அதிகமாக எழுத வேண்டிய ஊடகப் பணியில் சேர்ந்த பிறகுதான் ஒரு நடிகராகவும் திரைத் துறை ஆளுமையாகவும் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் விஜயகாந்தின் உயரத்தை உணரத் தொடங்கினேன். 1980-களில் மட்டுமல்ல 1990-களில் விஜயகாந்த் சென்னை தொடங்கி கடைக்கோடி கிராமம் வரையில் அனைத்து இடங்களிலும் மிகப் பெரும் ரசிகர் படையைக் கொண்டிருந்த முதன்மை நட்சத்திரங்களில் ஒருவர் என்பதும் தொழிற்போட்டியில் விமர்சகர்களாலும் அறிவுஜீவிகளாலும் அதிகம் கொண்டாடப்படும் ரஜினி, கமலுக்கு இணையான இடத்திலும் சில நேரம் அவர்களை முந்தும் இடத்திலும் அவர் இருந்தார் என்பதும் தெரியவந்தது.
'சத்ரியன்', 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்', 'சின்ன கவுண்டர்' 'மாநகரக் காவல்', 'சக்கரை தேவன்', 'ஆனஸ்ட்ராஜ்' என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அவர். இவற்றில் 'கேப்டன் பிரபாகரன்', 'சின்ன கவுண்டர்' போன்றவை வசூலில் வரலாறு படைத்தவை.
நட்சத்திரத் தயக்கங்களை உடைத்தவர்
வெற்றிகளைக் கடந்து விஜயகாந்த் பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த படங்களிலும் ஒரே வகைமையைச் சேர்ந்த படங்களானாலும் கதை-திரைக்கதை அளவில் பல வேறுபாடுகளைக் காண்பித்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. கிராமத்துக் கதைகளில் மற்ற உச்ச நடிகர்களைவிட அதிகமாக நடித்திருக்கிறார். அவை பேரளவில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. காவல்துறை அதிகாரி என்றாலும் 'சத்ரியன்' படத்தில் வெகுவாக அண்டர்ப்ளே செய்திருப்பார். 'கேப்டன் பிரபாகரன்' போன்ற படங்களில் உணர்வுப் பிழம்பாக நடித்திருப்பார். 'சேதுபதி ஐபிஎஸ்' போன்ற படங்களில் இரண்டுக்கும் இடைப்பட்ட மனிதராக நடித்திருப்பார். இப்படி ஒரே வகையைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் பல வேற்றுமைகளைக் காண்பித்திருப்பார். அவரால் கிராமத்து வெள்ளந்தி இளைஞன் கதாபாத்திரத்திலும் அசத்த முடியும், கண்டிப்பான காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்திலும் மிரட்ட முடியும். அவருடைய கண்களில் இருந்த தீப்பொறியும் தீட்சண்யமும் இந்த இருவகையான கதாபாத்திரங்களுக்கும் உதவின.
கதாபாத்திரத் தேர்வில் பெரும்பாலான நட்சத்திர நடிகர்களுக்கு இருக்கும் தயக்கங்கள் அவருக்கு இருந்ததில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்களில் தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் துணிச்சலை வெளிப்படுத்தியவர் விஜயகாந்த்தான். 'ஊமை விழிகள்', 'பெரியண்ணா', 'கண்ணுபடப் போகுதய்யா', 'வானத்தைப் போல' எனப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவை தவிர 'ஊமை விழிகள்', 'வைதேகி காத்திருந்தாள்', 'செந்தூரப்பூவே', 'பூந்தோட்ட காவல்காரன்' போன்ற பல படங்களில் வழக்கமான நாயகனாக இல்லாமல் ஒரு கண்ணியமான சம முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குறிப்பாக, சாதி மறுப்புத் திருமணங்களை அல்லது காதல் திருமணங்களைத் துணிச்சலாக நடத்திவைக்கும் வல்லமை கொண்டவர், காதலர்களுக்கு அடைக்கலம் தருபவர் எனப் பல பாத்திரங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவரைப் போன்ற ஒரு நட்சத்திரம் நடிப்பதால் கிடைக்க வேண்டிய கவனமும் கிடைத்துவிடும். இதுபோன்ற பல தனித்தன்மைகள் விஜயகாந்துக்கு உண்டு.
திரையைத் தாண்டிய மரியாதை
திரைப்படங்களைத் தாண்டி ஒரு ஆளுமையாக அவர் மீது மரியாதை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன. உச்ச நட்சத்திரங்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்கத்தைக் கடனிலிருந்து மீட்ட பெருமைக்குச் சொந்தக்காரர். அதிக எண்ணிக்கையில் புதுமுக/ பிரபலமாகாத இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர். அடுத்த தலைமுறை நடிகர்கள் உயரப் பல வகைகளில் உதவியர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ர்கள் என திரை வணிகம் சார்ந்து இயங்குபவர்களுக்குப் பல உதவிகளைச் செய்திருப்பவர், பொதுவாக ஏழைகளுக்கும் பசியில் வாடுபவர்களுக்கும் வாரி வழங்கும் கருணை உள்ளம் கொண்டவர் என அவருடைய தனிப்பட்ட ஆளுமையின் பெருமைகளை விளக்கும் கதைகள் இணையதளங்களில் வீடியோக்களாகவும் கட்டுரைகளாகவும் கொட்டிக் கிடக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT