Published : 22 Aug 2020 07:10 PM
Last Updated : 22 Aug 2020 07:10 PM
சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 22) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கோவிட்-19 தொற்றுப் பிரச்சினை காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலையை எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவில் நோய்களுக்கான மருத்துவர், தீவிர சிகிச்சை மருத்துவர், நுரையீரல் சிகிச்சை மருத்துவர், தொற்று நோய் மருத்துவர், எக்மோ நிபுணர் ஆகியோர் அடங்குவர். எக்மோ உதவி தேவைப்படும் நிறைய கோவிட்-19 தொற்று கொண்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை தந்திருக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருக்கும் சர்வதேச நிபுணர்களுடன் சேர்ந்து, எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எங்களது மருத்துவ நிபுணர் குழு கொடுத்திருக்கும் சிகிச்சையை சர்வதேச நிபுணர்களும் ஆமோதிக்கின்றனர்".
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT