Published : 13 Sep 2015 11:37 AM
Last Updated : 13 Sep 2015 11:37 AM
பொதுவாக நாடக நடிகர்கள் சினிமாவில் நடிப்பதற்குதான் வருவார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நாடக நடிகராக இருந்து திரைப்பட இயக்குநராக மாறியிருக்கிறார் பிரேம் சாய். ஜெய், யாமி கவுதம் நடிக்கும் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.
ஒரு காலத்தில் பிரபல நாடக நடிகராக இருந்த நீங்கள், பின்னர் நடிப்பதை நிறுத்தியது ஏன்?
நான் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தி 10 ஆண்டுகள் ஆகிறது. நாடகங்களில்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. பல ஆண்டுகாலம் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தேன். தெலுங்கில் என் நடிப்புக்காக இரண்டு முறை நந்தி விருதுகள் வென்றிருக்கிறேன். அப்போது இங்கே தமிழக அரசு விருதுகள் கிடையாது. என்னுடைய தேதிகள் இருந்தால் தொலைக்காட்சியில் ஸ்லாட் கொடுப்பார்கள் என்ற காலம் இருந்தது. ஒரு கட்டத்தில் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்தது. இயக்குநராக விரும்பினேன். 2004-05ல் இயக்குநர் ஆவதற்காக நடிப்பதை நிறுத்திவிட்டேன். ஷூட்டிங்கில் க்ளாப் போர்டு அடிப்பது, மக்கள் கூட்டத்தை தள்ளி நிற்கச் சொல்வது போன்ற பணிகளைப் பார்த்தேன். நடிப்புத் துறையில் இருந்து விலகி இந்த துறைக்கு வந்தேன். கெளதம் மேனன் கூட என்னை நடிக்கச் சொன்னார், ஆனால் நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது முடிந்துபோன ஒன்று. இப்போது நான் எடுத்த முடிவுக்காக சந்தோஷப்படுகிறேன்.
இயக்குநர் பிரபுதேவாவிடம் நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
ஒரு கட்டத்தில் நான் பார்த்த சம்பவங்களை கதையாக எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய ஒரு கதை தெலுங்கில் குறும்படமாக வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு பிரபுதேவா என்னை அழைத்தார். அவரிடம் நான் பணியாற்றினேன்.
‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ எந்த மாதிரியான கதைக் களம்?
வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சாதாரண மனிதனின் கதை இது. பொதுவாக கொரியர் கொண்டுவரும் பையனிடம் நாம் அதிகம் பேச மாட்டோம். அவரும் பேச மாட்டார். ஒரு வாரம் தினமும் கொரியர் அலுவலகம் சென்று அவர்களிடம் பேசினேன். அந்த அனுபவங்களை வைத்து எழுதப்பட்டதுதான் ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’. அதே நேரத்தில் இது உண்மைக் கதையும் இல்லை. கெளதம் மேனன் சாரிடம் இப்படத்தின் கதையைக் கூறினேன். அவர் இதை தயாரிக்க ஒப்புக்கொண்டார்.
உங்களது முதல் படம் இவ்வளவு தாமதமாகும் என்று நினைத்தீர்களா?
யாருமே தன்னுடைய படம் தாமதமாக வர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் படத்துக்கே காலதாமதம் ஏற்படுகிறது. மக்கள் திரையில் எனது படத்தைப் பார்த்து கைதட்டும்போது என்னுடைய எல்லா பிரச்சினைகளும் காணாமல் போய்விடும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் பிரபுதேவாவிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
24 மணி நேரமும் சினிமாவைப் பற்றியே நினைக்கும் மனிதர் பிரபுதேவா. சினிமாவைத் தவிர வேறு எதுவுமே அவருக்குத் தெரியாது. நேரம்காலம் பார்க்காமல் உழைப்பார். தூங்கவே மாட்டார். அவரிடம் இருந்து கடின உழைப்பைக் கற்றுக்கொண்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT