Published : 21 Aug 2020 01:31 PM
Last Updated : 21 Aug 2020 01:31 PM
கரோனா ஊரடங்கிற்கு முன் 'சில்லுக் கருப்பட்டி' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஹலிதா ஷமீமை அழைத்துப் பாராட்டியுள்ளார் எஸ்.பி.பி
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 6 மணிக்கு இயக்குநர் பாரதிராஜா, ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் உலகமெங்கும் உள்ள மக்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். இதற்கான முன்னெடுப்பை இயக்குநர் பாரதிராஜா செய்திருந்தார்.
இந்தச் சமயத்தில் பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்து, எஸ்.பி.பி குறித்து தங்களுடைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்கள். இதில் 'சில்லுக் கருப்பட்டி' படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஊரடங்குக்குச் சற்று முன்னால் தான் எஸ்பிபி அவர்கள் என்னிடம் பேசினார். அவர் சொன்னது இதுதான். "பாடகன் என்பதை விட நான் ஒரு திரைப்பட ரசிகன். எனக்கு உங்கள் படம் மிகவும் பிடித்தது. உங்களிடம் பேசுவதில் பெருமை". அவரது தன்னடக்கம் என்னை வாயடைக்கச்செய்தது. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
என்னால் சொல்ல முடிந்ததெல்லாம், "சார், உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெறுகிறேன். அப்போது உங்கள் வார்த்தைகள் எனக்கு எவ்வளவு மதிப்புடையவை என்பது உங்களுக்குத் தெரியும்" என்பதுதான்.
அதற்கு அவர் "உங்களுக்கு என் ஆசீர்வாதம் உண்டு. ஒரு நாள் சந்திப்போம். வரும்போது உங்கள் இசையமைப்பாளரையும் அழைத்து வாருங்கள்" என்றார்.கண்டிப்பாக உங்களைச் சந்திப்பேன் சார். விரைவில் நலம் பெறுங்கள்"
இவ்வாறு ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.
#GetWellSoonSPB sir pic.twitter.com/f2JP1PP2MH
— Halitha (@halithashameem) August 21, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT