Published : 20 Aug 2020 10:36 PM
Last Updated : 20 Aug 2020 10:36 PM

நடிகர் முரளி இறந்த சோகத்திலும் மறக்காது அவர் கடன் ரூ.17 லட்சத்தை செட்டில் செய்த மனைவி: நெகிழ்ந்துப் போன பைனான்சியர்

சென்னை

நடிகர் முரளி குறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் நெகிழ்ந்துபோய் சம்பவம் ஒன்றை பதிவிட்டுள்ளார், அவர் இறந்தவுடன் அவர் வாங்கியிருந்த கடன் பத்திரத்தை நாகரிகம் கருதி கிழித்து போட்டுவிட்டேன், ஆனால் சில நாட்கள் கழித்து பணத்துடன் வந்த முரளியின் மனைவி பணத்தை கொடுத்து மகன் அதர்வாவை ஆசீர்வாதம் செய்யச் சொன்னது தன்னை நெகிழ வைத்தது என தெரிவித்துள்ளார்.

பலரும் பண விஷயத்தில் கடும் கறாராக இருப்பார்கள். கடன் கொடுத்துவிட்டு எப்போது திரும்பக் கொடுப்பீர்கள் எனக் கேட்டுக் கொண்டே இருக்கும் சில நபர்கள் உண்டு. அதிலும் கடன் கொடுத்த நபர் இறந்துவிட்டால், அடுத்த நாள் கடன் எப்போது கொடுப்பீர்கள் என்ற நச்சரிப்பைத் தொடங்கிவிடுவார்கள்.

இது அப்படியே திரையுலகிற்கும் பொருந்தும். தயாரிப்பாளர்கள் படம் தயாரிப்பதற்கு மட்டும் பைனான்ஸ் பெறுவதில்லை. நடிகர்களும் தங்களுடைய செலவிற்காக பைனான்சியர்களிடம் பணம் வாங்குவதுண்டு. அதை நடிக்கும் படங்களின் சம்பளம் வந்தவுடன் கொடுத்துவிடுவார்கள். அது வரைக்கும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

இதில் நடிகர் முரளி இறந்தவுடன், அவர் வைத்திருந்த கடனை அவருடைய மனைவி ஷோபா அடைந்திருப்பது தான் பேச்சாக இருக்கிறது. முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அதில் தனக்கு உள்ள கடன்கள் குறித்து அவ்வப்போது எழுதி வந்துள்ளார். அவருடைய மறைவுக்குப் பின்னர் அந்த டைரியின் மூலம் தன் கணவர் வைத்திருந்த கடனைத் தெரிந்து கொண்டுள்ளார் ஷோபா.

இதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு 17 லட்ச ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என இருந்துள்ளது. அதில் மனிதாபிமானத்துடன் முரளி இறந்தவுடன், தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும் கிழித்துப் போட்டுவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். சில நாட்கள் கழித்து, திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா, அவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.

அவர் வீட்டுக்குச் சென்றவுடன், முரளியின் மனைவி ஷோபா 17 லட்ச ரூபாயை உள்ளே இருந்து எடுத்துவந்து கொடுத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியத்துக்கோ இது அதிர்ச்சியாக இருந்தது. அப்போது தான் முரளியின் டைரி தகவல்களைச் சொல்லியிருக்கிறார் மனைவி ஷோபா.

"நான் பணமே கேட்கவில்லையே. அவர் கொடுத்த பத்திரங்களைக் கூட கிழித்துப் போட்டுவிட்டேன்" என்று கூறியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். அப்போது இதுவும் என் கணவர் பணம் தான். அவருடைய சம்பாத்தியத்தில் வாங்கிய இடத்தை விற்று, அவர் கடன் வாங்கிய ஆட்களுக்குக் கொடுக்கிறேன்.

முதலில் உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன் என்றால், நீங்கள் ஒருவர் மட்டும் தான் எங்களை அழைத்து கடன் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்கவே இல்லை. ஆகையால் உங்களுக்கு முதலில் கொடுக்கலாம் என்று அழைத்துக் கொடுக்கிறேன். தன் கணவர் யாருக்கும் கடனாளியாகச் சென்றுவிடக் கூடாது என்பது என் எண்ணம் என திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளார் முரளியின் மனைவி ஷோபா.

அதோடு நின்றுவிடாமல், மகன் அதர்வாவை அழைத்து இவனை ஆசீர்வாதம் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறார் ஷோபா. அப்போது அதர்வாவும் திருப்பூர் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x