Published : 14 Aug 2020 08:06 PM
Last Updated : 14 Aug 2020 08:06 PM
கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி.பி பூரண நலம்பெற பிரார்த்திக்குமாறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சையில் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தது.
இதனிடையே இன்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவமனையின் இந்த அறிக்கை இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகினருமே எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டிய பிரார்த்தனை செய்யுங்கள் என்று தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
எஸ்.பி.பி உடல்நிலை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் "இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த சகாப்தத்துக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோருகிறேன். எஸ்பி பாலசுப்பிரமணியம் அவரது அற்புதமான குரலை வைத்து நமக்கு அளவற்ற மகிழ்ச்சி தந்திருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரபு, தனுஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத், கிரிக்கெட் வீரர் அஸ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், டிடி, இயக்குநர் மித்ரன் ஜவஹர், தயாரிப்பாளர் போனி கபூர், தேவி ஸ்ரீபிரசாத், பிரசன்னா எனப் பலரும் எஸ்.பி.பிக்காக பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பலரும் எஸ்.பி.பி பூரண நலம் பெற பிரார்த்தியுங்கள் என ட்வீட் செய்வதால், #SPBalasubrahmanyam என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...