Published : 13 Aug 2020 02:55 PM
Last Updated : 13 Aug 2020 02:55 PM
சிலருடைய இழப்புகளை, மரணங்களை நாம் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம். இன்னமும் எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்... நம்மால்தான் பார்க்கமுடியவில்லை என்று நினைத்து சமாதானமாகிக் கொள்வோம். யாரிடமோ வேறு ஏதோ பேசும்போது, அவர்களை சட்டென்று அதற்குள் கொண்டுவந்து நினைவில் இருக்கிற விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். உறவுகள், தோழமைகள் என்றில்லாமல் மிகப்பெரிய கலைஞர்களையும் கூட, நம் ஞாபக அடுக்குகளில் வைத்து, சொல்லிக்கொண்டே இருப்போம். அந்தப் பட்டியலில் இருக்கும் முக்கியமானவர்... ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் ஏராளம். ஆனால், வளர்ந்தும் ஜெயித்த கலைஞர்கள் மிக மிகக் குறைவுதான். அந்தக் குறைவிலும் பூரண நிலவாகப் பிரகாசித்தவர் ஸ்ரீதேவி.
இந்தியாவின் கனவுக்கன்னி என்று சொல்லப்பட்டவர்கள் ஹேமமாலினியும் ஸ்ரீதேவியும்தான். இந்த இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில், ஸ்ரீதேவி சின்னஞ்சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இப்போதைய விருதுநகர் மாவட்டம் தெரியும். அதிலுள்ள சிவகாசியும் தெரியும். சிவகாசியை அடுத்துள்ள அனுப்பன்குளம் கிராமம் தெரியுமா? அந்த கிராமத்தின் அருகில் இருக்கிற மீனம்பட்டி எனும் குக்கிராமத்தை அறிந்திருக்கிறோமா? அந்தக் கிராமம்தான் ஸ்ரீதேவியின் சொந்த ஊர். விருதுநகரில், சிவகாசியில் நின்றுகொண்டு அந்த ஊருக்கு வழிகேட்டால் கூட தெரியாத கிராமத்தில் இருந்து வந்தவர்தான் இந்தியாவின் கனவுக்கன்னி எனும் நிலைக்கு வந்தார்.
‘நல்லபேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ என்று ஸ்ரீதேவியைத் தூக்கிக் கொண்டு எம்ஜிஆர் ‘நம்நாடு’ படத்தில் பாடினார். ‘இதோ எந்தன் தெய்வம்’ என்று ஸ்ரீதேவியை தோளில் சுமந்தபடி சிவாஜி கணேசன் ‘பாபு’ படத்தில் பாடினார். ‘துணைவன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே ஜொலித்தார். பின்னாளில், வளர்ந்தார். இளம்பெண்ணாக நடிக்கத் தொடங்கினார். எத்தனையோ கதாபாத்திரங்களில் ஜொலித்தார். ஆனாலும், அதே குழந்தை முகத்துடனும் குழந்தைமை குணத்துடனுமே இருந்தார்.
இயக்குநர் கே.விஸ்வநாத்தின் தெலுங்குப் பட உரிமையைப் பெற்று, அதில் தனக்கே உரிய டச்களைச் சேர்த்து, தமிழுக்குத் தகுந்தது போல் மாற்றி, இயக்குநர் பாலசந்தர், ‘மூன்று முடிச்சு’ எடுத்தார். கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த இந்தப் படம்தான், ஸ்ரீதேவி நாயகியாக நடித்த முதல் படம். அந்தப் படத்திலேயே, மிக கனமான கதாபாத்திரம் ஏற்று அசத்தினார் ஸ்ரீதேவி. தன் வயதுக்கு உரிய கேரக்டரில்லை அது. ஸ்ரீதேவியை எப்படியாவது அடையவேண்டும் என நினைப்பார் ரஜினி. பிறகு ரஜினியின் அப்பா, ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்துகொள்வார். இப்போது ரஜினிக்கு சித்தியாகிவிடுவார் ஸ்ரீதேவி. இப்படியொரு முரண் கொண்ட கதாபாத்திரத்தை, தன் நடிப்பால் மெருகேற்றி, பிரமிக்க வைத்தார்.
77ம் ஆண்டு, ரஜினியுடன் இரண்டு படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. ‘கவிக்குயில்’, ‘காயத்ரி’. இதில் ‘கவிக்குயில்’ படத்தில், ரஜினியின் தங்கை. ‘காயத்ரி’ படத்தில், நீலப்படம் எடுக்கும் கணவர் ரஜினியின் மனைவி. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அப்படியொரு முதிர்ந்த நடிகை போல் சிறப்பான நடிப்பை வழங்கினார்.
ஸ்ரீதேவி நாயகியாக வந்த காலகட்டத்துக்கு முன்பு வரை, வாணிஸ்ரீ, ஜெயசித்ரா, மஞ்சுளா, லதா, சுஜாதா முதலானோர் முன்னணியில் இருந்தார்கள். ஸ்ரீதேவி வரும் போது, ஸ்ரீப்ரியா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா முதலானோர் வந்தார்கள். இந்த சமயத்தில், ஸ்ரீதேவியின் கண்களும் குழந்தை மாறாத முகமும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தன.
அப்போதுதான் புதியதொரு பாய்ச்சல் நிகழ்ந்தது தமிழ் சினிமாவில். பாரதிராஜா, இளையராஜா, நிவாஸ் கூட்டணியில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ‘16 வயதினிலே’ வந்தது. இந்த நடிகர்களின் பெயர்கள், சப்பாணி, பரட்டை, மயிலு என்று இன்றைக்கும் பேசப்படுகின்றன. ‘மயிலு’ எனும் கதாபாத்திரத்துக்கு தன் அழகாலும் நடிப்பாலும் அழகு சேர்த்தார் ஸ்ரீதேவி. இளம்பெண்ணின் கனவுகளையும் ஆசைகளையும், சப்பாணியை வெறுப்பதையும் கோட்டுசூட்டு போட்ட டாக்டரால் ஈர்க்கப்படுவதையும் பிறகு நிதானத்துக்கு வந்து, சப்பாணியின் உண்மையான அன்பைப் புரிந்து கொள்வதிலுமான உணர்வுகளை வெளிக்காட்டியதில் ஸ்ரீதேவி அழகு நடிகை மட்டுமல்ல... அசத்தலான நடிகையும் கூட என்று சிலிர்த்துப் போனது ரசிகர் கூட்டம்.
‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் கமலுடன் நடித்தார். ஆனால் கமலுக்கு ஸ்ரீதேவி ஜோடியில்லை. ‘ப்ரியா’வில் ரஜினியுடன் நடித்தார். ஆனால் ஸ்ரீதேவிக்கு அம்பரீஷ்தான் ஜோடி. சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ், ஜெய்சங்கர் என அன்றைய தேதியில் எல்லா ஹீரோக்களுடனும் நடித்தார். எல்லோருக்கும் ஏற்ற ஜோடி என்று பேரெடுத்தார். ஆனாலும், கமலுடனும் ரஜினியுடனும் நிறைய படங்களில் நடித்தார்.
‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் மொத்த வசனங்களுமே ஒரு பக்கத்துக்குள் முடிந்துவிடும். அதில் ஸ்ரீதேவிக்கு உரிய வசனங்களும் மிக மிகக் குறைவு. ஆனால், ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பெண்ணின் தவிப்பு, தயக்கம், கமலின் அழகிலும் ஸ்டைலிலும் சொக்கிப் போவது, திருமணம் செய்துகொள்வது, கமல் பங்களாவில் இருக்கிற மர்மங்கள் கண்டு திகைப்பது, பயந்து நடுங்குவது, எல்லாம் தெரிந்ததும் மரணபயத்தை கண்களில் காட்டுவது, க்ளைமாக்ஸில், கல்லறையில் ஒடுங்கி, உயிரைப் பிடித்துக் கொண்டிருப்பது என சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.
இதேபோல்தான், ‘ஜானி’ படத்திலும் அமைதியாகவும் மெளனமாகவும் இறுக்கமாகவும் இருக்கிற பாடகி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியைத் தவிர வேறு எவரையும் கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. ஸ்ரீதேவி இரண்டு வார்த்தை பேசுவார்; அவரின் கண்கள் இருபது வார்த்தைகளை பேசி ரஜினிக்குச் சொல்லும். ஜென்ஸியும் ஜானகியும் பாடினாலும் பல இடங்களில் ஸ்ரீதேவியே பாடியிருக்கிறார் போல என்று நம்பவைக்கும், முகபாவனைகள் கூடுதலாக ரசிக்கவைத்தன.
எண்பதுகளின் ரசிகர்கள், மாடர்ன் டிரஸ்ஸில் அழகா, புடவையில் அழகா என்று ஸ்ரீதேவியை வைத்து பட்டிமன்றமே நடத்தினார்கள். ஸ்ரீதேவியே அழகுதான் என்று தீர்ப்பு சொல்லிக்கொண்டார்கள். மாடர்ன் டிரஸ்ஸில் ‘குரு’ படத்தில் வந்திருப்பார். புடவை கட்டிக் கொண்டு ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் நடித்திருப்பார். இரண்டு வித ஆடைகளுடன் ‘வாழ்வே மாயம்’ படத்தில் நடித்திருப்பார். மூன்று படங்களிலுமே தன் நடிப்புத் திறமையால், அந்தக் கதாபாத்திரங்களை உயர்த்தியிருப்பார். உருகி உருகிக் காதலித்த கமல், இப்போது மனம் மாறிவிட்டாரே... என்று ‘வாழ்வே மாயம்’ படத்தில் கலங்கும் போதெல்லாம் நாமும் கலங்கிவிடுவோம். பொசுக்கென்று கோபம் வரும் கமல், தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஓவியரிடம் சொல்லி வருந்துவதைக் கண்டு, நாமும் அவருடன் சேர்ந்து வருந்தினோம்.
லம்பாடி டிரஸ்ஸும் வாயில் வெற்றிலையைக் குதப்பியும் ‘அடுத்த வாரிசு’ படத்தில் ரகளை பண்ணுவார். ஐ.வி.சசியின் ‘பகலில் ஒரு இரவு’ ஸ்ரீதேவியை மறக்கவே முடியாது. சிவாஜிக்கு மகளாக ‘கவரிமான்’ படத்திலும் ஜோடியாக ‘சந்திப்பு’ படத்திலும் நடித்தார். பணத்திமிருடன் மகனை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கு கணவரை விட்டுப் பிரிந்த கேரக்டரையும் மனப்பிறழ்வையும் ‘நான் அடிமை இல்லை’யில் அநாயசமாகப் பண்ணியிருப்பார். ’கல்யாண ராமன்’ படத்திலும் ’கல்யாணம்’ கமல் கொல்வதைப் பார்த்துவிட்டு, மனப்பிறழ்வுக்கு ஆளாவார். ‘மலர்களில் ஆடும் இளமை புதுமையோ’, ‘நினைத்தால் இனிக்கும்’ பாடல்களில் ஒரு தேவதையைப் போல் வலம் வந்தார் ஸ்ரீதேவி. ’ராணுவவீரன்’ படத்திலும் இவரின் குறும்பு கலந்த கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது.
பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் படங்களெல்லாம் ஸ்ரீதேவிக்கு முக்கியமான படங்களாக அமைந்தது போல், பாலுமகேந்திராவின் படமும் அத்தகைய மிக மிக முக்கியமானதொரு படமாக அமைந்தது. அது... ‘மூன்றாம் பிறை’. டைட்டில் முடிந்ததும் ஒரு பாடல். ‘வானெங்கும் தங்க விண்மீன்கள்’ பாட்டு.இந்தப் பாட்டு முடியும்போது, விபத்து. பிறகு, சிறுமியின் மனநிலைக்கு ஆளாவார். படத்தின் கடைசி ரீலில் பழைய படி தெளிவார். ஆரம்ப - இறுதி வெர்ஷனிலும் குமரி உருவத்தில் குழந்தைத்தனத்துடனும் என வெரெட்டி காட்டியிருப்பார். ‘ஸ்ரீதேவியைத் தவிர வேற யாருமே பண்ணமுடியாதுப்பா’ என்று சொல்லவைத்ததுதான் ஸ்ரீதேவியின் ஸ்பெஷல். கமல் திட்டினால் கோபப்படுவதும் அழுவதும் புடவையை அப்படியே சுற்றிக்கொண்டு நிற்பதும், கமலை வழியனுப்பிவிட்டு ஓடுவதும் என தன் சிறுவயதுக்கேச் சென்றிருப்பார் ஸ்ரீதேவி. அவரின் உடல்மொழியும் ஒவ்வொரு அசைவுகளும் ‘ஸ்ரீதேவி நடிக்கிறார்’ என்பதே தெரியாமல் இருப்போம்.
பெண்பார்க்கும் படலம். அப்போது ஒரு பெண் எப்படி அழகாக இருப்பாள்? ‘மீண்டும் கோகிலா’ ஸ்ரீதேவி மாதிரி இருப்பாள் என்கிற கற்பனையும் காட்சிகளும்தான் எண்பதுகளின் ரசிகர்களுக்குள் ஓடியது. மூக்குத்தி டாலடிக்க, நாணத்துடன், மெல்லிய சிரிப்புடன், ‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி’ என்ற பாடலை ஸ்ரீதேவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இதேகாலகட்டத்தில்தான்.. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்றெல்லாம் நடித்தார். இந்திப் படத்துக்கும் சென்றார். ஆனால் லட்சக்கணக்கான உள்ளங்களை ஸ்வீகரித்த ஸ்ரீதேவியை, இந்தித் திரையுலகம் ஸ்வீகரித்துக் கொண்டது. பெரிய பெரிய இயக்குநர்களின் ஒரே சாய்ஸ்... மிகப்பெரிய தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ்... ஸ்டார் வேல்யூ நடிகர்களின் ஒரே சாய்ஸ்... ஸ்ரீதேவி. எது தப்பினாலும் ஸ்ரீதேவிக்காக படம் ஜெயித்துவிடும் என்று நம்பினார்கள். அந்த நம்பிக்கையை அவரின் ரசிகர்கள் காப்பாற்றினார்கள்.
’’படப்பிடிப்பு இடைவேளையின் போது, ஸ்ரீதேவியைப் பார்க்க வியப்பாக இருக்கும். அவரின் அம்மா மடியில் படுத்துக்கொண்டிருப்பார் ஸ்ரீதேவி. அம்மாதான் சாப்பாடு ஊட்டிவிடுவார் அவருக்கு. எத்தனையோ கனமான கதாபாத்திரங்களையெல்லாம் சர்வசாதாரணமாக நடித்துப் பிரமாதப்படுத்திவிடும் ஸ்ரீதேவியின் மனசு மட்டும் ஒரு குழந்தையாகவே இருந்தது. அவரின் குடும்பமும் ஸ்ரீதேவியை, குழந்தையாகவே, தேவதையாகவே பார்த்தது’’ என்று கமல் ஒருமுறை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களும் ஸ்ரீதேவியை தேவதையாகத்தான் பார்க்கிறார்கள்.
தேவதைகளுக்கு பிறப்பு வேண்டுமானால் உண்டு. மரணமே இல்லை.
- நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT