Published : 10 Aug 2020 10:34 PM
Last Updated : 10 Aug 2020 10:34 PM
ஓடிடி தளத்திலிருந்து '24' படம் நீக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று வெளியாகியுள்ளது.
2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியானது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
பல்வேறு பழைய படங்கள் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் '24' படமும் ஜூலை 16-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால், இன்று (ஆகஸ்ட் 10) '24' படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, "’24’ படம் வெளியானதிலிருந்து படத்தின் ஆடியோவில் பிரச்சினை இருந்தது. பலரும் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார்கள். மேலும், படத்தை தேடிப் பார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஸ்கிரீன் ஷாட்களும் ட்விட்டரில் பகிரப்பட்டது.
முதலில் ஆடியோ பிரச்சினையைச் சரி செய்து பின்பு வெளியிடலாம் என்ற எண்ணத்தில் தான் நீக்கப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்கள். இதனால் பயனர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, விரைவில் '24' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT