Published : 10 Aug 2020 09:53 PM
Last Updated : 10 Aug 2020 09:53 PM

'சத்யா' பாடல் மறு ஆக்கம்: கமல் நெகிழ்ச்சி

சென்னை

'சத்யா' பாடலை மறு ஆக்கம் செய்து வெளியிடப்பட்டு இருப்பதற்கு கமல் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

1960-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் 'களத்தூர் கண்ணம்மா'. ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் கமல். இதன் மூலமே திரையுலகில் அறிமுகமானார்.

இதனால், வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி கமல் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் ஆகிறது. இதனை வெகு விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இதில் ஒரு அங்கமாக 'சத்யா' பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால், 'சத்யா' படத்தில் இடம்பெற்ற 'போட்டா படியுது' என்ற பாடலை மீண்டும் உருவாக்கம் செய்துள்ளனர். அந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடத்திலேயே இதையும் படமாக்கியுள்ளனர். இதனை 'சிம்பா' படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ளார். 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டார்.

'சத்யா' வீடியோவை வெளியிட்டு லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"61 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். ரெபெல் அந்தம் பாடலை வெளியிடுவது எனக்குக் கிடைத்த கவுரவம். 1987ஆம் ஆண்டு வெளியான சத்யா படத்திலிருந்து 'போட்டா படியுது' என்ற கிளாசிக் பாடலின் கவர் வடிவம் இது. சிம்பா இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இதை உருவாக்கியுள்ளார். வாழ்த்துக்கள்"

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவால் நெகிழ்ச்சியடைந்து, லோகேஷ் கனகராஜ் ட்வீட்டை மேற்கோளிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் நெகிழ்ந்துவிட்டேன். இது வெறுமனே ஒரு பழைய அழகான நினைவு மாதிரி தெரியவில்லை. இது நிபந்தனையற்ற அன்பு. இதற்காக நான் திருப்பி தரவேண்டிய பரிசும், அதே மாதிரியான அன்பு மட்டுமே. உங்களுடைய அன்பு நன்றி. என்னை நீங்கள் ஓட அனுமதித்திருக்கும் ஒட்டப் பந்தயத்தில் எனக்கான ஊக்கம் இது தான். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x