Published : 08 Aug 2020 02:51 PM
Last Updated : 08 Aug 2020 02:51 PM

முடிவுக்கு வராத தயாரிப்பாளர் சங்க சர்ச்சை: கருத்து வேறுபாடு முற்றுகிறது!

சென்னை

புதிய தயாரிப்பாளர் சங்க உருவாக்கத்தில் சர்ச்சை நிலவி வரும் வேளையில், பல தயாரிப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்' என்று புதிய சங்கமொன்றை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதர பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர்.

இந்தப் புதிய சங்கம் உருவாக்கத்துக்கு, தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலரும் ஆகஸ்ட் 6-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது புதிய சங்கம் உருவாக்கும் முடிவை பாரதிராஜா கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மேலும், புதிய சங்கத்தின் இதர உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

இதனிடையே புதிய சங்கம் உருவாக்கம் தொடர்பாக இதர தயாரிப்பாளர்களுக்கு மத்தியிலேயே கருத்து ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏனென்றால், ஆகஸ்ட் 6-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்னர் பாரதிராஜாவைத் தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். அவ்வாறு மனு கொடுத்துவிட்டு வெளியே வந்து, புதிய சங்கம் உருவாக்கும் முடிவை பாரதிராஜா கைவிட வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாரதிராஜாவே தலைவராக இருந்து வழிநடத்தட்டும், இதர பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் வைக்கலாம் என்று தாணு தனது பேச்சில் குறிப்பிட்டார். இதற்கு சிங்காரவேலன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

"அது தாணுவின் சொந்தக் கருத்து. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். தேர்தலில் களமிறங்க இருக்கிறோம்" என்று சிங்காரவேலன் வெளியிட்டுள்ள ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்காரவேலன் ஆடியோ மட்டுமன்றி, இதர சில தயாரிப்பாளர்களும் தாணுவின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். என்னவென்றால், கலந்து ஆலோசிக்கலாம் என்று அழைத்துவிட்டு அவர்கள் மட்டும் பேசிவிட்டுக் கலைந்துவிட்டார்கள் என்று ஆடியோ வெளியிட்டுள்ளனர்.

புதிய சங்கம் உருவாக்கம் குறித்த பிரச்சினை மறைந்து, இப்போது தயாரிப்பாளர்களுக்கு உள்ளேயே கடும் அதிருப்தியில் ஆடியோ வெளியிட்டு, நாங்கள் ஒற்றுமையுடன் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x