Published : 04 Aug 2020 02:53 PM
Last Updated : 04 Aug 2020 02:53 PM

அமேசான் ப்ரைம் ட்வீட்டால் குழப்பம்: 'மாஸ்டர்' படக்குழுவினர் விளக்கம்

சென்னை

அமேசான் ப்ரைம் ட்வீட்டால் ஏற்பட்ட குழப்பத்துக்கு, 'மாஸ்டர்' படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியாகி இருக்கும். தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு ஓடிடி வெளியீடு தொடர்பாக செய்தி வெளியானது. இதற்கு, "தன் படம் திரையரங்குகளுக்குத்தான். ஓடிடி வெளியீட்டுக்கு அல்ல" என்று விஜய் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் 'மாஸ்டர்' ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பது உறுதியானது.

இன்று (ஆகஸ்ட் 4) அதிகாலை அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் மாத வெளியீடு என்று ஒரு புகைப்படம் ஷேர் செய்யப்பட்டது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் தேதி வாரியாக வெளியாகும் படங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியீடாக 'மாஸ்டர்' பெயர் இடம்பெற்றது. இதன் மூலம் 'மாஸ்டர்' ஓடிடி தளத்தில் வெளியீடு எனத் தகவல் பரவியது.

இது தொடர்பாக 'மாஸ்டர்' படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது, "இன்னும் 'மாஸ்டர்' படத்தின் ஃபைனல் அவுட்டை எடுக்கவே இல்லை. படம் கண்டிப்பாகத் திரையரங்கில்தான் வெளியாகும். அதில் மாற்றுக் கருத்தில்லை. கரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 9-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாகியிருக்கும்.

அந்தத் தேதியில் வெளியானால், அமேசான் ஓடிடியில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியீடு என்று முடிவு செய்திருப்பார்கள். அதே தேதியைத் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் அமேசான் ப்ரைம் ட்விட்டர் தளத்தில் வெளியான புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

— Prime Video (@PrimeVideo) August 3, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x