Published : 30 May 2014 01:17 PM
Last Updated : 30 May 2014 01:17 PM
'கோச்சடையான்' படத்தின் முக்கியக் காட்சிகளில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து உறுதுணையாக இருந்திருக்கிறார், 'லொள்ளு சபா' ஜீவா.
ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். மே 23-ம் தேதி வெளியான 'கோச்சடையான்' மக்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிக்கு பதிலாக சில முக்கிய காட்சிகளில், அவருக்கு 'லொள்ளு சபா' ஜீவா உறுதுணை புரிந்திருப்பது தெரிய வருகிறது.
சினிமாவில் ஆபத்தான காட்சிகளில் நாயகர்களுக்கு பதிலாக டூப் கலைஞர்கள் நடிப்பது வழக்கம். இந்த உத்தி வேறு விதமாக, கோச்சடையானில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, ரஜினிக்கு உடல்நிலை சரியாகி வந்தபோது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வலம்வரக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் விதித்தனர்.
நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான 'கும்கி' இசை வெளியீட்டு விழாவில்தான் முதன்முறையாக கலந்து கொண்டார் ரஜினி. அப்படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழில் கூட ரஜினியின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், 'கோச்சடையான்' மோஷன் கேப்சர் தொழில்நுட்ப படம் என்பதால் ரஜினி அதிக சிரத்தையின்றி நடித்து விடலாம் என்று தீர்மானித்தார். முக்கிய நடிகர்கள் சிலரை மட்டுமே ஒரு மோஷன் கேப்சர் அரங்கினுள் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். இதைத்தான் 'கோச்சடையான்' படத்திற்கு முன்பு உருவான விதமாக திரையிட்டார்கள்.
ஆனால், பல்வேறு காட்சிகளில் ரஜினியை சிரமப்படுத்தக் கூடாது என்று தீர்மானித்து 'லொள்ளு சபா' ஜீவாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். தீபிகா படுகோனுடன் உள்ள சண்டைக் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் ரஜினிக்கு பதில் ஜீவா நடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே தனது உடல் அசைவுகள், பாவனைகளை அப்படியே செய்வதாக 'லொள்ளு சபா' ஜீவாவை ரஜினியே அழைத்து பாராட்டியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT