Published : 25 Jul 2020 03:45 PM
Last Updated : 25 Jul 2020 03:45 PM
ஏ.ஆர்.ரஹ்மானை வெற்றிபெற விடாமல் தடுப்பதாகவும், இந்தி திரையுலகில் என்ன நடக்கிறது என்பதையும் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி பேட்டியொன்றில் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.
‘ரோஜா’ படம் தொடங்கி தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இசையமைத்து வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். இது தவிர பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். ஆஸ்கர் விருதுகள் வென்று உலகளவில் பிரபலமானவர்.
தற்போது சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி படமான 'தில் பெச்சாரா'வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, 'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான், "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக உருவானது.
ஏனென்றால், இந்தி திரையுலகில் சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு வாரிசு அரசியல் சர்ச்சை விஸ்வரூபமாக எடுத்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியும் சேர்ந்து கடும் விவாதமாக மாறியது. இந்தச் சர்ச்சை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"இந்தியில் ராம் கோபால் வர்மா 'ரங்கீலா' படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்துக்குப் பிறகு 'தாளம்' படத்துக்காக சுபாஷ் கைய் வந்திருந்தார். அப்போது அவரிடம் "ஏன் ஒரு தென்னிந்தியக்காரரை இங்கு அழைத்து வருகிறாய். இங்கு தான் பல இசையமைப்பாளர்கள் இருக்கிறார்களே" என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதை அவர் தைரியமாக எதிர்கொண்டு "ரஹ்மானை விட பிரமாதமாக இசையமைக்கும் ஒருவரை காண்பியுங்கள். நான் அவரோடு பணிபுரிகிறேன்" என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு இருந்த தைரியம் இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. முகேஷ் சபாராவும் சுபாஷ் கையைப் போலவே அவர்களை எல்லாம் தாண்டி இங்கு வந்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் தாமதமாகக் கொடுப்பார், ஆங்கில படங்கள் தான் பண்ணுவார் என்று சொல்லி தடுத்து நிறுத்தி, இசையமைக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே மாதிரியான புரளிகளை கிளப்பிவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மானை அங்கு பணிபுரிய விடாமல் பண்ணுவதாக முகேஷ் சபாரா சொன்னார். அவர் மூலமாகத் தான் அங்கு என்ன பிரச்சினை என்பதே அவருக்கு தெரியவந்தது.
நமது திரையுலகிலும் கூட ரஹ்மான் அமெரிக்காவில் தான் இருப்பார், மும்பையில் தான் பணிபுரிவார் இங்கு எல்லாம் படங்கள் பண்ணுவதில்லை என்று புரளிகள் வருவது எனக்குத் தெரியும். இதே மாதிரி இந்தி திரையுலகிலும் புரளியைக் கிளப்பியிருக்கிறார்கள்.
இந்தி திரையுலகினரைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டத்தில் தமிழர் என்பதைத் தாண்டி தென்னிந்தியர் என்பது தான். நல்ல ஆளுமை மிக்க இயக்குநர்கள் எனக்கு இவர் தான் இசையமைக்கத் தேவை என்று தைரியமாக வருவார்கள். பல இயக்குநர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் அந்த தைரியம் இல்லை என்று நினைக்கிறேன். ஒரு புரளியை மீண்டும் கிளப்பிக் கொண்டே இருந்தால், உண்மை என்று தானே நினைப்பார்கள். அது தான் நடப்பதாக எனக்கு தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரியான ஒரு அதி திறமைசாலிக்கு இது நடக்கக் கூடாது. ஒரு வருடத்துக்கு 40-50 படங்களை அவர் பண்ணவில்லை. 4-5 படங்களைத் தேர்வு செய்து இசையமைக்கிறார். ஒரு இசையமைப்பாளர் மட்டுமே இருக்கிறார் என்று சொல்லவில்லை. நிறைய இசையமைப்பாளர்கள் புதிதாக வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சில நல்ல படங்கள் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து தவறிப் போகிறது. அது தான் பிரச்சினை.
இந்தி திரையுலகில் இவர்கள் எல்லாம் தான் இருக்க விடணும். இவர்கள் எல்லாம் நமது சட்டதிட்டங்களுக்குள் வரமாட்டார்கள் என்ற எண்ணம் இருக்கலாம். ஆகையால் கூட்டமாக ஒன்றிணைந்து வெற்றிபெற விடாமல் தடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்"
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT