Published : 23 Jul 2020 09:17 PM
Last Updated : 23 Jul 2020 09:17 PM
கஷ்டப்படுபவர்களுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள் என்று யோகி பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. அவர் நேற்று (ஜூலை 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். சமூக வலைதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக யோகி பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த நாளைக் கொண்டாடுவேன். ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.
இந்தப் பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது. ஒன்று கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டுக்கொண்டு கொண்டாடியது. இரண்டாவது குவிந்த வாழ்த்துகள். இந்த அளவுக்கு என் மீது அன்பு, பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கும்போதும், பார்க்கும்போதும் இன்னும் உழைப்பதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
சமூக வலைதளத்தில் பலரும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தீர்கள். அனைவருக்குமே நான் 'நன்றி' சொல்லியிருந்தால், அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்துகொண்டேன். ஆகையால், யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கவில்லையே என்ற வருத்தம் வேண்டாம். இந்த அறிக்கையின் மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், என்னைத் தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினருக்கும் என் நன்றி... நன்றி... நன்றி...
இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். கரோனா அச்சுறுத்தலால் பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவிக்கிறார்கள். சினிமா தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள் தொடங்கி எத்தனையோ மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்யுங்கள். நாம் செய்யும் ஒரு உதவி, பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் மாற்று உதவியாக நம்மை வந்தடையும்.
கரோனா காலம் முடிவடைந்து அனைத்தும் விரைவில் சீராகும். நாம் அனைவரும் விரைவில் பழைய மாதிரி மாஸ்க் இல்லாமல் நண்பர்களுக்குள் கை கொடுத்து, கட்டிப்பிடித்துப் பழகுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கு எல்லாம் நான் வணங்கும் முருகன் அருள் புரிவார்".
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT