Published : 10 Sep 2015 10:49 AM
Last Updated : 10 Sep 2015 10:49 AM
‘பசும்பொன் தெய்வம்’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார், சூலூர் கலைப்பித்தன். கவிஞர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகம் கொண்ட இவர், இப்படத்தின் எழுபது சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற திட்டம் உருவானது எப்படி?
முத்துராமலிங்க தேவரைப் பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன். அறிவாளி, ஆன்மீகவாதி, தத்துவம், ஆங்கில புலமை என்று தனித்தன்மை மிகுந்தவராக அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பல காலம் சிறையில் இருந்திருக்கிறார். சுபாஷ் சந்திரபோஸ் மீது பற்றுக்கொண்டவர். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர். இப்படி பல பெருமைகள் அவருக்கு உண்டு. அவரைப் பற்றி நான் அறிந்த தகவல்களை வைத்து அவரைச் சிறப்பிக்கும் விதமாக இப்படத்தை எடுக்க திட்டமிட்டேன்.
சாதி அரசியல் நடத்தும் சிலர் அவருடைய பெயரை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்களே, அதை எப்படி படத்தில் பிரதிபலிக்கப் போகிறீர்கள்?
“முருகன், குறத்தி வள்ளியை திருமணம் செய்ததே சாதி இல்லை என்பதற்கு அடையாளம்தான்” என்று முத்துராமலிங்க தேவரே கூறியிருக்கிறார். அதை மீறி அவர் பெயரில் சாதி அமைப்புகள், கட்சிகள் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். ஒரே சமயத்தில் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றவர் முத்துராமலிங்க தேவர். அப்படி தேர்தலில் வெற்றிபெற்றபோது, “என் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்னை சுற்றி குறைவாகத்தான் இருக்கிறார்கள்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பேர் ஓட்டுப் போட்டதால்தான் வெற்றி பெற்றிருக்கிறேன். அப்படி இருக்கும்போது எப்படி நான் சாதித் தலைவனாக இருக்க முடியும்” என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரை அனைத்து சமூகத்தினரும் கொண்டாடியதை அது காட்டுகிறது. இந்தப் படத்தில் சாதி சார்ந்த விஷயங்கள் எதையும் நான் தொடவில்லை. அதை கடந்து அவர் ஆற்றிய நல்ல பணிகளை தொகுத்து இரண்டு மணி நேர திரைப் படைப்பாக எடுக்கிறோம்.
இரண்டு மணி நேர படத்துக்குள் அவர் வாழ்க்கையை கொண்டுவருவது சாத்தியமா?
முத்துராமலிங்க தேவரைப் பற்றி முழுமையாக எடுக்க வேண்டுமென்றால் 4 பாகங்கள் எடுக்க வேண்டும். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் சுருக்கி என்ன தேவையோ அதைத்தான் எடுத்துவருகிறோம். அவரைப் பற்றி தெரியாத விஷயங்களை சுவைபட படமாக்கி வருகிறோம். இதில் முத்துராமலிங்க தேவராக ராஜா முகமது நடித்து வருகிறார். அவர் இந்தப் பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
தயாரிப்பாளர், எழுத்தாளரான நீங்கள் திரைப்பட இயக்குநரானது எப்படி?
இளையராஜா இசையில், பாக்யராஜ் கதை வசனம் எழுத சிவக்குமார் நடித்த ‘சாட்டையில்லா பம்பரம்’, ‘கண்ணத் தொறக்கணும் சாமி’ ஆகிய படங்களை தயாரித்தேன். அதன்பிறகு இலக்கிய ஆர்வம் ஏற்பட்ட தால் 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய ‘63 நாயன்மார்கள்’ புத்தகம் பல பதிப்புகளை கண்டது. அப்துல்கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை ஆய்வு செய்து எழுதினேன். அதற்காக அவர் என்னை அழைத்து பாராட்டினார். ஒரு கட்டத்தில் இயக்கத்தின் மீது ஆர்வம் வந்தது. ‘சுதந்திர பாரதி’ படத்தை தயாரித்து இயக்கினேன். அடுத்து ‘துளசி மாலை’ என்ற படத்தை இயக்கியுள்ளேன். அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்போது ‘பசும்பொன் தெய்வம்’ படத்தின் வேலைகளில் இறங்கியிருக்கிறேன்.
‘பசும்பொன் தெய்வம்’ படத்தை எப்போது முடிக்கப் போகிறீர்கள்?
10 நாட்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும். தேவர், மதுரையில் தொழிற்சங்கவாதியாக இருந்த காலம் உள்ளிட்ட சில முக்கியமான பகுதிகளை படமாக்க வேண்டும். இந்தப்படத்தை தொடங்கும்போது கையில் பணம் ஏதும் இல்லாமல்தான் தொடங்கினேன். ஒவ்வொரு விஷயமும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. ஒரு நல்ல மனிதரைப் பற்றிய இந்தப்படைப்பை மக்களிடம் கொண்டுபோக எனக்கு இன்னும் பொருளாதார ரீதியாக உதவிகள் தேவைப்படுகிறது. தேவரை தெய்வமாகப் போற்றும் தென்மாவட்ட பிரமுகர்கள் இப்படத்துக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.
இதுபோன்ற முக்கிய தலைவர்களை பற்றி படம் எடுக்கும்போது அரசு உதவிகள் செய்துள்ளது. ‘பெரியார்’ படம் எடுத்தபோது அப்போதைய அரசு 90 லட்சம் கொடுத்தது. அதேபோல ‘பாரதி’ படத்துக்கும் சலுகைகள் கிடைத்தன. தற்போதைய தமிழக அரசு முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூமியில் பல நல்ல காரியங்களை செய்துவருகிறது. அதேபோல இந்தப்படத்துக்கும் செய்தால் படத்தை மேலும் சிறப்பாக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT