Published : 15 Jul 2020 01:42 PM
Last Updated : 15 Jul 2020 01:42 PM
'தளபதி 65' படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து தேனாண்டாள் பிலிம்ஸுக்கு கைமாறிவிட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இச்செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஓடிடி வெளியீட்டுக்குப் பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும், திரையரங்க வெளியீடு என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்புக்குச் செல்லத் திட்டமிட்டார்கள்.
இதனிடையே, இந்தப் படத்துக்காக சம்பளக் குறைப்பு, பட்ஜெட் குறைப்புக்கு சன் பிக்சர்ஸ் பேசியதாகவும் அதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இதனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு விஜய் இந்தப் படத்தை மாற்றிவிட்டதாகவும் செய்தி வெளியானது.
இது தொடர்பாக விசாரித்தபோது, ''சன் பிக்சர்ஸ் அப்படியொரு எண்ணத்தில்லையே இல்லை என்று தெரிவித்தார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் சம்பளக் குறைப்புக்காகப் பேசியிருக்கிறார்கள். அது கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் எவ்வளவு என்று முடிவாகவுள்ளது.
'தளபதி 65' படத்தைப் பொறுத்தவரை இன்னும் பட்ஜெட் எவ்வளவு, எத்தனை நாள் படப்பிடிப்பு, எங்கு படப்பிடிப்பு, யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எதுவுமே முடிவாகவில்லை. இது எதுவுமே முடிவாகாத பட்சத்தில் படம் கைமாறவுள்ளது என்ற செய்தியே முற்றிலும் தவறானது'' என்று குறிப்பிட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT