Published : 14 Jul 2020 03:06 PM
Last Updated : 14 Jul 2020 03:06 PM

சம்பந்தமில்லாத விஷயத்துக்குள் தயவுசெய்து வராதீர்கள்: வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வேண்டுகோள்

சென்னை

சம்பந்தமில்லாத விஷயத்துக்குள் தயவுசெய்து வராதீர்கள் என்று வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். இது அவரின் 3-வது திருமணம். இந்தத் திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவி காவல்துறையில் புகார் அளித்ததால் பிரச்சினை தொடங்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவிக்கவே, அனைவருக்குமே தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் வனிதா விஜயகுமார். மேலும், யூடியூப் சேனலுக்கு சிலர் பேட்டியளிக்கத் தொடங்க பிரச்சினை மீண்டும் பெரிதானது.

இந்த இணையத் தாக்குதல் தொடர்பாக வனிதா விஜயகுமார் புகார் அளித்திருந்தார். தற்போது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆய்வாளரைச் சந்தித்தார் வனிதா விஜயகுமார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

"கடந்த சில வாரங்களாக மீடியாக்களில் என்னைப் பற்றி பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் சூர்யா தேவி என்ற பெண் என்னைப் பற்றி தவறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது ரொம்பவே எல்லை மீறிப் போனதால் அவரைப் பற்றி புகார் கொடுத்தேன்.

பின்பு ரவீந்திரன் என்பவர் 2-3 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பாளராக பிரபலமானதை விட, யூடியூப்பில் உட்கார்ந்து பலரையும் விமர்சித்துப் பிரபலமாகியிருக்கும் ஒருவர். அவர் தேவையே இல்லாமல் என்னுடைய பெர்சனல் விஷயங்களில் தலையிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசியும், அதை எடுத்துக் கொள்ளாமல் திமிராகப் பேசி மேலும் என்னைப் பற்றித் தவறாகப் பேசினார்.

கரோனா சமயத்தில் யாருக்குமே வேலை வாய்ப்பு இல்லை. விளம்பரம் இல்லை என்பதால் என்னுடைய பெயர் பாப்புலராக இருக்கும் சூழலில், தேவையில்லாமல் என்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்திருந்தேன். அதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்பதால்தான் உதவி ஆய்வாளரைச் சந்திக்க வந்தோம்.

3 குழந்தைகளுக்குத் தாயான நான், தனியாக இவ்வளவு காலங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பா - அம்மா உறுதுணை இல்லை. அந்த ஒரே விஷயத்துக்காக யார் எல்லாமோ நடுவில் வந்து தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது ரொம்பத் தவறான விஷயம்.

ரவீந்திரன் என்ற சினிமா தயாரிப்பாளர், சினிமாவில் இருந்த பெண்ணை இந்த அளவுக்குத் தவறாகப் பேசியிருக்கிறார். இது சம்பந்தமில்லாத ஒரு விஷயம். அவரை நான் இதுவரை பார்த்தது கூட கிடையாது. விளம்பர நோக்கத்துக்காக இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

என் குழந்தைகளை எந்த அளவுக்கு மனத்தளவில் வலுவாக வளர்க்க வேண்டுமோ, வளர்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகன் நல்லபடியாக வளர்ந்து கொண்டிருக்கிறான். அவருடைய அப்பாவும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். பெற்றோர்களாக எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை.

எனக்கு 40 வயதாகிறது. எனக்கொரு துணை வேண்டும் என நினைத்து நேர்மையாகத் திருமணம் செய்துள்ளேன். அதில் ஒரு சின்ன சிக்கல். இதற்காக என்னைக் கீழ்த்தரமாகப் பேசுவதால் நான் மனத்தளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

சினிமாக்காரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரே வேண்டுகோள். உங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்துக்குள் தயவுசெய்து வராதீர்கள். இது சட்டத்துக்குரிய விஷயம். இது தொடர்பாக உதவி ஆய்வாளரிடம் பேசியிருக்கிறோம். 2 நாட்களில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இணையத் தாக்குதல் தற்போது அதிகரித்து வருகிறது. இதை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இப்போது பலரும் தவறான கருத்துகள் எழுதத் தொடங்கிவிட்டார்கள். நான் ஒரு வலுவான தாயாக எவ்வளவு காலம்தான் போராடிக்கொண்டே இருக்க முடியும்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x