Published : 13 Jul 2020 06:04 PM
Last Updated : 13 Jul 2020 06:04 PM

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு முன் தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடிக்க விரும்பிய ஃபகத் பாசில்: சுவாரசியப் பின்னணி

கொச்சின்

5 ஆண்டுகளுக்கு முன்பே தியாகராஜன் குமாரராஜாவை அழைத்துப் படம் பண்ணப் பேசியதாக ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக இப்படம் பலராலும் கொண்டாடப்பட்டது. இந்தியத் திரையுலகின் பல்வேறு முன்னணி இயக்குநர்களும் இப்படத்தைக் கொண்டாடினார்கள்.

'வேலைக்காரன்' படத்துக்குப் பிறகு, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்திருந்தார் ஃபகத் பாசில். அதற்குப் பிறகு வேறு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் ஃபகத் பாசில் ஒப்பந்தமாகவில்லை.

இதனிடையே, ஃபகத் பாசிலின் பேட்டி, அறிக்கைகள் எல்லாம் எப்போதாவதுதான் வரும். சமீபத்தில் இர்ஃபான் கான் மறைவுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தற்போது இந்தக் கரோனா ஊரடங்கில் நேரலைப் பேட்டியொன்று அளித்துள்ளார் ஃபகத். அதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்தது மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா குறித்துப் பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் ஃபகத் பாசில் கூறியிருப்பதாவது:

"சொந்தக் குரலில் பேசியதற்கான பாராட்டுகள் தியாகராஜன் குமாரராஜாவுக்கே தருவேன். முதலில் எனக்குச் சந்தேகமாக இருந்தது. எனக்கு அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது மலையாளத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்பினேன்.

ஐந்து வருடங்களுக்கு முன், அவர் 'சூப்பர் டீலக்ஸ்' பற்றி யோசிப்பதற்கு முன்பே நான் அவரைச் சென்று சந்தித்தேன். மலையாளத்தில் ஒரு திரைப்படம் எடுப்போம் என்றேன். அவரைக் கொச்சி வரவழைத்தேன். ஆனால், அப்போது அது சாத்தியப்படவில்லை. அவர் மீண்டும் சென்னைக்குச் சென்றுவிட்டார்.

அதன் பின் என்னை 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக அழைத்தார். எனக்கு யோசனையாக இருந்தது. ஏனென்றால் தமிழில் சிந்தித்துப் பேசக் கூடிய ஒருவர் நடித்தால் அவர் இன்னும் இந்தக் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடிக்கலாம் என வேறொரு நடிகரை நடிக்க வைக்கச் சொல்லி நான் அவரைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். மொழியால் பெரிய பிரச்சினை இல்லை என்றார்.

படப்பிடிப்பில் நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். என்னைச் சுற்றியிருப்பவர்கள் தமிழ் பேசியபோது நான் அவர்களுடன் தமிழில்தான் உரையாடி வந்தேன். தமிழ்நாட்டில் இன்னும் நேரம் செலவிட்டால் என்னால் இன்னும் பழகிக்கொள்ள முடியும் என்பது புரிந்தது.

தமிழைப் பொறுத்தவரை அது மிக அழகான மொழி. அதிகம் யோசிக்காமல் அதைக் கற்பது சுலபம். ஒரு பாடலைக் கற்றுக்கொள்வது போல".

இவ்வாறு ஃபகத் பாசில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x