Published : 06 Jul 2020 09:57 PM
Last Updated : 06 Jul 2020 09:57 PM
எனியோ மோரிகோனே மறைவுக்கு கமல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எனியோ மோரிகோனே. இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.
91 வயதான எனியோ மோரிகோனே இன்று (ஜூலை 6) காலை ரோமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருடைய மறைவு உலக அளவில் உள்ள அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் எனியோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எனியோ மறைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனியோ மோரிகோனே போன்ற ஒரு இசையமைப்பாளரால்தான், மெய்நிகர் காலத்துக்கும், இணைய காலத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் இத்தாலியின் அழகு, கலாச்சாரம், காதல் ஆகியவற்றை உங்கள் உணர்வுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும். நம்மால் செய்ய முடிவது எல்லாம், அந்த ஆசானின் படைப்புகளைக் கொண்டாடி, அதிலிருந்து கற்பது மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எனியோ மறைவு குறித்து கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குரு எனியோ மோரிகோனே. நாங்கள் உங்கள் இழப்பை உணரமாட்டோம் ஐயா. நாங்கள் கேட்கத் தேவையான இசையை, வாழத் தேவையான இசையை, இன்னும் மேம்படுத்தத் தேவையான இசையை, நீங்கள் கொடுத்ததை மிஞ்சிப் போகவும் தேவையான இசையை எங்களுக்குத் தந்துவிட்டீர்கள். நன்றி மற்றும் வணக்கங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT