Published : 03 Jul 2020 10:09 PM
Last Updated : 03 Jul 2020 10:09 PM
அதிகரிக்கும் மின்கட்டணம் தொடர்பாக, இயக்குநர் சேரன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்தது. தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் மின்சாரக் கணக்குகள் எடுக்க முடியாத காரணத்தால் சில வழிமுறைகள் மூலமாக அனைவரிடமும் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக பிரசன்னா தெரிவித்த எதிர்ப்பு பெரும் விவாதமாக உருவானது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பதிலளித்தது. தற்போது மும்பையில் உள்ள முன்னணி நடிகைகள் மற்றும் பொதுமக்கள் பலரும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு வருகிறார்கள்.
இதனிடையே தமிழகத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு குறித்த சர்ச்சை உருவாகியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. (கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை.
இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை எங்கே எப்படி கேட்பது என்று தெரியாத அப்பாவி மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.. அந்த துறை சார்ந்த மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கவனிப்பார்களாக.
வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விஷயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது.. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்.. இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு."
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவினை தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT