Published : 02 Jul 2020 03:06 PM
Last Updated : 02 Jul 2020 03:06 PM
தமிழ் மற்றும் தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் பிரபலமான நடிகை நவ்யா சுவாமிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் தொலைக்காட்சி படைப்புகளுக்கான படப்பிடிப்பை தெலங்கானா அரசு அனுமதித்தது. இந்நிலையில் தெலுங்குத் தொடர் ஒன்றில் நடித்து வந்த நடிகை நவ்யாவுக்கு ஒருசில நாட்கள் தலைவலி தொடர்ந்து இருந்ததால் மருத்துவரின் அறிவுரையின் பேரில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நவ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் கடந்த ஒரு வாரம் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமையில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். தனக்குத் தொற்று இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கூறும் நவ்யா, கடந்த ஒரு வாரம் தன்னை நேரில் சந்தித்த அனைவரையும் தனிமையில் இருக்கும்படி கோரியுள்ளார்.
மேலும் நவ்யா நடித்து வந்த தொடரின் படப்பிடிப்புக் குழு, சக நடிகர்கள் என அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசியுள்ள நவ்யா, "கரோனா இருப்பது தெரிந்த அன்று இரவு நான் அதிகம் அழுதேன். விடியும் வரை அழுதேன். என்னால் உறங்க முடியவில்லை. என் அம்மா இன்னும் அழுதுகொண்டிருக்கிறார். என் செல்போனில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. என் வாட்ஸ் அப் முழுவதும் அறிகுறிகள், சிகிச்சை குறித்து செய்திகள் எக்கச்சக்கமாகக் குவிந்துள்ளன. எல்லாம் குழப்பமாக உள்ளது. எனது சக நடிகர்கள், குழுவுக்குத் தேவையில்லாமல் பிரச்சினை தந்திருக்கிறேனா என குற்ற உணர்வாக உள்ளது" என்று நவ்யா கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள நவ்யா, இது உடல்ரீதியான போராட்டம் என்பதை விட மனரீதியான போராட்டமாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT