Published : 19 Jun 2020 06:01 PM
Last Updated : 19 Jun 2020 06:01 PM
வட இந்தியாவிலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகைகளில் ஒருவரும் கடந்த 12 ஆண்டுகளில் தமிழ். தெலுங்கு, இந்தி என 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டவரும் தற்போதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சில படங்களில் நடித்துவருபவருமான காஜல் அகர்வால் இன்று (ஜூன் 19) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இமயத்தின் கண்டுபிடிப்பு
மும்பையில் பிறந்தவரான காஜல், விவேக் ஓபராய்-ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2004-ல் வெளியான 'க்யூன் ஹோ கயா நா' என்னும் இந்திப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதுவே அவருடைய முதல் படம். அதன் பிறகு இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இயக்கத் திட்டமிட்ட 'பொம்மலாட்டம்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. அதற்கு முன்பாக தேஜா இயக்கத்தில் 2007இல் வெளியான 'லட்சுமி கல்யாணம்' காஜலை தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டது. 2008இல் 'பொம்மலாட்டம்' படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தப் படத்தில் அவர அர்ஜுனின் காதலியாக நானா படேகரின் உதவியாளராக நடித்திருந்தார். அதே ஆண்டு வெளியான வெங்கட் பிரபுவின் 'சரோஜா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கவனம் பெற்றுத்தந்த 'மாவீரன்'
பிரம்மாண்ட படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'மகதீரா' என்னும் தெலுங்கு வரலாற்றுப் புனைவுப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் காஜல். 2009-ல் வெளியான இந்தப் படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் தமிழ் டப்பிங் வடிவமான 'மாவீரன்' படமும் தமிழகத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கவனம் பெற்றார் காஜல்.
நிலைக்க வைத்த 'நான் மகான் அல்ல'
அதற்கு அடுத்த ஆண்டு சுசீந்திரன் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தியுடன் நாயகியாக நடித்திருந்தார். ஆக்ஷன். காமடி. சென்டிமென்ட், காதல் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. கார்த்தி-காஜல் இடையிலான காதல் காட்சிகள் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக அமைந்தது. ஒவ்வொரு காட்சியும் புத்துணர்வுடனும் இளமைத் துள்ளலுடனும் அனைத்து வயதினரும் ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்தது. காஜல் அழகாக இருந்ததோடு நடித்திருந்த விதமும் அனைவரையும் கவர்ந்தது. 'நான் மகான் அல்ல' படத்தின் மூலம் காஜல் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றார் என்று சொல்லலாம்.
நட்சத்திரமாக்கிய 'துப்பாக்கி'
அடுத்ததாக 'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் காஜல். ஷங்கருக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் மதிப்பைப் பெற்ற இயக்குநருடன் விஜய் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் 2012 தீபாவளிக்கு வெளியாகி எதிர்பார்த்ததைவிட வெகு சிறப்பாக இருந்ததால் மிகப் பெரிய வெற்றியையும் விடுமுறையில் வந்திருக்கும் ராணுவ வீரரான நாயகன் தீவிரவாதிகளை எதிர்த்து வெல்வது போன கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய்-காஜல் இடையிலான காதல் காட்சிகள் மிகப் பிரமாதமாக அமைந்திருந்தன.
முருகதாஸ் படங்களில் காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். அதுவும் அவற்றில் நாயகியின் பங்கு அதிகமாக இருக்கும். அசினுக்கு ஒரு 'கஜினி' என்றால் காஜல் அகர்வாலுக்கு 'துப்பாக்கி'. மாடர்ன் டிரஸ், சுடிதார், ஸ்போர்ட் டிரஸ் என அனைத்து காஸ்ட்யூம்களிலும் அம்சமாக இருந்தார். மிக அழகாக நடித்திருந்தார். விஜய், ஜெயராமுடன் காமெடியிலும் கலக்கியிருந்தார். 'துப்பாக்கி' என்றால் முருகதாஸ், விஜய் மட்டுமல்லாமல் காஜல் அகர்வாலும் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்தப் படத்தில் அவருடைய பங்களிப்பு அமைந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம் காஜலின் வணிக மதிப்பும் பன்மடங்கு உயர்ந்தது. அடுத்ததாக கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த 'அழகுராஜா' படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் அந்தப் படத்தில் காதல் மட்டுமல்லாமல் நகைச்சுவைக் காட்சிகளிலும் கலக்கியிருப்பார்.
மும்மொழி நட்சத்திரம்
இதே காலகட்டத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் 'பிசினஸ்மேன்', ஜூனியர் என்.டி.ஆர் உடன் 'பிருந்தாவனம்' என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருந்தார் காஜல். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் 'மாற்றான்' படத்தில் நடித்திருந்தார். 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடிசேர்ந்தார். தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் மூன்றாம் முறையாக 'மெர்சல்' என தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்துவிட்டார். தெலுங்கிலும் மகேஷ் பாபு, ஜூனியர் எண்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ரவிதேஜா என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துவருகிறார். இவற்றுக்கிடையே அக்ஷய் குமாருடன் 'ஸ்பெஷல் 26' உட்பட சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
இடையில் பல தோல்விப் படங்களால் சரிவுகளையும் எதிர்கொண்டார். டீகே இயக்கத்தில் ஜீவாவுடன் நடித்த 'கவலை வேண்டாம்' காஜல் அகர்வாலின் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்திருக்க வேண்டும். அடல்ட் காமெடி வகைமையில் கணவனிடமிருந்து பிரிந்த வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருக்கும் சற்றே முதிர்ச்சியான பெண்ணின் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் காஜல். ஏனோ அந்தப் படம் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை.
கடந்த ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் பிரம்மாண்ட வெற்றி காஜலின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக நடித்த காஜல் அழகு, கிளாமர், பாடல்களின் சிறப்பான நடனம், நாயகனுடன் நல்ல கெமிஸ்ட்ரி என வெகுஜனப் படங்களில் கதாநாயகியிடம் எதிர்பார்க்கப்படும் அனைத்து விஷயங்களிலும் ரசிக்கவைத்தார்.
மறக்க முடியாத காதல் பாடல்கள்
டூய்ட பாடல்கள் என்பவை தமிழ் வெகுஜன சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம். தோற்றம், முக பாவங்கள், நடனம், உடைகள், நாயகனுடன் கெமிஸ்ட்ரி என பல விஷயங்களில் ஒரு நாயகியால் டூயட் பாடல்களின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பு அளிக்க முடியும். அந்த வகையில் 'இறகைப் போலே' (நான் மகான் அல்ல), 'வெண்ணிலவே' (துப்பாக்கி), 'யாருக்கும் சொல்லாம' (அழகுராஜா), 'கண்டாங்கி கண்டாங்கி' (ஜில்லா), 'டானு டானு டானு' (மாரி), 'சிலுக்கு மரம்' (பாயும் புலி), 'காதலாட' (விவேகம்), 'மாச்சோ' (மெர்சல்), 'பைசா நோட்டு' (கோமாளி) என பல டூய்ட பாடல்களை எப்போது பார்த்தாலும் ரசிக்கத்தக்கவையாகவும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுபவையாகவும் ஆக்கியதில் காஜலுக்கு முக்கியப் பங்கு உண்டு.
என்றும் மாறாத இளமைத் தோற்றம்
அழகு, நவீன உடைகளுக்கும் கிளாமர் காட்சிகளுக்கும் பொருந்தும் உடல்வாகு ஆகியவற்றைப் பெற்றிருக்கும் காஜல் அவற்றை இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் தக்கவைத்திருக்கிறார். வயது ஏறினாலும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு 35 வயதாகிறது என்பதைத் தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடியாது. 25 வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். இது வெறும் அதிர்ஷ்டம் என்று ஒதுக்கிவிட முடியாது. தோற்றத்தை இளமைப் பொலிவுடன் தக்கவைப்பதற்கும் மிகப் பெரிய உழைப்பு தேவை என்பதை மறுத்துவிட முடியாது.
ஆனால் இவற்றைத் தாண்டி அவரிடம் நல்ல நடிப்புத் திறமையும் இருக்கிறது 'நான் மகான் அல்ல', 'துப்பாக்கி', 'கவலை வேண்டாம்' போன்ற படங்கள் அதற்குச் சான்றாக விளங்குகின்றன. கங்கணா ரணாவத் நடித்து வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 'குயின்' படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்துள்ளார் காஜல். திருமணம் தடைப்பட்டுவிட்ட ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்தப் படம் காஜலை ஒரு நடிகையாக முத்திரை பதிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதோடு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன் 2'வில் நடிப்பு மேதை கமல்ஹாசனுடன் முதல் முறையாக நடித்துவருகிறார் காஜல். இந்தப் படம் வெளியான பிறகு அவருடைய திரை வாழ்வில் இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்,
இன்றுபோல் என்றும் இளமையுடன் மகிழ்ச்சியுடனும் வாழவும் திரை வாழ்வில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் காஜல் அகர்வாலை மனதார வாழ்த்துவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT