Published : 19 Jun 2020 02:40 PM
Last Updated : 19 Jun 2020 02:40 PM
'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சச்சி பேட்டியொன்றில் தெரிவித்தார். அத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியவர் சச்சி. இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்தது. ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தார் சச்சி. அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு அவருடைய உடல்நிலையை மேலும் மோசமாக்கியது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த சச்சி, நேற்றிரவு (ஜூன் 18) சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு மலையாளத் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் இயக்குநர் சச்சி முன்னணி மலையாள இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் 'அய்யப்பனும் கோஷியுடம்' படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கு ரீமேக்குகள் குறித்துப் பேசினார்.
அதில் தமிழ் ரீமேக் குறித்து சச்சி கூறுகையில், "தமிழில் படம் எப்படி ரீமேக்காகவுள்ளது என்பதைக் காண ஆவலாகவுள்ளேன். ஏனென்றால் அங்கு பிரமாதமான நடிகர்கள் இருக்கிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் பார்த்துவிட்டு, தொலைபேசி வாயிலாகப் பாராட்டினார். தமிழ் ரீமேக்கில் கோஷி கதாபாத்திரத்தில் கார்த்தியும், அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும்.
பார்த்திபன் ஒரு சுவாரசியமான நடிகர். அவரது நடிப்பை சில காலங்களாகப் பின் தொடர்ந்து வருகிறேன். தமிழ் ரீமேக்கில் இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஆனால், தயாரிப்பு நிறுவனம்தான் பொருட்செலவு உள்ளிட்டவற்றை வைத்து முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தி ரீமேக்கில் பிஜு மேனன் கதாபாத்திரத்தில் நானா படேகரும், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரஹாம் அல்லது அபிஷேக் பச்சன் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் சச்சி. இதில் ஜான் ஆபிரஹாம்தான் 'அய்யப்பனும் கோஷியும்' இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT