Published : 18 Jun 2020 09:43 PM
Last Updated : 18 Jun 2020 09:43 PM
தனது மிகப்பெரிய வருத்தம் என்ன என்பதை மறைந்த அப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் டிடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி (டிடி). 'பவர் பாண்டி', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
காலில் அடிபட்டதால் வீட்டில் முழு ஓய்வில் இருக்கிறார் டிடி. இந்த கரோனா ஊரடங்கில் அமேசான் தொடர்பான நேரலைகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் டிடி கூறியிருப்பதாவது;
"அன்புள்ள அப்பா,
இன்றுடன் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து 15 வருடங்கள் கடந்து விட்டன. இன்று ஒரு மணி நேரம் நீங்கள் உயிருடன் மீண்டு வந்து உங்களின் இரண்டு மகள்களும், மகனும் எந்த நிலையில் இருக்கிறார்கள், நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த நெறிகளைக் கொண்டு நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம், அதை வைத்து எப்படி இந்த உலகத்துக்குப் பங்காற்றுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக ஆசைப்படுகிறேன்.
இந்த நாளில் உங்களிடம் தந்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி. எனது மிகப்பெரிய வருத்தம் குறித்தும் இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
இன்று நான் எவ்வளவு சம்பாதித்தாலும், உங்களுக்கு ஒரு சட்டை வாங்கித் தர முடியவில்லையே என்பதுதான் என் மிகப்பெரிய வருத்தம். ஏனென்றால் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்த காலகட்டத்தில் உங்களிடம் இரண்டே இரண்டு நல்ல சட்டைகள் தான் இருந்தன. ஆனால் அன்று எங்களுக்கு அது கூடத் தெரியாது.
இன்று நான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் உங்களுக்கு ஒரு சட்டை வாங்க இந்த உலகில் எதையும் விலையாகக் கொடுப்பேன். இந்த விதத்தில் நான் என் கடைசி மூச்சு வரை, ஏழையான / பாவப்பட்ட மகளாகவே இருப்பேன். நீங்கள் இல்லாத குறையை உணர்ந்தோம் அப்பா"
இவ்வாறு டிடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT